Wednesday, November 21, 2012

ஸ்கந்தன் வந்தான் : பகுதி -1

ஸ்கந்தன் வந்தான் : பகுதி -1

 


ஓம் எனும் பொருளாய் ஓங்கார நாதத்தின் விந்துவாக சிவனின் நெற்றிக்கண்ணில் தோன்றிய தீப்பொறிகள் சரவணப்பொய்கையில் வீழ்ந்த போது அதில் முருகன் சண்முகனாக அவதரித்தார்.
 முருகப்பெருமான் கலியுகத்தெய்வம். குமரன் சக்தி வேல் துணைகொண்டு ஆறுநாட்கள் சூரனுடன் போரிட்டார். ஆறாம் நாள் சூரனை வதம் செய்த போது ஆறுமுகன் தாள்மலரில் சூரன் சரணாகதி அடைந்தபோது அவனை மயிலாகவும் சேவலாகவும் மாற்றினார். அனைத்து உயிர்கள் மீதும் தெய்வங்கள் அன்பும் கருணையும் கொண்டுள்ளனர். அதிலும் கருணைக்கடலான கந்தன் அணைத்து உயிருக்கும் அருளைப்பொலிபவனல்லவா. அன்பர் உள்ளத்தில் நீங்காது இருப்பவன். தந்தைக்கு குருவாய் இருந்து பிரணவ மந்திரத்தை உபதேசித்து குருபரன் என்றும் ஞானபண்டிதன் என்றும் ஸ்வாமி நாதன் என்றும் போற்றப்படுபவன். தேவரும், மூவரும், முனிவரும், அடியவரும் வாழ்த்தி வணங்க என்றென்றும் அருள் தந்து காப்பான்.

அப்படி கலியுகவரதனாம் கந்தவேளை ஸ்கந்தசஸ்டி விரதநாளாம் ஐப்பசி மாதத்தின் அமாவாசை திதிக்கு அடுத்தநாளில் இருந்து பிரதமைமுதல் சஸ்டி வரையான ஆறுநாட்களில் உபவாசமிருந்து ஏழாம் நாளில் பாறணைபண்ணி (விரதத்தை பூர்த்தி செய்தல்) இந்துப் பெருமக்களின் மரபு, உபவாசம் இருக்க முடியாதவர்கள், பகல் அல்லது இரவு ஒருவேளை உணவருந்தி விரதம் அனுட்டிப்பர். கந்தனை வழிபாடாற்றி கந்தசஸ்டி கவசம், கந்தபுராணம், கந்தகுருகவசம், கந்தரங்காரம், கந்தரனுபூதி, திருமுருகாற்றுப்படை, திருப்புகழ், சண்முககவசம், பகைகடிதல், முருகவேளின் ஆறுபடை வீடுகளின் தலபுராணம் இப்படி இயற்றிய நூல்களைப் பாடி பரவி வருதல் வேண்டும். அதிலும் குறிப்பாக கந்தபுராணப் படிப்பதையோ, கேட்பதையோ அல்லது கந்தபுராணத்தின் பொருள் படிப்பதையோ, பொருள் சொல்வதைக் கேட்பதையோ இவ்விரத நாளில் விரதம் அனுஸ்டிக்கும் அன்பர்கள் வழக்கமாகக்கொண்டு பெரும்பயன் அடைவார்.

"சத்ரூன் சோஸயதீதி ஸ்கந்த" அமரகோசம் எனும் நிகண்டுவில் இப்படி கூறப்பட்டுள்ளது. பகைவரின் ஆற்றலை வற்றச் செய்பவன் கந்தன், சூரனை வதைக்கவில்லை. மயில்வாகனமாகவும் சேவல்கொடியாகவும் ஆக்கி வேலவன் வாழ்வளித்தான். நன்றிகொன்றவன் விரைந்து அழிவான், என்ற கோட்பாட்டை நமக்கு உணர்த்துவதாக கந்தபுராணம் அமைந்துள்ளது. நன்றி மறத்தல், நன்றிகோறல் என்ற இந்த இருபாவங்களும் மிகத் துன்பத்தை நல்கும். நன்றிகொன்றவனுக்கு உய்வில்லை, என்பதை விரித்துக் கூறுகிறது கச்சியப்பர் எழுதிய கந்தபுராணம். இக்கந்தபுராணத்தில் உள்ள பொருள் எந்தப் புராணத்திலும் இல்லை. ஆக ஞானத்தை விரும்புவோர், ஒளியைவிரும்புவோர், ஆனந்தத்தை விரும்புவோர் எவரும் இக் கந்தபுராணத்தை அவசியம் படித்து தெரிந்து கொள்ளவேண்டும்.

கந்தன் சிவனின் அம்சம்,பரமேஸ்வரனின் ஐந்து முகங்களான, ஸத்யோஜாதம், வாமதேவம், தத்புருசம், ஈசானம், அகோரம் ஆகிய ஐம்முகமும், பரமஞானியருக்கு மட்டும் புலப்படும் உள்முகமாக ஆறாவது திருவதனம் அதோமுகமும் சேர்ந்து அம்முகங்களின் நெற்றிக்கண்ணில் நின்று தோன்றிய ஜோதி ஆறு தீப்பொறிகளாகின. அப்பொறிகள் சிவன் முன் வர அவற்றை வாயு தேவனையும் அக்கினி தேவனையும் அக்கினிப்பொறிகளை தாங்கி கங்கையில் கொண்டு சேர்க்குமாறும் பின்னர் கங்காநதி சரவணப் பொய்கையில் கொண்டுபோய் சேர்ப்பாள் என எம்பிரான் உத்தரவிடுகிறார். இந்த அக்கினியின் வெம்மையை எங்களால் தாங்க முடியுமா தேவ தேவா; நாம் எப்படிச் சுமப்பது; எனக்கேட்ட போது இத்தீப்பொறிகளைத் தாங்கிச்செல்ல உமக்கு ஆற்றலை அளித்தோம், என்று அருள் புரிய இறைவனால் அன்றோ நாம் அக்கினியாய் வாயுவாய் இருக்கிறோம், எனக்கூறி தம் சென்னிமேல் ஆறிபொறிகளையும் மாற்றி மாற்றி கொண்டுசென்று கங்கையில் விட்டனர்.
கங்கை அவ்வெம்மை தாங்காது வற்றத்தொடங்கியது. ஆயினும் இறைவனின் அருளை உணர்ந்த கங்கை ஏந்திச் சென்று ஒரு நாழிகைக்குள் இமய மலைச்சாரலில் உள்ள சரவணப்பொய்கையில் சேர்த்துவிட ஆறு தாமரைமலர்களில் ஆறுமுகமாக முருகன் அவதரித்தார். சிவன் அருளால் சரவணப்பொய்கை வற்றாதிருந்தது. அங்கே அருவமாயும் உருவமாயும் அநாதியாயும் ஒன்றாயும் பலவாயும் பரப்பிரம்மமாயும் நின்ற பரசிவ சோதிப்பிழம்பே ஒரு திருமேனியாக வடிவுகொண்டது. பரம்பொருள் கருணை வெள்ளம் பொழியும் ஆறுதிருமுகங்களும் பன்னிரண்டு திருக்கரங்களும் கொண்டு உலகமெல்லாம் உய்யும் வண்ணம் முருகக்கடவுள் திரு அவதாரம் செய்தார்.

இதில் உலகசேமத்திற்காய் முருகு வடிவின் தத்துவத்தை ஆராய்ந்தோமானால் பேருண்மை என்னவென்று புரியும். பஞ்சபூதங்களில் படிப்படியாக வெளி காற்று, கனல், புனல், மண் இவற்றின் வழியில் தோற்றம் பெறுகிறார். இறைசுடராக வானத்தில் நின்று பின்காற்றின்கை புகுந்து பின்தீயைச் சென்றடைந்து கங்கையாகிய நீரில் தவழ்ந்து, பின் நிலத்தில் எய்தியது. ஞானக்கினியில் அருவமாகத் தோன்றிக் கருணைப்பொய்கையில் உருவமாகப் பொலிந்தது.

"ஸட்வக்த்ரம் த்வாதச புஜம் அஸ்டாதச விலோசனம் ரூபம் அங்கீக்ருதம் சுபம் லோகாநாம்" என்று வடமொழி ஸ்காந்தம் சொல்கிறது. உருவம் இல்லாத அருட்பெருஞ் ஜோதி ஆண்டவன் ஆறுமுகங்கள் பன்னிரண்டு தோள்கள் பதினெட்டுக் கண்கள் கொண்ட அருள் உருவத்தை உலகம் நலம் அடையும் பொருட்டு எடுத்துக்கொண்டான்.

"கண்ணிகர் மெய்யும் சென்னிக் கணநிக ரினத்தின் கூறும்
 திண்ணமை தோள்க ளேபோல் திகழ்தரு முயிரும் வேறொன்
 றெண்ணுதற்கரிய தான எஃகமும் இயலிற் காட்டும்
 புண்ணிய முனிக்கோன் செவ்வேள் பொற்பதத் தடிமையாகும்." என்ற கந்தபுராணக்கூற்றுப்படி முருகனுக்கு கண்கள் பதினெட்டுப்போல் தமிழில் மெய்யெழுத்துக்கள் பதினெட்டாக நின்றன.
முருகனுக்கு முகங்கள் ஆறு, தமிழின் இனஎழுத்துக்கள் ஆறு ஆகும். அதாவது வல்லினம் ஆறு , இடையினம்  ஆறு , மெல்லினம் ஆறு, இப்படியாக மு -ரு -க என்ற சொல்லில் அதன் எழுத்துக்களில் ஒவ்வொரு எழுத்துக்களும் மெய்யினத்தின் ஒவ்வோர் இனத்தைச் சார்ந்து நிற்பது குறிப்பிடத்தக்கது. முருகன் தோள்கள் பன்னிரண்டு, உயிரெழுத்துக்களும் பன்னிரெண்டு கந்தன் கையில் உள்ள சக்திவேல் எந்தத்தெய்வங்களுக்கும் இல்லாத ஒரு சிறப்பு பெற்றது. ஆயுதங்களின் பெயர்களை மக்களுக்கு சூட்டுவதில்லை. ஆனால் சக்திவேல், வேலன், வேல், வேலாயுதம், வேலும்மயிலும் குகவேல், சண்முகவேல் ,கதிர்வேல், வேல்முருகன், வேல்மயூரன் ,சுந்தரவேல் ,வேல்சாமி ,வெற்றிவேல்,வீரவேல் இப்படி பெயர் சூட்டி அழைப்பர்.

மிக முக்கியமாக வேறு எந்தமொழியிலும்  இல்லாத தனிநிலை ஆயுத எழுத்து தமிழில்தான் உண்டு.ஃ ஆயுதஎழுத்து இது வேலின் உருவத்தை ஒத்ததாக அமைந்ததாகும். இச்சை கிரியை ஞானம் என்ற மூன்று சக்திகள் சேர்ந்ததுவே வேலாகும். தமிழின் தலைவன் குமரன், தமிழ்வேறு அழகன் வேறு அல்ல;. எங்கள் தமிழன், இளமையானவன் முருகன்; தமிழும் என்றும் இளமையானது ,அழியாதது ,அழகானது; தமிழ் வேறு;முருகன் வேறு அல்ல.
இனிக் கந்தபுராணத்தை முருகன் அடி எடுத்துக் கொடுக்க கந்தன் புகழைக் கந்தபுராணமாகப் பாடி உலகுக்கு அறிமுகம் செய்த கச்சியப்பசிவாச்சாரியார் அவர்களைப்பற்றி அடுத்த பகுதியில் காண்போம்.

- அருந்தா
4தமிழ்மீடியா

 

No comments:

Post a Comment