Thursday, August 30, 2012
ஓணம் பண்டிகையும் கொண்டாட்டமும்
கேரள மக்களினால் இன்று ஓணம் பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது.
சாதி, மத வேறுபாடின்றி அனைத்து மலையாளிகளாலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை, கேரளாவின் அறுவடை திருநாள் என அழைக்கிறார்கள். கொல்லவர்ஷம் எனும் மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாட்களாக இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் மிகப்பழம்பெரும் பண்டிகைகளில் ஒன்றாக இணங்காணப்பட்டுள்ள ஓணம் பண்டிகைக்கு கிட்டத்தட்ட ஓராயிரம் ஆண்டு கால வரலாறு உள்ளது.
அத்தம், சித்திரா, சுவாதி என தொடங்கும் 10 நாள் விழா, பத்தாம் நாள் திருவோணம் எனும் கொண்டாட்டத்துடன் முடிவடைகிறது. ஒவ்வொரு தினத்திற்கும் ஒவ்வொரு விசேஷம் இருக்கிறது. நான்காம் நாள், ஒன்பது சுவைகளில், ஓண சாத்யா எனும் உணவு தயார் செய்யப்படுகிறது.
அன்று புலிக்களி அல்லது கடுவக்களி என அழைக்கப்படும் புலி வேடமிட்ட நடனம் நடைபெறுகிறது. சிவப்பு, கருப்பு மற்றும் மஞ்ள் வண்ணத்தினால் புலி வேடமிட்டு நடனம் ஆடி மகிழ்கின்றனர்.
ஐந்தாம் நாள் கேரளாவின் பாரம்பரியமான படகு போட்டி நடத்தப்படுகிறது. தொடர்ந்து பத்து நாட்களும் கேரள வீட்டுப்பெண்கள் பூக்களினால் ஆன அத்தப்பூ எனும் கோலங்கள் இட்டு ஆடிப்பாடி மகிழ்கிறார்கள். 10ம் நாள் அதிகாலையிலேயே எழுந்து குளித்து வழிபாடு செய்து கசவு எனும்சொல்ல கூடிய சுத்தமான வெண்ணிற ஆடையை உடுத்துகின்றனர். அன்று சிறப்பு யானைத்திருவிழா நடைபெறுகிறது. யானைகளுக்கு விலை உயர்ந்த பொன் மற்றும் மணிகளால் ஆன தங்க கவசங்களாலும், பூ தோரணங்களாலும் அலங்கரித்து அணித்து வீதிகளில் ஊர்வலம் நடத்துகிறார்கள்.
சிவாலயமொன்றில் எரிந்து கொண்டிருந்த விளக்கின் திரியை தூண்டி பிரகாசமாக எரிய உபகாரம் செய்ததற்காக எலி ஒன்றுக்கு மூன்று லோகத்தையும் ஆட்சி செய்யும் அதிகாரத்தை சிவபெருமான் வழங்கியதாகவும், அந்த எலியானது மறுபிறப்பில் மகாபலி எனும் பெயருடன மாமன்னனாக பிறந்து கேரளத்தை சிறப்பாக ஆட்சி செய்து வந்ததாகவும் வரலாறு கூறுகிறது. அவரது ஆட்சிக்காலத்தில் மக்கள் மகிழ்ச்சியுடனேயே வாழ்ந்த போதும், அசுரகுலத்தின் அசுரவேக வளர்ச்சியை கண்ட தேவர்கள் மகாபலி மன்னனுடன் போரிட்டு தோல்வி அடைந்ததால், திருமாலிடம் அடைக்கலம் புகுந்தனர்.
மகாபலி மன்னர் ஒரு முறை வேள்வி செய்யும் போது திருமால் வாமணணாக (குள்ள உருவில்) உருவெடுத்து வந்து மூன்றடி மண் கேட்டார். ஒரு அடியால் இந்த பூமையும் மறு அடியால் விண்ணையும் அளந்த திருமாலுக்கு மூன்றாவது அடிக்காக தனது தலையை கொடுத்தான் பலி மகாராஜா. அவனுக்கு முக்தி அளிக்க வேண்டி அவன் தலையில் கால் வைத்து அவனை பாதாள உலகிற்கு தள்ளினார் திருமால்.
எனினும் தனது நாட்டு மக்கள் மிகுந்த அன்பு வைத்திருப்பதாலும், வருடம் ஒரு முறை பாதாளத்தில் இருந்து தனது நாட்டுக்கு வந்து மக்களை கண்டு மகிழும் வரம் வேண்டியதாலும் ஒவ்வொரு திருவோணத்திருநாள் அன்றும் மகாபலி பாதாள உலகில் இருந்து பூலோகத்திற்கு வந்து, தங்களது வீடுகளுக்கு வந்து செல்வதாக மக்கள் நம்புகின்றனர். முக்கியமாக ஓணம் பண்டிகை மகாபலி வதம் நடந்த இடமான திருக்காட்கரை காட்கரையப்பன் கோயிலில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
கேரளாவில் மட்டுமின்றி, மலையாள மொழி பேசும் மக்கள் அதிகமாக வாழும் தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், போன்ற அண்டை மாநிலகங்களிலும் ஓணம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஓணத்தையொட்டி கேரளாவை ஒட்டிய குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.
தகவல் உதவி : விக்கிபீடியா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment