திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்
திருப்பதி : திருப்பதி அடுத்த திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் நாளை காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இரவு சிறிய சேஷ வாகனத்தில் பத்மாவதி தாயார் மாட வீதியுலா வருகிறார். 30ம் தேதி காலை பெரிய சேஷ வாகனத்திலும், இரவு அன்ன வாகனத்திலும், டிச.1ம் தேதி காலை முத்துப்பந்தல் வாகனத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும், 2ம் தேதி கல்ப விருட்ச வாகனத்திலும், இரவு அனுமந்த வாகனத்திலும், 3ம் தேதி காலை பல்லக்கு உற்சவமும், மாலை வசந்த உற்சவமும், இரவு பத்மாவதி தாயாருக்கு முக்கியமான சிறப்பு கஜ வாகன சேவையும் நடைபெற உள்ளது.
4ம் தேதி காலை சர்வ பூபால வாகனத்திலும், மாலை தங்க தேரோட்டமும், இரவு கருட சேவையும் நடைபெற உள்ளது. 5ம் தேதி காலை சூரிய பிரபை, இரவு சந்திர பிரபையும், 6ம் தேதி மகா தேரோட்டமும், இரவு அஸ்வ வாகனத்திலும் அருள்பாலிக்க உள்ளார். 7ம் தேதி காலை பல்லக்கில் பத்மாவதி தாயார், உற்சவமூர்த்திகள் மற்றும் சக்கரத்தாழ்வார் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். இதைத்தொடர்ந்து தீர்த்தவாரி நடைபெறும். அன்று மாலை கொடி இறக்கத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு இன்று காலை பத்மாவதி தாயாருக்கு 1 லட்ச குங்கும அர்ச்சனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலையில் அங்குரார்ப்பணம் நடக்கிறது.`