மகா சிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிவ ஆலயங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, காளஹஸ்தி, சிதம்பரம், திருவானைக்காவல் ஆகிய பஞ்சபூத ஸ்தலங்களிலும் குற்றாலம், திருநெல்வேலி, மதுரை, சிதம்பரம், திருவாலங்காடு ஆகிய பஞ்சரத்ன சபைகளிலும் சிவபெருமானின் தரிசனத்தைக் காண பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
மகா சிவராத்திரியின் மகிமை
மகா சிவராத்திரியின் மேன்மையை ஆகமங்கள், சிவமகா புராணம், ஸ்காந்தம், பத்மம் உள்ளிட்ட பத்து புராணங்களும் குறிப்பிடுகின்றன. மகாசிவராத்திரியானது சிவனுக்கு உரிய இரவு என பொருள்படும். சிவனுக்கு உகந்த விரதங்களாக எட்டுவிரதங்களை புராணங்கள் குறிப்பிடுகின்றன. அவை சோம வார விரதம், திருவாதிரை, உமா மகேசுவர விரதம், மகா சிவராத்திரி விரதம், கேதார விரதம், கல்யாண விரதம், சூல விரதம் , ரிசப விரதம் என்பனவையாகும்.
மாசி மாதத்தில் தேய்பிறை காலத்தில் வரும் சதுர்த்தசி நாளையே நாம் மகா சிவராத்திரியாக கொண்டாடுகின்றோம். அன்றைய தினம் விரதமிருந்து சிவாலயத்திற்குச் சென்று இறைவனை வணங்குவதால் இறைவனின் அருளைப் பெறலாம்.
பார்வதி வழிபாடு
மாசி மாத சதுர்த்தசி அன்றுதான், பார்வதி தேவி, சிவபெருமானை எண்ணி வழிபட்ட நாளாகும். அதனை சிறப்பிக்கவே ஒவ்வொரு மாதமும் வரும் சதுர்த்தசி நாளன்று சிவராத்திரியாக நாம் வழிபடுகின்றோம். பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப் பொழுது அம்பிகையான உமாதேவிக்கும் உரியது என்பது நியமம். ஆனால் சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலின் படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதாயிற்று.
ஐந்துவகை சிவராத்திரி
சிவராத்திரி ஐந்து வகைப்படும். அவை நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாதசிவராத்திரி, யோகசிவராத்திரி, மகா சிவராத்திரி. மாசிமாதம் தேய்பிறை சதுர்த்தசி நாளை மகாசிவராத்திரியாக சிவாலயங்களில் கொண்டாடுகிறோம். ராத்ர என்னும் சொல்லுக்கு செயலற்று ஒடுங்கி நிற்கும் காலம் என்று பொருள். இதனையே சம்கார காலம் அல்லது பிரளயகாலம் என்று குறிப்பிடுவர். ஒவ்வொரு நாள் இரவும் உயிர்கள் தூக்கத்தில் ஒடுங்கி செயலற்று விடுகின்றன. அதனையே நித்திய சிவராத்திரி என்று குறிப்பிடுவர்.
தைமாத தேய்பிறை சதுர்த்தசியில் வருவது பட்ச சிவராத்திரி. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி நாளில் வருவது மாத சிவராத்திரி. சோமவாரமான திங்கட்கிழமை சிவராத்திரி வந்தால் யோக சிவராத்திரி என்பர். மாசிமாத சிவராத்திரி மகாசிவராத்திரி.
அம்பிகையின் கோரிக்கை
மகா சிவராத்திரியைப் பற்றிய புராணக் கதைகள் பல உள்ளன. அதில் முக்கியமாகக் கூறப்படும் கதை ஒன்று உள்ளது. அதாவது பிரளய காலம், பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டனர். உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின. உலகங்களே இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை, அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள். அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தருளினார்.
அப்பொழுது உமையவள் சுவாமி நான் தங்கள் மனதில் தியானித்துப் போற்றிய காலம் “சிவராத்திரி” என்று பெயர் பெற வேண்டும் என்றும், அதனைச் சிவராத்திரி விரதம் என்று யாவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதை கடைப்பிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடையவேண்டும் என்று பிராத்தித்தார். இறைவனும் அவ்வாறே என்று அருள் புரிந்தார். அம்பிகையைத் தொடர்ந்து நந்தியம் பெருமான், சனகாதி முனிவர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள் விருப்பம் நிறைவேறப் பெற்றார்கள் என்று புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
சிவராத்திரி விரதம்
சிவராத்திரி அன்று கண் விழித்திருந்து விரதமிருந்து இறைவனை வணங்கும்போது முழுமையான இறைவன் அருள் கிடைக்கும். தியானம் நிலைக்கும். நினைத்த காரியம் நடக்கும். விரதம் கடைப்பிடிப்போர் முதல்நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு கால வழிபாடு செய்யவேண்டும். மறுநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி விரத்தை நிறைவு செய்தல் வேண்டும். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும். இவர்தான் சிவராத்திரி விரதம் இருக்கலாம். மனிதராய் பிறந்த யாரும் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம்.
நான்கு கால பூஜை
மகாசிவராத்திரியன்று நான்குகாலஅபிஷேகம் சிவபெருமானுக்கு நடைபெறும். போது ஒவ்வொரு காலத்திலும் சிவபெருமானின் ஒவ்வொரு கோலத்தை வழிபடவேண்டும். முதல்காலத்தில் முருகப்பெருமானை நடுவில் அமர்த்தி உமாதேவியும், சிவபெருமானும் காட்சிதரும் சோமாஸ்கந்தரை வழிபடுவர். இரண்டாம்காலத்தில் தென்முகக்கடவுளான தட்சிணாமூர்த்தியை வணங்கவேண்டும். 3ம் காலத்தில் கருவறையின் பின்புறமுள்ள லிங்கோத்பவரை தரிசிக்கவேண்டும். நான்காம் காலத்தில் ரிஷபவாகன சிவனான சந்திரசேகரரை வழிபடவேண்டும். மறுநாள் காலையில் அன்னதானம் செய்ய வேண்டும். அன்னதானத்துக்கே பிறகே சாப்பிட்டு விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
அபிஷேகப் பொருட்கள்
சிவராத்திரியன்று சிவாலயத்திற்கு வில்வ இலையுடன் செல்ல வேண்டும். இரவு கடைசி ஜாம பூஜை வரை அங்கே இருக்க வேண்டும். சிவாய நம என உச்சரிக்க வேண்டும். அன்று சாப்பிடக்கூடாது. நோயாளிகள் எளிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். முதல் ஜாம பூஜைக்கு பால், அடுத்த பூஜைக்கு தயிர், மூன்றாம் ஜாமத்திற்கு வெண்ணெய், நான்காவது ஜாமத்திற்கு தேன் ஆகியவற்றை அபிஷேகம் செய்வதற்காக கோயிலில் ஒப்படைக்க வேண்டும். மகா சிவராத்திரி தினத்தில் லிங்க தரிசனம் செய்வதுடன், சிவலிங்கத் திருமேனியைப் போற்றும் லிங்கப் புராண குறுந்தொகை முதலான தெய்வப் பாடல்களைப் பாடி வழிபடுவது சிறப்பு. அந்த வகையில் சிவனாரைத் துதிக்கும் லிங்காஷ்டகம் பெரிதும் மகிமை வாய்ந்தது. ஆதிசங்கரர் அருளிய லிங்காஷ்டகத்தைப் படிப்பதால், ஜாதகத்தில் சூரியன் மற்றும் குருவால் ஏற்படும் குறைகள் நீங்கும்; பிணிகளும் அகன்று நலம் பெறலாம். சகல மங்கலங்களும் உண்டாகும்.
செல்வவளம் தரும் சிவராத்திரி
மகாபாரதம் சாந்தி பர்வத்தில் சிவராத்திரியின் மகத்துவம் கூறப்பட்டுள்ளது. அம்பு படுக்கையில் கிடந்த பீஷ்மர், சிவராத்திரி விரத மகிமையை பாண்டவர்களுக்கு சொன்னார். இக்ஷ்வாகு குலத்தில் பிறந்த மன்னர் சித்திரபானு. அஷ்டவக்கிர முனிவர் ஒரு சிவராத்திரி நாளில் மன்னனைச் சந்திக்க வந்தார். விரதமிருந்த மன்னன், முனிவரிடம், தான் மன்னனாக உயர்ந்த காரணத்தை தெரிவித்தார்.
முற்பிறவியில் சுஸ்வரன் என்னும் வேடனாக நான் வாழ்ந்தேன். வேட்டையாடி மாமிசத்தை விற்பது என் தொழில். ஒருநாள், பகலில் மிருகம் ஏதும் சிக்கவில்லை. இரவான பிறகு மான் ஒன்றைக் கொன்றேன். காட்டிலேயே தங்கிவிட்டேன். மிருகங்களிடமிருந்து தப்ப ஒரு மரத்தில் ஏறிக் கொண்டேன். பசிமயக்கத்தால் தூக்கம் வரவில்லை. இலைகளைப் பறித்து கீழே போட்டபடி இருந்தேன். பொழுது புலர்ந்து விட்டது. அந்த நாள் சிவராத்திரி என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை. மரணம் ஏற்பட்டு என் உயிர் நீங்கிய பின், இரு சிவதூதர்கள் என்னை அழைத்துச் செல்ல வந்தனர். நீ வேட்டையாடச் சென்ற நாள் சிவராத்திரி. அன்று நீ ஏறியது வில்வமரம். மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. நீ வில்வ இலைகளைப் பறித்துப் போட்டபடி இருந்தாய். உறங்கவும் இல்லை. அறியாமல் செய்தாலும், சிவராத்திரியன்று லிங்கத்துக்கு வில்வார்ச்சனையால் உனக்கு நற்கதி கிடைத்தது என்றனர். அதனால், நாடாளும் மன்னனாக சித்திரபானு என்ற பெயரில் இப்பிறவியில் பிறக்கும் பேறு பெற்றேன், என்றார்.
அறியாமல் செய்த அர்ச்சனையே ஒரு வேடனை நாட்டின் மன்னன் ஆகும் அளவிற்கு உயர்த்தியது. எனவே பக்தியுடன் சிவராத்திரி விரதம் இருப்பவர்கள், எத்தனை பிறவி எடுத்தாலும் பணக்காரர்களாக இருப்பர். அவர்களது சந்ததியும் செல்வவளத்துடன் திகழும் என்று கூறப்படுகிறது. எனவே சிவராத்திரி தினத்தன்று அருகில் உள்ள சிவ ஆலயத்திற்கு சென்று கண்விழித்து சிவ புராணம் படித்து இறைவன் அருள் பெருவோம்.
No comments:
Post a Comment