வழிபாடு
வாக்கு உண்டாம்: நல்ல மணமுண்டாம்: மாமலரரள்
நோக்கு உண்டாம்: மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.
பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்-கோலம்செய்
துங்கக் கரி முகத்துத் தூமணியே! நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.
ஐந்து கரத்தனை ஆனைமுகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.
விநாயகனே வெவ்வினையை வேர் அறுக்க வல்லான்:
விநாயகனே வேட்கை தணிவிப்பான்;-விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணில் பணியின் கனிந்து
பிடி அதன் உரு உமை கௌமிகு கரியது
வடிகொடு தனது அடி வழிபடும் அவர் இடர்
கடிகணபதி வர அருளினன் மிகு கொடை
வடிவினர் பயில் வலி வலமுறை இறையே.
திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மனி யாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவோம்.
விநாயகர் அகவல்
சீதக் களபச் செந்தாமரைப் பூம்
பாதச் சிலம்பு பல இசை பாடப்
பொன் அரை ஞானும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்து அழகு எறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும் மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்கு பொன் முடியும்
திரண்ட முப்புரிநூல் திகழ் ஒளி மார்பும்
சொற்பதம் கடந்து துரிய மெய்ஞ்ஞான
அற்புதன் ஈன்ற கற்பகக் களிறே!
முப்பழம் நுகரும் மூஷிக வாகன!
இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித்
தாயாய் எனக்குத்தான் எழுந்து அருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்தே
திருந்திய முதல் ஐந்து எழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்து என் உளந்தனில் புகுந்து
குரு வடிவாகிக் குவலம் தன்னில்
திருவடி வைத்துத் திறம் இது பொருள் என
வாடா வகைதான் மகிழ்ந்து எனக்கு அருளிக்
கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிது எனக்கு அருளிக்
கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து
இருவினை தன்னை அறுத்து இருள் கடிந்து
தலம் ஒரு நான்கும் தந்து எனக்கு அருளி
மலம் ஒரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறாதாரத்து அங்கிசை நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே
இடை பிங்கலையின் எழுத்து அறிவித்துக்
கடையில் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்று எழு பாம்பின் நாவில் உணர்த்திக்
குண்டலி அதனில் கூடிய அசபை
விண்டு எழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டு எழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல் சக்கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண்முகம் ஆக இனிது எனக்கு அருளிப்
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிது எனக்கு அருளி
என்னை அறிவித்து எனக்கு அருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்தன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரண்டிற்கும் ஒன்று இடம் என்ன
அருள் தரும் ஆனந்தத்து அழுத்தி என் செவியில்
எல்லையில்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் கட்டி
அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடு மெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும் பொருள் தன்னை
நெஞ்சக் கரத்தின் நிலை அறிவித்துத்
தத்துவ நிலையைத் தந்து எனை ஆண்ட
வித்தக விநாயக விரை கழல் சரணே!
விநாயகர் ஸப்தகம்
குருவே பரமன் கொழுந்தே பணிந்தேன்
குவலயம் போற்றும் கண நாதா!
வருவாய் நினைவில் வந்தெனை ஆள்வாய்
வடிவேலனின் சோதரனே!
அருள்வாய்! உனையே அனுதினம் பணிவேன்
அன்னை பராசக்தி அருள்மகனே!
திருமால் மருகா! திருவடி சரணம்!
தீன ரக்ஷகனே கணநாதா
ஆனையின் அன்பன் அழகு முருகனின்
அண்ணனாய் உலகில் அவதரித்தாய்
ஆனாமுகத்தோடு ஐங்கரங்கொண்டதோர்
அற்புதவடிவே! கணநாதா!
யானென தென்னும் எண்ணங்கள் நீங்கி
இகபரசுகமதை எனக்களிப்பாய்!
யானுனை என்றும் இராப்பகல் தொழுதேன்!
என்துயர் களைவாய்! கணநாதா!
குஞ்சரனே எழிற் குஞ்சரிநாதனாம்
குகசரவணபவ சோதரனே!
வெஞ்சமரெதிலும் வெற்றியே தருவாய்!
வேழமுகத்தோய் கணநாதா!
அஞ்சிடும் அன்பருக் கபயம் அளிப்பாய்!
அரவணைத் தெனையும் ஆண்டருள்வாய்!
பஞ்சமி!பைரவி!பார்வத புத்திரி!
பார்வதி மைந்தா! கணநாதா!
வல்லபை நாதா! விக்ன வினாயகா
வாழ்த்திப் பணிந்தேன் உன்பதமே:
வல்வினை எல்லாம் வலிமை இழந்தே
வாடிடச் செய்வாய் கணநாதா!
தொல்வினை யாலிவன் துயருறும் அடியேன்
துன்பமெலாம் நீ துடைத்திடுவாய்!
அல்லொடு பகலும் அனவரதமும் உன்
அடியினை தொழுவேன் கணநாதா!
வானொடு நீரும் வளியும் தீயும்
வையகம் யாவும் உன் வடிவே!
மானிட வாழ்வை மகிழ்வுறச் செய்வாய்
மங்கலப் பொருளே கணநாதா
தேனோடு பாலும் தெங்கோடு பழமும்
தெவிட்டா அமுதம் தினம் படைப்பேன்
ஊனொடு உயிரும் உணர்வும் புரப்பாய்!
உன்னடி தொழுதேன் கணநாதா!
ஓமெனும் வடிவே உன் வடிவாமென
உலகிற்கெல்லாம் நீ உணர்த்திடுவாய்!
ஆம் எனச் சொல்வாய்!அன்னை குமாரா
ஆதரித்தருள் வாய்! கணநாதா!
ஓமெனும் ஒலியில் உன்குரல் கேட்டே
உளமகிழ்ந்துள்ள புகழ் பாடிடுவேன்
ஓமெனும் பொருளே உமையவள் பாலா!
ஒரு பரம் பொருளே! கணநாதா
சங்கரன் மகனே! சஞ்சலம் தீர்ப்பாய்
சக்தி குமாரா! கணநாதா!
ஐங்கரனே! உன் அடியினை தொழுதேன்
அடைக்கலம் நீயே கணநாதா!
சங்கரித்திடுவாய் சங்கடமெல்லாம்
சம்புகுமாரா! கணநாதா!
சங்கரி மைந்தா! சந்ததம் பணிவேன்
சரணம்! சரணம்! கணநாதா!
விநாயகர் கவசம்
வளர்சிகையைப் பராபரமாய் வயங்கு விநாயகர் காக்க;
வாய்ந்த சென்னி அளவுபடா அதிக சவுந்தர தேக
மதோற்கடர்தாம் அமர்ந்து காக்க;
விளரற நெற்றியை என்றும்விளங்கிய காசிபர்காக்க;
புருவந்தம்மைத் தளர்வில் மகோதரர்காக்க;
தடவிழிகள் பாலசந்திரனார் காக்க;
கவின்வளரும் அதரம் கசமுகர்காக்க:
தால்அங்கணக்டரீடர் காக்க;
நவில்சி புகம் கிரிசைசுதர் காக்க;
தனி வாக்கை விநாயகர்தாம் காக்க;
அவிர்நகை துன்முகர்காக்க;
அள்எழிற்செஞ்செவி பாசபாணி காக்க;
தவிர்தலுரு திளங்கொடி போல்வளர்மணி நாசியைச் சிந்திதார்த்தர் காக்க;
காமரு பூமுகந்தன்னைக் குணேசர் நனிக்காக்க;
களம் கணேசர் காக்க;
வாமமுறும் இருதோளும் வயங்குகந்த பூர்வசர்தாம் மகிழ்ந்து காக்க;
ஏமமுறு மணிமலை விக்கின விநாசன் காக்க;
இதயந்தன்னைத்தோமகலுங் கணநாதர் காக்க;
அகட்டினைத் துலங்(கு) ஏரம்பர் காக்க;
பக்கம்இரண்டையும் தராதரர் காக்க;
பிருட்டத்தைப் பாவம் நீக்கும் விக்கினகரன் காக்க;
விளங்கிலிங்கம் வியாள பூடணர்தாம் காக்க;
தக்கருய்யந் தன்னை வக்கிரதுண்டர் காக்க;
கச்சனத்தை அல்லல் உக்க கணபன் காக்க;
ஊருவை மங்களமூர்த்தி உவந்து காக்க;
தாழ்முழந்தாள் மகாபுத்தி காக்க;
இரு பதம் ஏகதந்தர் காக்க;
வாழ்கரம் கப்பிரப்பிரசாதனர் காக்க;
முன்கையை வணங்குவார்நோய் ஆழ் தரச்செய் ஆசாபூரகக் காக்க;
விரல் பதுமத்தர் காக்க;
கேழ்கிளரும் நகங்கள் விநாயகர் காக்க;
கிழக்கினிற் புத்தீசர் காக்க;
அக்கினியிற் சித்தீசர் காக்க;
உமாபுத்தரிரர்தென் ஆசை காக்க;
மிக்க நிருதியிற் கணேசுரர்காக்க;
விக்கினவர்த் தனர்மேற் கென்னுந் திக்கதனிர் காக்க;
வாயுவிற் கசகன்னர் காக்க;
திகழ்உ தீசி தக்க நிதிபன்காக்க;
வடகிழக்கில் ஈசநந்தனரே காக்க;
ஏகதந்நர் பகல்முழுதுங் காக்க;
இரவினும் சந்தி இரண்டன் மாட்டும் ஓகையின் விக்கினகிருது காக்க;
இராக்கதர் பூதம் உறுவே தாளம் மோகினிபேய் இவையாதி
உயிர்திறத்தால் வருந்துயரும் முடிவில்லாத வேகமுறு பிணிபலவும்
விலக்கு புயாசாங்குசர் தாம் விரைந்து காக்க;
மதி, ஞானம், தவம், தானம், மானம் ஒளி, புகழ், குலம், வண்சரீரம் முற்றும்;
பதிவான தனம், தானியம், கிருகம், மனைவி, மைந்தர்,
பயில்நட் பாதிக கதியாவும் கலந்து சர்வாயுதர் காக்க;
காமர் பவித்திரர் முன்னான விதியாரும் சுற்றமெலாம் மயூரேசர்
எஞ்ஞான்றும் விரும்பிக் காக்க;
வென்றி சீவிதம் பகபிலர் காக்க;
கரியாதியெலாம் விகடர் காக்க;
என்றிவ்வாறிது தனை முக்காலமும் ஓதிடின்; நும்பால் இடையூறொன்றும்
ஒன்றுமுறா; முனிவர்காள்; அறிமின்கள்; யாரொருவர் ஓதினாலும்
மன்றஆங்கவர்தேகம் பிணியறவச் சிரதேக மாகி மன்னும்.
பக்தியுடனே இந்தக் கவசத்தைப் பாராயணஞ் செய்பவர்களுக்குப் பிணியும், வறுமையும், பேய் பூதங்களாலுண்டாகின்ற பல துன்பங்களும், கவலைகளும், பாபம் முதலியவைகளும் நீங்கும். பெருஞ்செல்வமும், தீர்க்காயுளும், களத்திர புத்திரமித்ராதிகளும் உண்டாகும். இதைப் படித்தாலும், ஒருவர் சொல்லக் கேட்டாலும், பூசித்தாலும், எப்படிப்பட்ட துன்பமும் நீங்கும்.
விநாயகர் போற்றி
ஓம் எனும் பொருளாய் உள்ளாய் போற்றி
ஓம் பூமனும் பொருள்தொறும் பொலிவாய் போற்றி
ஓம் அகரம் முதலென ஆனாய் போற்றி
ஓம் அகர உகர ஆதி போற்றி
ஓம் மகாரமாய் நின்ற வானவ போற்றி
ஓம் பகர் முன்னவனாம் பரனே போற்றி
ஓம் மண்ணாய் விண்ணாய் மலர்ந்தாய் போற்றி
ஓம் கண்ணுள் மணியாய்க் கலந்தாய் போற்றி
ஓம் நீர்தீக் காற்றாய் நின்றாய் போற்றி
ஓம் கார்குளிராகக் கனிந்தாய் போற்றி
ஓம் பகலன் நிலவாய்ப் பரந்தாய் போற்றி
ஓம் நிகர்மீன் கணமாய் நிலைத்தாய் போற்றி
ஓம் மழைபொழி இமய வல்லிசேய் போற்றி
ஓம் தழைசெவி எண்தோள் தலைவ போற்றி
ஓம் திங்கட் சடையோன் செல்வ போற்றி
ஓம் எங்கட் கருளும் இறைவா போற்றி
ஓம் அறுமுகச் செவ்வேட்கு அண்ணா போற்றி
ஓம் சிறுகண் களிற்றுத் திருமுருக போற்றி
ஓம் செம்போன் மேனிச் செம்மால் போற்றி
ஓம் உம்பர் போற்றும் உம்பல் போற்றி
ஓம் பண்ணியம் ஏந்துகைப் பண்ணவ போற்றி
ஓம் எண்ணிய எண்ணியாங் கிசைப்பாய் போற்றி
ஓம் அப்பமும் அவலும் கப்புவாய் போற்றி
ஓம் முப்புரி நூல் மார்பு அப்பா போற்றி
ஓம் எள்ளுருண்டை பொரி ஏற்பாய் போற்றி
ஓம் தெள்ளுறு தெவிட்டாத் தேனே போற்றி
ஓம் மூவர் மொழியிடம் மொழிந்தாய் போற்றி
ஓம் தேவர்க் கரிய தேவா போற்றி
ஓம் மாலுக் கரிய மதகரி போற்றி
ஓம் பாலெனக் கடல்நீர் பருகினாய் போற்றி
ஓம் பாரதம் எழுதிய பண்பே போற்றி
ஓம் மாரதம் அச்சோடி மதவலி போற்றி
ஓம் மாங்கனி அரன்பால் வாங்கினோய் போற்றி
ஓம் ஈங்கினி எம்பால் எழுந்தருள் போற்றி
ஓம் கரும்பாயிரங்கொள் கள்வா போற்றி
ஓம் அரும் போருளேயெம் ஐயா! போற்றி
ஓம் திணைபால் கடந்த தேவே போற்றி
ஓம் புணையாய் இடர்க்கடல் போக்குவோய் போற்றி
ஓம் பேழை வயிற்றுப் பெம்மான் போற்றி
ஓம் ஏழைக் கிரங்கும் எம்மிறை போற்றி
ஓம் அடியவர் உள்ளம் அமர்ந்தாய் போற்றி
ஓம் அடிமலர் எம்தலை அணிவாய் போற்றி
ஓம் திருநீற் றொளிசேர் செம்மால் போற்றி
ஓம் இரு வேறுருவ ஈசா போற்றி
ஓம் உள்ளத்திருளை ஒழிப்பாய் போற்றி
ஓம் கள்ளப் புலனைக் கரைப்பாய் போற்றி
ஓம் நம்பியாண்டார்க்கருள் நல்லாய் போற்றி
ஓம் எம்பிரானாக இசைந்தாய் போற்றி
ஓம் உருகு வோருள்ளத் தொளியே போற்றி
ஓம் பெருகருள் சுரக்கும் பெருமான் போற்றி
ஓம் தம்பிக்கு வள்ளியைத் தந்தாய் போற்றி
ஓம் உம்பர் கட்கரசே ஒருவ போற்றி
ஓம் பிள்ளையார் பெயர் கொண்டுள்ளாய் போற்றி
ஓம் வள்ளலாய் நலங்கள் வழங்குவாய் போற்றி
ஓம் மூவாச் சாவா முத்தா போற்றி
ஓம் ஆவா எங்களுக் கருள்வாய் போற்றி
ஓம் தமிழ்ச்சுவை சார்திருச் செவியாய் போற்றி
ஓம் அமிழ்தாய் எம்மகத் தானாய் போற்றி
ஓம் மழவிளங் களிறே மணியே போற்றி
ஓம் குழவியாய்ச் சிவன்மடி குலவுவோய் போற்றி
ஓம் பெருச் சாளியூரும் பிரானே போற்றி
ஓம் நரிச்செயலார் பால் நண்ணாய் போற்றி
ஓம் செந்தாமரைத்தாள் தேவா போற்றி
ஓம் நந்தா மணியே நாயக போற்றி
ஓம் இருள்சேர் இருவினை எறிவாய் போற்றி
ஓம் கரிமுகத் தெந்தாய் காப்பாய் போற்றி
ஓம் ஆங்காரம் முளை அறுப்பாய் போற்றி
ஓம் பாங்கார் இன்பப் பராபர போற்றி
ஓம் கற்றவர் விழுங்கும் கனியே போற்றி
ஓம் மற்றவர் காணா மலையே போற்றி
ஓம் சொல்லோடு பொருளின் தொடர்பே போற்றி
ஓம் கல்லும் கரைக்க வல்லோய் போற்றி
ஓம் தொந்தி வயிற்றுத் தந்தி போற்றி
ஓம் முந்திய பொருட்கு முந்தியோய் போற்றி
ஓம் ஐந்து கையுடைய ஐய போற்றி
ஓம் ஐந்தொழில் ஆற்றும் அமர போற்றி
ஓம் அருள்வாய் அருள்வாய் ஆண்டவ போற்றி
ஓம் தருவாய் மணமலர்த் தாராய் போற்றி
ஓம் கயமுக அசுரனைக் காய்ந்தாய் போற்றி
ஓம் மயலறும் இன்ப வாழ்வே போற்றி
ஓம் ஆணையாய்ப் புழுவாய் ஆனாய் போற்றி
ஓம் பானை வயிற்றுப் பரமே போற்றி
ஓம் கடம்பொழி யானைக் கன்றே போற்றி
ஓம் மடம்ஒழி அறிவின் அமுதே போற்றி
ஓம் பாலொடு தேனும் பருகுவாய் போற்றி
ஓம் மேலொடு கீழாய் மிளிர்வோய் போற்றி
ஓம் எய்ப்பில் வைப்பாய் இருந்தோய் போற்றி
ஓம் மெய்ப் பொருள்வேழ முகத்தாய் போற்றி
ஓம் நல்லார்க் கெட்டும் நாதா போற்றி
ஓம் பொல்லா மணியே புராதன போற்றி
ஓம் அறிவின் வரம்பை அகன்றாய் போற்றி
ஓம் குறிகுணங் கடந்த குன்றே போற்றி
ஓம் எட்டுவான் குணத் தெந்தாய் போற்றி
ஓம் கட்டறு களிற்று முகத்தோய் போற்றி
ஓம் மலரில் மணமாய் வளர்ந்தாய் போற்றி
ஓம் அலர்கதிர் ஒளியின் அமர்வோய் போற்றி
ஓங்காரம் முகத் தொருத்தல் போற்றி
ஏங்கா துயிர்க்கருள் இயற்கை போற்றி
எண்ணும் எழுத்துமாய் இசைந்தாய் போற்றி
பண்ணும் பயனுமாய்ப் பரந்தாய் போற்றி
ஓம் அருவே உருவே அருவுரு போற்றி
ஓம் பொருளே பொருளின் புணர்ப்பே போற்றி
ஓம் புகர்முகக் களிற்றுப் புண்ணிய போற்றி
ஓம் அகலிடம் நிறைய அமர்ந்தோய் போற்றி
ஓம் செல்வம் அருள்க தேவா போற்றி
ஓம் நல்லன எமக்கருள் நாயக போற்றி
ஓம் ஆக்கமும் ஊக்கமும் அருள்வாய் போற்றி
ஓம் காக்க எங்கையுன் கழலினை போற்றி
விநாயகர் போற்றி - 1
ஓம் விநாயகனே போற்றி
ஓம் வினைகள் தீர்ப்பவனே போற்றி
ஓம் அரசமரத்தடி அமர்ந்தவனே போற்றி
ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி
ஓம் அறுகினில் மகிழ்பவனே போற்றி
ஓம் அச்சம் தவிப்பவனே போற்றி
ஓம் ஆனை முகத்தோனே போற்றி
ஓம் ஆறுமுகன் சோதரனே போற்றி
ஓம் ஆதி மூலமே போற்றி
ஓம் ஆனந்த உருவே போற்றி
ஓம் இமவான் சந்ததியே போற்றி
ஓம் இடரைக் களைவோனே போற்றி
ஓம் ஈசன் மகனே போற்றி
ஓம் ஈகை <உருவே போற்றி
ஓம் உண்மை வடிவே போற்றி
ஓம் உலக நாயகனே போற்றி
ஓம் ஊறும் களிப்பே போற்றி
ஓம் ஊழ்வினை அறுப்பவனே போற்றி
ஓம் எளியவனே போற்றி
ஓம் எந்தையே போற்றி
ஓம் எங்குமிருப்பவனே போற்றி
ஓம் எருக்கு அணிந்தவனே போற்றி
ஓம் ஏழை பங்காளனே போற்றி
ஓம் ஏற்றம் அளிப்பவனே போற்றி
ஓம் ஐயனே போற்றி
ஓம் ஐங்கரனே போற்றி
ஓம் ஒப்பிலாதவனே போற்றி
ஓம் ஒதுக்க முடியாதவனே போற்றி
ஓம் ஒளிமய உருவே போற்றி
ஓம் ஒளவைக்கருளியவனே போற்றி
ஓம் கருணாகரனே போற்றி
ஓம் கரணத்தில் மகிழ்பவனே போற்றி
ஓம் கணேசனே போற்றி
ஓம் கணநாயகனே போற்றி
ஓம் கண்ணிற்படுபவனே போற்றி
ஓம் கலியுக நாதனே போற்றி
ஓம் கற்பகத்தருவே போற்றி
ஓம் கந்தனுக்குதவியவனே போற்றி
ஓம் கிருபாநிதியே போற்றி
ஓம் கீர்த்தி அளிப்பவனே போற்றி
ஓம் குட்டில் மகிழ்பவனே போற்றி
ஓம் குறைகள் தீர்ப்பவனே போற்றி
ஓம் குணநிதியே போற்றி
ஓம் குற்றம் பொறுப்போனே போற்றி
ஓம் கூவிட வருவோய் போற்றி
ஓம் கூத்தன் மகனே போற்றி
ஓம் கொள்ளை கொள்வோனே போற்றி
ஓம் கொழுக்கட்டைப் பிரியனே போற்றி
ஓம் கோனே போற்றி
ஓம் கோவிந்தன் மருகனே போற்றி
ஓம் சடுதியில் வருபவனே போற்றி
ஓம் சங்கரன் புதல்வனே போற்றி
ஓம் சங்கடஹரனே போற்றி
ஓம் சதுர்த்தி நாயகனே போற்றி
ஓம் சிறிய கண்ணோனே போற்றி
ஓம் சித்தம் கவர்ந்தோனே போற்றி
ஓம் சுருதிப் பொருளே போற்றி
ஓம் சுந்தரவடிவே போற்றி
ஓம் ஞாலம் காப்பவனே போற்றி
ஓம் ஞான முதல்வனே போற்றி
ஓம் தந்தம் உடைந்தவனே போற்றி
ஓம் தந்தத்தாற் எழுதியவனே போற்றி
ஓம் தும்பிக்கை உடையாய் போற்றி
ஓம் துயர் துடைப்பவனே போற்றி
ஓம் தெருவெலாம் காப்பவனே போற்றி
ஓம் தேவாதி தேவனே போற்றி
ஓம் தொந்தி விநாயகனே போற்றி
ஓம் தொழுவோ நாயகனே போற்றி
ஓம் தோணியே போற்றி
ஓம் தோன்றலே போற்றி
ஓம் நம்பியே போற்றி
ஓம் நாதனே போற்றி
ஓம் நீறணிந்தவனே போற்றி
ஓம் நீர்க்கரையமர்ந்தவனே போற்றி
ஓம் பழத்தை வென்றவனே போற்றி
ஓம் பாரதம் எழுதியவனே போற்றி
ஓம் பரம்பொருளே போற்றி
ஓம் பரிபூரணனே போற்றி
ஓம் பிரணவமே போற்றி
ஓம் பிரம்மசாரியே போற்றி
ஓம் பிள்ளையாரே போற்றி
ஓம் பிள்ளையார்பட்டியானே போற்றி
ஓம் பிறவிப்பிணி தீர்ப்பவனே போற்றி
ஓம் பிள்ளைகளை ஈர்ப்பவனே போற்றி
ஓம் புதுமை வடிவே போற்றி
ஓம் புண்ணியனே போற்றி
ஓம் பெரியவனே போற்றி
ஓம் பெரிய உடலோனே போற்றி
ஓம் பேரருளாளனே போற்றி
ஓம் பேதம் அறுப்போனே போற்றி
ஓம் மஞ்சளில் இருப்பவனே போற்றி
ஓம் மகிமையளிப்பவனே போற்றி
ஓம் மகாகணபதியே போற்றி
ஓம் மகேசுவரனே போற்றி
ஓம் முக்குறுணி விநாயகனே போற்றி
ஓம் முதலில் வணங்கப்படுவோனே போற்றி
ஓம் முறக்காதோனே போற்றி
ஓம் முழுமுதற்கடவுளே போற்றி
ஓம் முக்கணன் மகனே போற்றி
ஓம் முக்காலம் அறிந்தோனே போற்றி
ஓம் மூத்தோனே போற்றி
ஓம் மூஞ்சுறு வாகனனே போற்றி
ஓம் வல்லப கணபதியே போற்றி
ஓம் வரம்தரு நாயகனே போற்றி
ஓம் விக்னேஸ்வரனே போற்றி
ஓம் வியாஸன் சேவகனே போற்றி
ஓம் விடலைக்காய் ஏற்பவனே போற்றி
ஓம் வெற்றியளிப்பவனே போற்றி
விநாயக போற்றி - 2
ஓம் அனுகை விநாயக போற்றி
ஓம் அர்க்க விநாயக போற்றி
ஓம் அபிசாண்டி விநாயக போற்றி
ஓம் அபர விநாயக போற்றி
ஓம் அபிமுத்த விநாயக போற்றி
ஓம் அரிச்சந்திர விநாயக போற்றி
ஓம் அழகிய விநாயக போற்றி
ஓம் ஆசரசிருஷ்டி விநாயக போற்றி
ஓம் ஆக்கினை விநாயக போற்றி
ஓம் ஆமோத விநாயக போற்றி
ஓம் ஆண்ட விநாயக போற்றி
ஓம் ஆதி விநாயக போற்றி
ஓம் ஆழத்துப் பிள்ளையார் போற்றி
ஓம் உபதாப விநாயக போற்றி
ஓம் உச்சி பிள்ளையார் போற்றி
ஓம் உடுண்டி விநாயக போற்றி
ஓம் ஊர்த்துவாண்டமுண்ட விநாயக போற்றி
ஓம் ஏகதந்த விநாயக போற்றி
ஓம் ஏரம்ப விநாயக போற்றி
ஓம் ஏகோபயப்பிரத விநாயக போற்றி
ஓம் கசகன்ன விநாயக போற்றி
ஓம் கண்டா விநாயக போற்றி
ஓம் கணப விநாயக போற்றி
ஓம் கற்பகப் பிள்ளையார் போற்றி
ஓம் கல்முத்து விநாயக போற்றி
ஓம் கஜான விநாயக போற்றி
ஓம் கணேசர் விநாயக போற்றி
ஓம் கணபதி விநாயக போற்றி
ஓம் கபில விநாயக போற்றி
ஓம் கங்கை கணபதி போற்றி
ஓம் கடுக்காய் விநாயக போற்றி
ஓம் கருக்கடி விநாயக போற்றி
ஓம் கள்ளவாரணப் பிள்ளையார் போற்றி
ஓம் கார்த்தி விநாயக போற்றி
ஓம் குலப்பிரிய விநாயக போற்றி
ஓம் கூபதந்த விநாயக போற்றி
ஓம் கூப்பிடு பிள்ளையார் போற்றி
ஓம் கூர்நிதாக்ஷ விநாயக போற்றி
ஓம் கைகாட்டி விநாயக போற்றி
ஓம் கோடி விநாயக போற்றி
ஓம் சந்திர விநாயக போற்றி
ஓம் சலாடக விநாயக போற்றி
ஓம் சதுர்த்தி விநாயக போற்றி
ஓம் சமுசிக விநாயக போற்றி
ஓம் சித்தி விநாயக போற்றி
ஓம் சித்தரூப விநாயக போற்றி
ஓம் சிங்கமுக விநாயக போற்றி
ஓம் சிந்தாமணி விநாயக போற்றி
ஓம் சித்தி புத்தி விநாயக போற்றி
ஓம் சிவப்பிரகாச விநாயக போற்றி
ஓம் சிகாமணி விநாயக போற்றி
ஓம் சுமுக விநாயக போற்றி
ஓம் சுந்தர கணபதி போற்றி
ஓம் சுமங்கள விநாயக போற்றி
ஓம் சூதவனப் பிள்ளையார் போற்றி
ஓம் செவிசாய்த்த விநாயக போற்றி
ஓம் செல்வ விநாயக போற்றி
ஓம் சொர்ண விநாயக போற்றி
ஓம் தந்தவக்கிர விநாயக போற்றி
ஓம் தரணிதர விநாயக போற்றி
ஓம் தால மூல விநாயக போற்றி
ஓம் திரிமுக விநாயக போற்றி
ஓம் திருமுறைசுட்டிய விநாயக போற்றி
ஓம் துண்டி விநாயக போற்றி
ஓம் துர்க்கை விநாயக போற்றி
ஓம் துன்முக விநாயக போற்றி
ஓம் துவாரக விநாயக போற்றி
ஓம் துன்பந்தீர்க்கும் விநாயக போற்றி
ஓம் துணைவந்த விநாயக போற்றி
ஓம் தூமகேது விநாயக போற்றி
ஓம் நீச விநாயக போற்றி
ஓம் பஞ்சமி விநாயக போற்றி
ஓம் பஞ்சமுக விநாயக போற்றி
ஓம் பந்து விநாயக போற்றி
ஓம் பாகீரத விநாயக போற்றி
ஓம் பாலசந்திர விநாயக போற்றி
ஓம் பால விநாயக போற்றி
ஓம் பிரசன்ன விநாயக போற்றி
ஓம் பிரணவ விநாயக போற்றி
ஓம் பிரவாள விநாயக போற்றி
ஓம் மணிகன்ன விநாயக போற்றி
ஓம் மந்திர விநாயக போற்றி
ஓம் மகோற்கடர் விநாயக போற்றி
ஓம் மயூரேசர் விநாயக போற்றி
ஓம் முழுமுதற்கடவுள் விநாயக போற்றி
ஓம் முண்ட விநாயக போற்றி
ஓம் மூஷிகவாகன விநாயக போற்றி
ஓம் மோதகப் பிரிய விநாயக போற்றி
ஓம் மோதக விநாயக போற்றி
ஓம் யானை முகத்து விநாயக போற்றி
ஓம் லம்போதர விநாயக போற்றி
ஓம் வக்ரதுண்டாய விநாயக போற்றி
ஓம் வக்கிரதுண்ட விநாயக போற்றி
ஓம் வரத விநாயக போற்றி
ஓம் வல்லாள விநாயக போற்றி
ஓம் வசிஷ்ட விநாயக போற்றி
ஓம் வன்னி விநாயக போற்றி
ஓம் வாமன விநாயக போற்றி
ஓம் விக்கின விநாயக போற்றி
ஓம் விடாங்க விநாயக போற்றி
ஓம் விராசபுத்திர விநாயக போற்றி
ஓம் விக்கினராஜ விநாயக போற்றி
ஓம் விக்னேஸ்வர விநாயக போற்றி
ஓம் வினை தீர்க்கும் விநாயக போற்றி
ஓம் விஷ்ணு விநாயக போற்றி
ஓம் வீம விநாயக போற்றி
ஓம் வீர சுத்தி விநாயக போற்றி
ஓம் ÷க்ஷத்ரபால விநாயக போற்றி
விநாயக மந்திரப் பாடல்
ஜெய கணேச ஜெயகணேச
ஜெய கணேச பாஹிமாம்
ஜெய கணேச ஜெய கணேச
ஜெய கணேச ரக்ஷமாம்
ஸ்ரீகணேச ஸ்ரீகணேச
ஸ்ரீகணேச பாஹிமாம்
ஸ்ரீகணேச ஸ்ரீகணேச
ஸ்ரீகணேச ரக்ஷமாம்
ஜெய கணேச ஜெயகணேச
ஜெய கணேச பாஹிமாம்
ஜெயகணேச ஜெயகணேச
ஜெயகணேச ரக்ஷமாம்.
காரிய சித்தி மாலை
(காசிப முனிவர் இயற்றி, கச்சியப்பர் மொழி பெயர்த்தது)
1. பந்தம் அகற்றும் அநந்தகுணப்
பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில்
ஈண்டி இருந்து கரக்குமோ
சந்தமறை ஆகமங் கலைகள்
அனைத்தும் எவன்பால் தகவருமோ
அந்த இறையாம் கணபதியை
அன்பு கூரத் தொழுகின்றோம்.
2. உலக முழுவதும் நீக்கமற
ஒன்றாய்நிற்கும் பொருள் எவன்அவ்
உலகிற்பிறக்கும் விகாரங்கள்
உறாதமேலாம் ஒளியாவன்
உலகம் புரியும் வினைப் பயனை
ஊட்டும் களைகண் எவன் அந்த
உலக முதலைக் கணபதியை
உவந்து சரணம் அடைகின்றோம்.
3. இடர்கள் முழுதும் எவனருளால்
எரிவீழும் பஞ்சென மாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால்
சுரர்வாழ் பதியும் உறச்செய்யும்
கடவுள் முதலோர்க்கு ஊறின்றி
கருமம் எவனால் முடிவுறும் அத்
தடவுமருப்புக் கணபதி பொன்
சரணம் சரணம் அடைகின்றோம்.
4. மூர்த்தியாகித் தலமாகி
முந்நீர் கங்கை முதலான
தீர்த்தமாகி அறிந்தறியாத்
திறத்தினாலும் உயிர்க்கு நலம்
ஆர்த்தி நாளும் அறியாமை
அகற்றி அறிவிப்பான் எவன்அப்
போர்த்த கருணைக் கணபதியைப்
புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.
5. செய்யும் வினையின் முதல்யாவன்
செய்யப்படும் அப்பொருள் யாவன்
ஐயமின்றி உளதாகும்
அந்தக் கருமப் பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவில்
ஊட்டி விடுப்பான் எவன் அந்தப்
பொய்யில் இறையைக் கணபதியைப்
புரிந்து சரணம் அடைகின்றோம்.
6. வேதம் அளந்தும் அறிவரிய
விகிர்தன் யாவன் விழுத்தகைய
வேத முடிவில் நடம் நவிலு<ம்
விமலன் யாவன் விளங்குபர
நாதமுடிவில் வீற்றிருக்கும்
நாதன்எவன் எண்குணன் எவன்அப்
போதமுதலைக் கணபதியைப்
புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.
7. மண்ணின் ஓர் ஐங்குணமாகி
வதிவான் எவன் நீரிடை நான்காய்
நண்ணி அமர்வான் எவன்தீயின்
மூன்றாய் நவின்வான் எவன் வளியின்
எண்ணும் இரண்டு குணமாகி
இயைவான் எவன் வானிடை ஒன்றாம்
அண்ணல் எவன் அக்கணபதியை
அன்பிற் சரணம் அடைகின்றோம்.
8. பாச அறிவில் பசுஅறிவில்
பற்றற்கரிய பரன் யாவன்
பாச அறிவும் பசுஅறிவும்
பயிலப் பணிக்கும் அவன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும்
பாற்றி மேலாம் அறிவான
தேசன் எவன் அக்கணபதியைத்
திகழச் சரணம் அடைகின்றோம்.
பயன்
9. இந்த நமது தோத்திரத்தை
யாவன் மூன்று தினமும் உம்மைச்
சந்தி களில்தோத் திரஞ்செயினும்
சகல கரும சித்திபெறும்
சிந்தை மகிழச் சுகம்பெறும்எண்
தினம்உச் சரிக்கின் சதுர்த்தியிடைப்
பந்தம் அகல ஓர்எண்கால்
படிக்கில் அட்ட சித்தியுறும்.
10. திங்கள் இரண்டு தினந்தோறும்
திகழ ஒருபான் முறையோதில்
தங்கும் அரச வசியமாம்
தயங்க இருபத் தொருமுறைமை
பொங்கும் உழுவ லால்கிளப்பின்
பொருவின் மைந்தர் விழுக்கல்வி
துங்க வெறுக்கை முதற்பலவும்
தோன்றும் எனச் செப்பி மறைந்தார்.
விநாயகர் திருவகவல்
(நக்கீரர் அருளியது)
சீர்தரு மூலச் செழுஞ்சுடர் விளக்கே
கார்நிற மேனிக் கற்பகக் களிறே
அல்லல் வினையை யறுத்திடு ஞான
வல்லபை தன்னை மருவிய மார்பா
பொங்கர வணிந்த புண்ணிய மூர்த்தி
சங்கரனருளிய சற்குரு விநாயகா
ஏழையடியே னிருவிழி காண
வேழமுகமும் வெண் பிறைக் கோடும்
பெருகிய செவியும் பேழை வயிறும்
திருவளர் நுதலின் திருநீற் றழகுஞ்
சிறுத்த கண்ணுஞ் சீதளப் பார்வையும்
நறுந்திகழ் நாசியும் நாண்மலர்ப் பாதமும்
நவமணி மகுட நன்மலர் முடியும்
கவச குண்டல காந்தியும் விளங்கச்
சிந்துரத் திலகச் சந்தனப் பொட்டும்
ஐந்து கரத்தினழகும் வீற்றிருக்க
பாச வினையைப் பறித்திடு மங்குச
பாசத் தொளியும் பன்மணி மார்பும்
பொன் னாபரணமும் பொருந்துமுந் நூலும்
மின்னா மெனவே விளங்கு பட்டழகும்
உந்திச் சுழியும் உரோமத்தழகும்
தொந்தி வயிறுந் துதிக்கையுந் தோன்ற
வேதனு மாலும் விமலனு மறியாப்
பாதச் சலங்கைப் பலதொனி யார்ப்பத்
தண்டைச் சிலம்புந் தங்கக் கொலுசும்
எண்டிசை மண்டல மெங்கு முழங்கத்
தொகுது துந்ததுமி தொந்தோ மெனவே
தகுகு திந்திமி தாள முழங்க
ஆடிய பாத மண்டர்கள் போற்ற
நாடிமெய்யடியார் நாளுந் துதிக்கக்
கருணை புரிந்து காட்சித்தந்தருள
இருளைக் கடிந்து எங்கும் நிறையப்
பொங்குபே ரொளியாய்ப் பொன்மலை போலத்
திங்கள் முடியான் றிருவுள மகிழ
வந்த வாரண வடிவையுங் காட்டிச்
சிந்தை தளர்ந்த சீரடியார்க்கு
இகபர சாதன மிரண்டு முதவி
அகவினைத் துன்ப மகந்தை யறுத்து
மூலா தார முச்சுடர் காட்டி
வாலாம்பிகை தன் வடிவையுங் காட்டி
மாணிக்க மேனி மலர்ப் பதங் காட்டிப்
பேணிப் பணியப் பீஜா ட்சரமும்
ஓமென் றுதித்த ஓங்காரத் துள்ளே
ஆமென் றெழுந்த அட்சர வடிவும்
இடைபிங் கலைகளி ரண்டினடுவே
கடைமுனை சுழிமுனைக் கபாலமுங் குறித்து
மண்டல மூன்றும் வாய்வோர் பத்துங்
குண்டலி யசைவிலி கூறிய நாடியும்
பூதமும் பொறியும் புகழ்குண மூன்றும்
வாதனை செய்யு மறிவையுங் காட்டி
ஆறா தார அங்குச நிலையைப்
பேறாகி நின்ற பெருமையுங் காட்டிப்
பஞ்ச மூர்த்திகள் பாகத் தமர்ந்த
பஞ்சத் திகளின் பாதமுங் காட்டி
நவ்விட மௌவும் நடுவணை வீட்டில்
அவ்வு மாக்கினை அனாதி சதாசிவம்
மைவிழி ஞான மனோண்மணி பாதமும்
நைவினை நணுகா நாத கீதமும்
கண்டு வணங்கக் கண்ணைத் திறந்து
விண்டலமான வெளியையுங் காட்டி
ஐம்பத் தோரெழுத் தட்சர நிலையை
இன்பச் சக்கர விதிதனைக் காட்டி
புருவ நடுவணைப் பொற்கம லாசனன்
திருவிளை யாடலின் திருவடி காட்டி
நாதமும் விந்தும் நடுநிலை காட்டி
போத நிறைந்த பூரணங் காட்டி
உச்சி வெளிதனி லுள்ளொளி காட்டி
வச்சிரம் பச்சை மரகத முத்துப்
பவள நிறைந்த பளிங்கொளி காட்டிச்
சிவகயி லாசச் சேர்வையுங் காட்டிச்
சத்தம் பிறந்த தலத்தையுங் காட்டித்
தத்துவத் தொண்ணூற் றாறையு நீக்கிக்
கருவி காணக் களங்க மறுத்து
மருவிய பிறவி மாயையை நீக்கி
உம்பர்கள் ரிஷிகள் ஒருவருங் காணா
அம்பர வெளியி னருளையுங் காட்டிச்
சத்தி பராபரைசதானந்தி நிராமய
நித்திய ரூபி நிலைமையுங் காட்டி
அடியவர் ஞான மமிர்தமா யுண்ணும்
வடிவை யறியும் வழிதனைக் காட்டி
நாசி நுனியில் நடக்குங் கலைகள்
வாசிவா வென்று வாங்கிப் பிடித்து
நின்மல வடிவாய் நிறுவித் தப்புறம்
வின்மய மான விதத்தையுங் காட்டித்
தராதல முழுதுந் தானாய் நிறைந்த
பராபர வெளியைப் பணிந்திடக் காட்டி
என்னுட லாவியிடம் பொரு ளியாவுந்
தன்னுடை வசமாந் தவநிலை காட்டி
நானெனு மாணவம் நாசம தாகத்
தானென வந்து தயக்கந் தீர
ஆன குருவா யாட்கொண்டருளி
மோன ஞான முழுது மளித்துச்
சிற்பரி பூரண சிவத்தைக் காண
நற்சிவ நிஷ்கள நாட்டமுந் தந்து
குருவுஞ் சீடனும் கூடிக் கலந்து
இருவரு மொருதனி இடந்தனிற் சேர்ந்து
தானந்த மாகித் தற்பர வெளியில்
ஆனந்த போத அறிவைக் கலந்து
புவனத் தொழிலைப் பொய்யென றுணர்ந்து
மவுன முத்திரைய மனத்தினி லிருத்திப்
பெண்டு பிள்ளை பண்டு பதார்த்தங்
கண்டது மாயைக் கனவெனக் காட்டிப்
பாச பந்தப் பவக்கடல் நீக்கி
ஈச னிணையடி யிருத்தி மனத்தே
நீயே நானாய் நானே நீயாய்க்
காயா புரியைக் கனவென உணர்ந்து
எல்லா முன்செய லென்றே யுணர
நல்லா யுன்னருள் நாட்டம்தருவாய்
காரண குருவே கற்பகக் களிறே
வாரண முகத்து வள்ளலே போற்றி
நித்திய பூஜை நைவேத்தியமும்
பத்தடியாக் கொடுத்தேன் பரமனே போற்றி
ஏத்தியனுதின மெளியேன் பணியக்
கூற்றினை யுதைந்த குளிர்பதந் தந்து
ஆசுமதுர வமிர்த மளித்தும்
பேசு ஞானப் பேரெனக் கருளி
மனத்தில் நினைத்த மதுர வாசகம்
நினைவினுங் கனவிலும் நேசம் பொருந்தி
அருணகிரியா ரவ்வை போலக்
கருத்து மிகுந்த கவிமழை பொழிய
வாக்குக் கெட்டா வாழ்வை யளித்து
நோக்கரு ஞான நோக்கு மளித்து
இல்லற வாழ்க்கை யிடையூறகற்றிப்
புல்லரிடத்திற் புகுந்துழ லாமல்
ஏற்ப திகழ்ச்சி என்பதகற்றிக்
காப்ப துனக்குக் கடன் கண்டாயே
நல்லினை தீவினை நாடி வருகினுஞ்
செல்வினை யெல்லாஞ் செயலுன தாமால்
தந்தையும் நீயே தாயும் நீயே
எந்தையும் நீயே தாயும் நீயே
போத ஞானப் பொருளும் நீயே
நாதமும் நீயே நான்மறை நீயே
அரியும் நீயே அயனும் நீயே
திரிபுர தகனஞ் செய்தவன் நீயே
சத்தியும் நீயே சதாசிவம் நீயே
புத்தியும் நீயே புராந்தகன் நீயே
பத்தியும் நீயே பந்தமும் நீயே
முத்தியும் நீயே மோட்சமும் நீயே
ஏகமும் நீயே என்னுயிர் நீயே
தேகமும் நீயே தேவனும் நீயே
உன்னருளின்றி உயிர்த்துணை காணேன்
பின்னொரு தெய்வம் பேசவு மறியேன்
வேதனை கொடுத்த மெய்யிது தன்னில்
வாத பித்தம் வருத்திடு சிலேத்துமம்
மூன்றுத நாடியும் முக்கணமாகித்
தோன்றும் வினையின் துன்ப மறுத்து
நாலாயிரத்து நானூற்று நாற் பத்தெண்
மேலாம் வினையை மெலியக் களைந்து
அஞ்சா நிலைமை யருளியே நித்தன்
பஞ்சாட்சரநிலை பாலித் தெனக்குச்
செல்வமும் கல்வியும் சீரும் பெருக
நல்வர மேதரும் நான்மறை விநாயகா
சத்திய வாக்குச் சத்தா யுதவிப்
புத்திர னேதரும் புண்ணிய முதலே
வெண்ணீ றணியும் விமலன் புதல்வா
பெண்ணா முமையாள் பெற்றிடுந்தேவே
அரிதிரு மருகா அறுமுகன் துணைவா
கரிமுக வாரணக் கணபதி சரணம்
குருவே சரணம் குணமே சரணம்
பெருவயிற்றோனே பொற்றாள் சரணம்
கண்ணே மணியே கதியே சரணம்
விண்ணே யொளியே வேந்தே சரணம்
மானத வாவி மலர்த் தடத் தருகில்
தானத்தில் வாழும் தற்பரா சரணம்
உச்சிப் புருவத் துதித்துல களிக்குஞ்
சச்சிதானந்த சற்குரு சரணம்
விக்கிந விநாயகா தேவே ஓம்
ஹரஹர ஷண்முக பவனே ஓம்
சிவசிவ மஹாதேவ சம்போ ஓம்.
கணேச புஜங்கம்
ஓம் ஆதி சங்கர பகவத் பாதர் அவர்களால் இயற்றப்பட்ட இந்த ஸ்ரீ கணேச புஜங்கம் என்ற ஸ்லோகத்தை பக்தியுடன் தினம் சொல்லுபவர்களுக்கு மனதில் நினைக்கும் செயல்கள் நடந்தேறும். கல்வியும், அழியாச் செல்வமும் உண்டாகும். ஞான மார்க்கம் தானே சித்திக்கும். கணேசரின் பரிபூர்ண கிருபையும் கிடைக்கும் என்பது திண்ணம்.
எல்லோர்க்கும் எளிதில் புரியவேண்டும் என்ற எண்ணத்தில் சுருக்கமாக ஸ்லோகங்களின் பொருள் கூறப்படுகிறது.
ரணத்க்ஷúத்ர கண்டாநிநாதாபிராமம்
சலத்தாண்டவோத் தாண்டவத் பத்மதாளம்
லஸத் துந்திலாங்கோ பரிவ்யாள ஹாரம்
கணாதீச மீசான ஸுனும்தமீடே
சர்ப்ப அலங்காரத்துடன், சிறு மணிமாலைகளைக் கழுத்தில் அணிந்து, அதன் அசைவால் ஏற்படும் நாதத்துடன் கையில் ஏந்திய தாமரை மலரின் தாளத்தாலும் மகிழ்ந்து, நர்த்தனம் புரியும் தாண்டவ கணபதியை போற்றுகிறேன்.
த்வனி த்வம்ஸ வீணா லயோல்லாஸி வக்த்ரம்
ஸ்புரச் சுண்ட தண்டோல்லஸத் பீஜபுரம்,
கலத்த்ர்ப்ப ஸெளகந்த்ய அலோலாலி மாலம்
கணாதீசமீ சானஸுனும் தமீடே.
மிக மதுரமான வீணாகானத்தையொத்த குரல் உடையவரும், அழகிய முகவிலாசத்தையுடையவரும், துதிக்கையில் மாதுளை பழத்தை ஏந்தியவரும், நர்த்தனத்தில் ஏற்பட்ட மதஜல நறுமணத்தை நுகர சுற்றும் வண்டுகளுடன் கூடியவரும், கணங்களுக்கு அதிபதியுமான சிவகுமாரனை போற்றுகிறேன்.
ப்ரகாசஞ் ஜபா ரக்த ரத்ன ப்ரஸுன
ப்ரவாள ப்ரபாதாருண ஜ்யோதிரேகம்
ப்ரலம்போதரம் வக்ரதுண்டைக தந்தம்
கணாதீச மீசான ஸுனும் தமீடே.
செம்பருத்தி புஷ்பம் போன்றும், உதய சூரியனைப் போன்ற சிவந்த ஒளியைப்போல் பிரகாசிப்பவரும், பெருத்த வயிற்றையுடையவரும் வளைந்த தும்பிக்கையுடன் கூடிய முகத்தையுடைய கணாதிபதியான சிவகுமாரனைத் துதிக்கிறேன்.
விசித்ர ஸ்புரத் ரத்னமாலா கிரீடம்
கிரீடோல்லஸத் சந்த்ரரேகா விபூஷம்,
விபூஷைக பூஷம் பவத்வம்ஸ ஹேதும்
கணாதீச மீசான ஸுனும் தமீடே.
பலவிதமான ஜ்வலிக்கும் ரத்தினங்கள் பதிக்கப்பட்ட மகுடத்தை உடையவரும், ஒளி வீசும் பிஞ்சு மதியை தலையில் தரித்தவரும், பிறவி என்ற மாயை இல்லாதவரும் கணங்களுக்கு ஈசனான சிவகுமாரனைப் போற்றுகிறேன்.
உதஞ்சத் புஜா வல்லரீத்ருச்ய மூலோச்
சலத் ப்ரூலதா ளிப்ரம ப்ராஜக்ஷம்
மருத்ஸுந்தரி சாமரை: ஸேவ்ய மானம்
கணாதீசம்சான ஸுனும் தமீடே.
ஓங்கி வளருமம் கொடிகள் போல் தூக்கி கரங்களை உடையவரும், சுழலுகின்ற கருமை வாய்ந்த புருவ மத்தியில் சுழ<லுகின்ற கருவிழிகளை உடையவரும், தேவ கன்னிகள் சூழ்ந்து சாமரம் வீசிக் கொண்டு இருப்பவர்களுடன் கூடிய கணங்களின் ஈசன் சிவகுமாரனைத் துதிக்கிறேன்.
ஸ்புரன் நிஷ்டுராலோல பிங்காக்ஷிதாரம்
க்ருபா சோம லோதார லீலாவதாரம்,
கலாபிந்துசம் கீயதே யோகிவர்யை:
கணாதீச மீசான ஸுனும் தமீடே.
சிவந்த கண்களுடன் அரக்கர்களை அழிப்பவரும், பக்தர்களை கருணையுடன் காப்பாற்றுபவரும், பற்பல அவதாரங்களை விளையாட்டாக செய்பவரும், ஜோதி ஸ்வரூபமானவரும், ஞானி, யோகிகளால் துதிக்கப்படுபவருமான கணங்களின் ஈசனைப் போற்றுகிறேன்.
யமேகாக்ஷரம் நிர்மலம் நிர்விகல்பம்
கணாதீச மானந்தமாகார சூன்யம்,
பரம் பாரமோங்கார மாம்னாய கர்ப்பம்
வதந்தி ப்ரகல்பம் புராணம் தமீடே.
வேதங்களுக்கெல்லாம் மூலவரும், உருவமற்றவரும், விகல்பம் இல்லாதவரும், அழிவு இல்லாதவரும் ஒன்றானவரும், சச்சிதானந்த பரமான புருஷருமான ஓங்கார ஸ்வரூபியான கணபதியை வணங்குகிறேன்.
சிதானந்த ஸாந்த்ராய சாந்தாய துப்யம்
நமோ விஸ்வகர்த்ரேச ஹர்த்ரேச துப்யம்,
நமோ ஆனந்த லீலாய கைவல்ய பாஸே
நமோ விஸ்வபீஜ ப்ரஸிதே சஸுநோ.
ஞானத்தையே <உருவமாகக் கொண்டவரே சாந்த ஸ்வரூபியே, படைத்து, அழித்தும், பல திரு விளையாடல்களை நிகழ்த்துபவரே, முப்பாலையும் கடந்து ஒன்றானவரே வணங்குகிறேன்.
(பல ஸ்ருதி)
இமம் ஸுஸ்தவம் ப்ராதருத்தாய பக்த்யா
படேத் யஸ்து மர்த்யோ லபேத் ஸர்வகாமான்
கணேச ப்ரசாதேன ஸித்யாந்த சாவ:
கணேச விபௌ துர்லபம் கிம் பிரஸ்னே.
இந்த எட்டு ஸ்லோகத்தையும் பக்தியுடன் சொல்லுகிறவர்கள் எண்ணிய எண்ணம் எல்லாம் நடைபெறும், கல்வி வளரும், ஞானம் உண்டாகும், செல்வம் பெருகும், கணேசரின் அருள் கிட்டும்.
முடிவில் அவர்தம் திருவடி தரிசனமும் கிடைக்கும்.
ஓம் கணேசாய நம:
No comments:
Post a Comment