அனுமான் காயத்ரி
ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
ராமதூதாய தீமஹி
தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத்
ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
வாயுபுத்ராய தீமஹி
தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத்
ஓம் ராமதூதாய வித்மஹே
அஞ்ஜனீ புத்ராய தீமஹி
தந்நோ மாருதி ப்ரசோதயாத்
ஸ்ரீராம ஜெயம்
யாராலும் சாதிக்க முடியாத காரியங்களையும் சாதிக்க வல்லவரான ராம தூதனே! கருணைக் கடலே! ப்ரபோ! என்னுடைய காரியங்களை எல்லாம் சாதித்துத் தருவீராக.
அனுமன் சாலீஸா
பாராயண முறை:
உடலைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, தூய ஆடை அணிந்து, தூய உள்ளத்துடன் ஆஞ்சநேயரைத் தியானிக்க வேண்டும். நெய் விளக்கேற்றி, தூபம் காட்டியபின் பதினொரு முறை இந்த நாற்பது துதிகளையும் அன்புடன் ஓத வேண்டும். நூறு முறை ஓதுவது சிறப்பு. ஒவ்வொரு முறை முடியும் போதும் ஆஞ்சநேயரின் திருப்பாதங்களில் மலர்களைச் சமர்ப்பிக்க வேண்டும். கோயிலிலோ, வீட்டின் தூய்மையான இடத்தில் ஆஞ்சநேயர் படத்தின் முன்னாலோ பாராயணம் செய்யலாம். செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் பாராயணம் செய்ய வேண்டும். பக்தியுடனும் அன்புடனும் ஹனுமன் சாலீஸா பாராயணம் செய்யப்பட்டால் நினைத்தது நடக்கும் என்பது பெரியோர் கூற்று. அவரது அருளால் எதுவும் நடக்கும் என்பதில் ஐயமில்லை.
ஸ்ரீகுரு சரண் ஸரோஜ்ரஜ் நிஜ மன முகுர ஸுதார் பரணோம் ரகுவர விமல யச ஜோ தாயக பலசார்
எனது மனம் என்னும் கண்ணாடியை ஸ்ரீ குருதேவரின் திருப்பாதத் தூசியால் தூய்மைப் படுத்திக் கொண்டு நான்கு கனிகளைத் தருகின்ற ரகுகுலதிலகமான ஸ்ரீராமனின் மாசற்ற தெய்வீகப் பெருமைகளை விளக்கத் தொடங்குகிறேன்.
நான்கு கனிகள்:
1. அறம்-நல்வழி 2.பொருள்-நல்வழியில் ஈட்டிய செல்வம் 3. இன்பம்-நல்வழியில் நிறைவேற்றப் பெறும் ஆசைகள் 4. வீடு-சம்சார வாழ்விலிருந்து விடுதலை.
புத்தி ஹீன தனு ஜானி கே, ஸுமிரௌ பவன குமார் பல புத்தி வித்யா தேஹு மோஹிம், ஹரஹு கலேச விகார்
எனது அறிவோ குறுகியது, வாயு மைந்தனான ஆஞ்சநேயா, உன்னைத் தியானிக்கிறேன், எனக்கு வலிமை, அறிவு, உண்மை ஞானம் எல்லாம் தருவாய். என்னைத் துன்பங்களிலிருந்தும் தவறுகளிலிருந்தும் விடுவிப்பாய்.
1. ஜய ஹனுமான் ஜ்ஞான குண ஸாகர ஜய கபீஸ திஹுலோக உஜாகர
ஆஞ்சநேயா, நீ கடலைப் போலப் பரந்த அறிவும் நற்குணங்களும் பொருந்தியவன், வானரர்களின் தலைவன் மூன்று உலகங்களையும் உணர்வுற்றெழச் செய்பவன். உனக்கு வெற்றி உண்டாகட்டும்.
2. ராமதூத அதுலித பலதாமா அஞ்ஜனி புத்ர பவன ஸுத நாமா
நீ ஸ்ரீராம தூதன், எல்லையற்ற ஆற்றலின் உறைவிடம், அஞ்ஜனையின் மைந்தன், வாயுபுத்திரன் என்னும் பெயர்பெற்றவன்.
3. மஹாவீர் விக்ரம பஜரங்கீ குமதி நிவார ஸுமதி கே ஸங்கீ
மிகுந்த ஆற்றல் வாய்ந்த உடலுடன் இணையற்ற வலிமை பொருந்திய வீரன் நீ. துய சிந்தனைகளை விரட்டுபவன் நீ. நல்லசிந்தனைகளின் நண்பன் நீ.
4. கஞ்சன பரண விராஜ ஸுவேசா கானன குண்டல குஞ்சித கேசா
பொன்னிறம் பொருந்தியவன் நீ, சிறந்த ஆடைகளை உடுத்தியுள்ளவன் நீ. ஒளி வீசுகின்ற குண்டலங்களையும் காதில் அணிந்துள்ளாய். உனது முடியோ அலையலையாக அழகாக உள்ளது.
5. ஹாத் வஜ்ர ஒள த்வஜா விராஜை காந்தே மூஞ்ஜ ஜனேவூ ஸாஜை
உனது கைகளை இடியும் கொடியும் அலங்கரிக்கின்றன. தோளையோ முஞ்ஜைப் புல்லாலான பூணூல் அணி செய்கிறது.
6. சங்கர ஸுவன கேசரீ நந்தன தேஜ ப்ரதாப மஹா ஜகவந்தன
நீ சிவபெருமானின் அவதாரம், கேசரியின் மகன், உனது தேஜசையும் வீரத்தையும் கண்டு உலகமே உன்னை வணங்குகிறது. அனுமனின் தந்தை கேசரி என்னும் வானரர் தலைவர். சிங்கத்தைப் போன்ற ஆற்றல் உடையவராக இருந்ததால் அவர் கேசரி என்னும் பெயர் பெற்றார். அனுமனின் தெய்வீகத் தந்தை வாயு பகவான்.
7. வித்யாவான் குணீ அதி சாதுர ராம காஜ கரிபே கோ ஆதுர
நீ அறிவாளி, நற்குணங்கள் நிரம்பப் பெற்றவன், மிகவும் கூரிய புத்தியை உடையவன், ஸ்ரீராமனின் பணிக்காக எப்போதும் மகிழ்ச்சியுடன் காத்திருப்பவன்.
8. ப்ரபு சரித்ர ஸுனிபே கோ ரஸியா ராம லக்ஷமண ஸுதா மன பஸியா
இறைவன் திருப்புகழையும் பெருமையையும் கேட்பதில் நீ எப்போதும் பரவசம் கொள்கிறாய். ஸ்ரீராமனும் லட்சுமணனும் சீதையும் உனது மனத்தில் குடியிருக்கின்றனர்.
9. ஸூக்ஷ்ம ரூபதரி ஸியஹிம் திக்காவா விகட ரூப தரி லங்க ஜராவா
நீ மிகவும் நுண்ணிய உருவில் சீதையின் முன் வெளிப்பட்டாய், மிகவும் பயங்கார உருக்கொண்டு இலங்கையைக் கொளுத்தினாய்.
10. பீம ரூபதரி அஸுர ஸம்ஹாரே ராமசந்த்ர கே காஜ் ஸவாரே
மிகவும் பெரிய உருவம் கொண்டு அரக்கர்களை அழித்து ஸ்ரீராம காரியத்தை நிறைவேற்றினாய்.
11. லாய ஸஜீவன் லஷன ஜியாயே ஸ்ரீ ரகுவீர ஹரஷி உர லாயே
சஞ்சீவினி மூலிகையைக் கொண்டு வந்து லட்சுமணனின் உயிரைக் காத்த போது ஸ்ரீராமன் உன்னை எத்தனை ஆனந்தத்துடன் தழுவிக் கொண்டார்!
12. ரகுபதி கீனி பஹுத் படாயீ தும் மம ப்ரிய ஹி பரதஸம பாயீ
ஸ்ரீராமன் உனது பெருமைகளை மிகவும் புகழ்ந்து, நீயும் பரதனைப் போலவே தமக்குப் பிரியமானவன் என்று கூறியருளினார்.
13. ஸஹஸ வதன தும்ஹரோ யச காவைம் அஸ கஹி ஸ்ரீபதி கண்ட லகாவைம்
ஆயிரம் தலைகள் கொண்ட ஆதிசேஷன் கூட உனது பெருமைகளைப் புகழ்வதாக ஸ்ரீராமன் உன்னை அணைத்தபடியே கூறினார்.
14. ஸனகாதிக ப்ரஹ்மாதி முனீசா நாரத சாரத ஸஹித அஹீசா
ஸனகர் முதலான முனிவர்கள், பிரம்மா போன்ற தேவர்கள், சிவபெருமான், நாரதர், கலைமகள், ஆதிசேஷன் .
15. யம குபேர திகபால ஜஹாம் தே கவி கோவித கஹி ஸகைம் கஹாம் தே
எமன், குபேரன், திரைக் காவலர்கள், கவிஞர்கள், புலவர்கள், எல்லோரும் உனது பெருமைகளை விளக்க முயன்று தோல்வியே கண்டார்கள்.
16. தும் உபகார ஸுக்ரீ வஹிம் கீன்ஹா ராம மிலாய ராஜபத தீன்ஹா
ஸ்ரீராமனிடம் அறிமுகப்படுத்தி, சொந்த அரசை மீட்டுக்கொடுத்ததன் மூலம் நீ சுக்ரீவனுக்கு ஓர் இணையற்ற உதவியைச் செய்து விட்டாய்.
17. தும்ஹரோ மந்த்ர விபீஷண மானா லங்கேச்வர பயே ஸப் ஜக ஜானா
உனது அறிவுரைகளின்படி நடந்ததாலேயே விபீஷணன் இலங்கை அரசனானான் என்பது உலகம் முழுவதும் தெரிந்த விஷயம்.
18. யுக ஸஹஸ்ர யோஜன பர பானூ லீல்யோ தாஹி மதுர பல ஜானூ
பதினாறாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்த சூரியனை, கனியென எண்ணி நீ விழுங்கிவிட்டாய்.
19. ப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீம் ஜலதி லாந்தி கயே அசரஜ் நாஹீம்
ஸ்ரீராமனின் முத்திரை மோதிரத்தை வாயில் தங்கியபடியே நீ கடலைக் கடந்துவிட்டாய். (உனது அளப்பரிய ஆற்றல்களைக் கணக்கிடும் போது) இது ஒன்றும் வியப்பிற்குரியதல்ல.
20. துர்கம காஜ் ஜகத் கே ஜேதே ஸுகம அனுக்ரஹ தும்ஹரே தேதே
எத்தனைக் கடினமான செயலும் உனதருளால் எளிதல் நிறைவேறிவிடும்.
21. ராம துவாரே தும் ரக்வாரே ஹோத ந ஆஜ்ஞா பின பைஸாரே
ஸ்ரீராம ராஜ்யத்தின் வாயிற் காவலன் நீ. உனது அனுமதியின்றி அங்கு யாரும் நுழைய முடியாது.
22. ஸப் ஸுக லஹை தும்ஹாரீ ஸரனா தும் ரக்ஷக காஹூ கோ டர்னா
உன்னைச் சரணடைபவர்கள் எல்லா இன்பங்களையும் பெறுகின்றார்கள். நீ பாதுகாவலனாக இருக்கும் போது எதற்காகப் பயப்பட வேண்டும்
23. ஆபன் தேஜ் ஸம்ஹாரௌ ஆபை தீனோம் லோக ஹாங்க்தே காம்பை
உனது ஆற்றலைக் கட்டுபடுத்த உன்னால் மட்டுமே முடியும். உனது ஆற்றலின் முன் மூன்று உலகங்களும் நடுங்குகின்றன.
24. பூத பிசாச நிகட நஹிம் ஆவை மஹாவீர ஜப் நாம ஸுனாவை
மகாவீரன் என்னும் உனது திருநாமத்தை இடைவிடாது கூறினால் நோய் அகல்கிறது, துன்பம் விலகுகிறது.
25. நாசை ரோக் ஹரை ஸப் பீரா ஜபத நிரந்தர ஹனுமத் வீரா
உனது ஆற்றல் மிக்கத் திருநாமத்தை இடைவிடாது கூறினால் நோய் அகல்கிறது துன்பம் விலகுகின்றது. மனோ தைரியம் உண்டாகின்றது.
26. ஸங்கட ஸே ஹனுமான் சோடாவை மன க்ரம வசனத்யான ஜோ லாவை
மனம், வாக்கு, செயலால் அனுமனைத் தியானிக்கும் ஒருவனை, அவர் எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுவிக்கிறார்.
27. ஸப் பர் ராம் தபஸ்வீ ராஜா தின்கே காஜ் ஸகல தும் ஸாஜா
தவம் புரிகின்ற பக்தர்களின் மேலான ஆசைகளை நிறைவேற்றுகின்ற ஸ்ரீராமனின் பணிகளை நீ நிறைவேற்றினாய்.
28. ஒளர் மனோரத ஜோ கோயி லாவை தாஸு அமித ஜீவன் பல பாவை
மேலும் பக்தனின் ஆசைகளை நிறைவேறுவதுடன் அவன் அழியாக்கனியாகிய இறையனுபூபதியையும் பெறுகிறான்.
29. சாரஹு யுக பரதாப தும்ஹாரா ஹை பரஸித்த ஜகத உஜியாரா
சத்திய, திரேதா, துவாபர, கலி என்னும் நான்கு யுகங்களிலும் உனது பெருமை போற்றப்படுகிறது. உனது திருநாமம் உலகம் முழுவதும் சிறக்கிறது.
30. ஸாது ஸந்த கே தும் ரக்வாரே அஸுர நிகந்தன ராம துலாரே
நல்லோரையும் ஞானியரையும் நீயே காக்கிறாய். ஸ்ரீராமனின் மனத்துக்கு உகந்தவனான நீயே தீய சக்திகளை அழிக்கிறாய்.
31. அஷ்ட ஸித்தி நவ நிதி கே தாதா அஸ் வர தீன் ஜானகீ மாதா
எட்டுவித சித்திகளையும் ஒன்பதுவிதச் செல்வங்களையும் கேட்பவருக்கு அளிக்கம் ஆற்றலை சீதா தேவி உனக்கு அருளினாள்.
எட்டுவித சித்திகள்:
1. அணிமா-அணு போலாதல் 2. மஹிமா-எல்லையற்று எடை உடையவராதல் 3. கரிமா-எல்லையற்ற எடை உடையவராதல் 4. லகிமா-எடையே இல்லாது போலாதல் 5. ப்ராப்தி-நினைத்த இடத்திற்குச் செல்ல முடிதல் 6. ப்ரகாம்யம்-விரும்பியது கைகூடல் 7. ஈசித்வம்-இறைவனைப் போலாதல் 8. வசித்வம்-அனைவரையும் அடக்கி ஆளுதல்
ஒன்பது விதச் செல்வங்கள் ஒன்பது வகை பக்தியைக் குறிக்கிறது.
32. ராம் ரஸாயள தும்ஹரே பாஸா ஸதா ரஹெள ரகுபதி கே தாஸா
ஸ்ரீராம பக்தி என்பதன் சாரமே உன்னிடம் உள்ளது. எப்போதும் நீ அவரது சேவகனாகவே இருப்பாய்.
33. தும்ஹரே பஜன் ராம்கோ பாவை ஜன்ம ஜன்ம கே துக்க பிஸராவை
உன்னிடம் பக்தி கொள்வதால் ஒருவன் ஸ்ரீராமனை அடைகிறான். எத்தனையோ பிறவிகளில் தொடர்ந்து வந்த துன்பங்கள் அவனை விட்டு அகல்கின்றன.
34. அந்த கால ரகுபதி புர ஜாயீ ஜஹாம் ஜன்மி ஹரிபக்த கஹாயீ
அவன் தன் வாழ்வின் முடிவில் ஸ்ரீராமனின் உறைவிடம் செல்கிறான். அங்கு அவன் ஹரி பக்தனாக மதிக்கப்படுகிறான்.
35. ஒளர் தேவதா சித்த ந தரயீ ஹனுமத் ஸேயி ஸர்வ ஸுக கரயீ
அனுமனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்திடமும் மனத்தைச் செலுத்தாத ஒருவனுக்கும் எல்லா இன்பங்களும் நிறைகின்றன.
36. ஸங்கட ஹரை மிடை ஸப் பீரா ஜோ ஸுமிரை ஹனுமத பல பீரா
எல்லாம் வல்ல ஆஞ்சநேயரை நினைப்பவரின் துன்பங்களும் துயரங்களும் விலகி ஓடுகின்றன.
37. ஜய் ஜய் ஜய் ஹனுமான் கோஸாயீ க்ருபா கரஹு குருதேவ கீ நாயீ
ஓ ஆஞ்சநேயா, உனக்கு வெற்றி, வெற்றி, வெற்றி உண்டாகட்டும். ஓ பரம குருவே, எங்களுக்கு அருள்புரிவீர்களாக.
38. ஜோ சத பார் பாட கர ஜோயீ சூடஹி பந்தி மஹாஸுக ஹோயீ
இந்தத் துதிகளை நூறு முறை பக்தியுடன் படிப்பவர்களுக்கு உலகத்தளைகள் எல்லாம் நீங்கப் பெற்று பரமானந்தத்தை அனுபவிக்கின்றனர்.
39. ஜோ யஹ் படை ஹனுமான் சாலீஸா ஹோய் ஸித்தி ஸாகீ கௌரீஸா
இந்த ஹனுமான் சாலீஸாவைப் படிப்பவர்களுக்கு சிவபெருமான் அருள் புரிகிறார் அவன் பரிபூரண நிலையை அடைகின்றனர்.
40. துளஸீதாஸ ஸதா ஹரி சேரா கீஜை நாத ஹ்ருதய மஹ டேரா
என்றென்றும் தம் இதயத்தில் இறைவன் எழுந்தருளி வாழட்டும் என்று அவரது நித்திய சேவகனான துளஸுதாசன் பிரார்த்திக்கிறான்.
பவன தனய ஸங்கட ஹரன், மங்கள மூரதி ரூப ராமலஷமன் ஸீதா ஸஹித ஹ்ருதய பஸஹு ஸுரபூப
துன்பங்களைப் போக்குபவனுக்கு மங்கள உருவினனும் தேவர்களின் தலைவனும் வாயு மைந்தனும் ஆகிய ஸ்ரீ ஆஞ்சநேயர் எனது இதயத்தில் ஸ்ரீராம லட்சுமண சீதையுடன் நிலவட்டும்.
நன்றி: ஸ்ரீ வன்னி விநாயகர் புத்தக நிலையம், மீனாட்சி அம்மன் கோயில், மதுரை.
No comments:
Post a Comment