Wednesday, November 21, 2012

ஸ்கந்தன் வந்தான் : பகுதி -2

ஸ்கந்தன் வந்தான் : பகுதி -2


கந்தபுராணத்தை அடி எடுத்துக் கொடுத்து பாடவைத்தவரையும், கந்தன் புகழைக் கந்தபுராணமாகப் பாடியவரையும் உலகுக்கு அறிமுகம் செய்தவன் ஆறுமுகன். புராணம்பாடியதால் அறிமுகமானவர் கச்சியப்பசிவாச்சாரியார்.
காஞ்சிமாநகரின் குமரகோட்டத்தில் அர்ச்சகராக பணிபுரியும் காளத்தியப்பருக்கு மகனாக தோன்றினார். இளவயது முதற்கொண்டே இறைவன் மீது இடையறா அன்பு பூண்டவர், அவருக்கு ஏழாம் வயதில் உபநயனம் செய்யப் பெற்று வேதங்களையும் இலக்கண இலக்கியங்களையும் கற்று தேர்ந்தார். பின்னர் சமயதீட்சை, விசேசதீட்சை, நிர்வாணதீட்சை, ஆசார்யாபிசேகம் என்பன வற்றை முறைப்படி பெற்று தேவாரதிருவாசகங்கள், சைவாகமங்களின் கிரியாகாண்டங்களையும், ஞானகாண்டங்களையும் ஓதி உணர்ந்தார்.

கல்வி கற்றதன் பயன் இறைவனத்தொழுதலே, எனத்தெளிந்தார். குமரகோட்டத்து கந்தக் கடவுளை எந்நாளும் அஞ்சுவித சுத்திகள் செய்து, ஆறுகாலங்களிலும் எழுவகைப் பிறவி நீங்கும் பொருட்டு எண்வகை மலர்கள் சார்த்தி வழிபட்டு வந்தார். ஒருநாள் முழுமுதற்கடவுளான முருகப்பெருமான் கச்சியப்பர் கனவில் காட்சியளிக்கிறார். "அன்பனே' கந்தபுராணத்து ஆறு சங்கிதைகளுள் சங்கர சங்கிதையின் முதற்காண்டமாகிய சிவரகசிய காண்டத்தில், நமது சரித்திரம் அடங்கியுள்ளது. அதைக் கந்தபுராணம் எனும் பெயரில் தமிழிலே பெரும் காப்பியமாகப் பாடக்கடவாய்" என்று கட்டளையிட்டு, "திகடசக்கர" என்று அடியெடுத்துக் கொடுத்து அருள் செய்து கந்தபுராணத்தை எழுதி பாடவைத்து அரங்கேற்றம் செய்விக்கிறார்.
இதில் அதிசயம் என்னவென்றால் தினமும் நூறு செய்யுள்கள் பாடி எழுதிய ஏட்டையும் எழுத்தாணியையும் கந்தவேளின் இணையடியில் அர்த்தஜாமபூஜையின் பின்பு குமரகோட்டத்து கோயிலில் கச்சியப்பர் வைத்துவிட்டு திருக்கதவை திருக்காப்பிட்டு வீடுசெல்வார். மறுநாள் வழிபடும் பொருட்டு ஏட்டை எடுத்துப் பார்த்தால் அதில் சில சொற்கள் திருத்தப்பட்டு இருக்கும், கந்தப்பெருமானே தன்கர மலர்களால் திருத்தியமைத்தருளிய அதிசயம் கண்டு ஆனந்தம் மேலிட இறைவன் கருணையை நினைந்து கண்ணீர் சொரிவார். இப்படி செந்தமிழ்க்காவியமாக உருப்பெற்றது.
பின் அரங்கேற்றும் நாளும் வந்தது. அங்கு விழாதொடங்கியதும், கச்சியப்பரும் சுப வேளையில் "திகடசக்கரச் செம்முகம் ஐந்துளான்" எனத்தொடங்கி பாடுகிறார். பின்பு பொருள் கூறும் வேளை திகழ் தசக்கரம் செம்முகம் ஐந்து உளான் எனப் பதப்பிரிவினை செய்து விளங்கா நின்ற பத்து திருக்கைகளும், செவ்விய ஐந்து திருமுகங்களும் உள்ள சிவபெருமானுடைய என்று பொருள் செய்தார்.
அரங்கேற்ற அவையின்கண் இருந்த தமிழ்ப்புலவர்களுள் ஒருவர் சுவாமிகாள், திகழ் தசம் என்பது திகடசம் எனப் புணர்வதற்கு தொல்காப்பியம் முதலிய நூல்களுள் ஒன்றிலும் இல்லையே என்றார். ஐயா தாங்கள் கூறுவது சரிதான் ஆனால் இம்முதல் அடி என் வாக்கில்லை. இறைவன் திருவாக்கு, முருகன் தந்த முதலடி என்று கச்சியப்பர் கூறவும், அதை  ஏற்க மறுத்த புலவர் புன்முறுவல் செய்து முருகனின் முதலடியாயின் அவரே இதற்கு விளக்கமளிக்க வரவேண்டும். இல்லையேல் அரங்கேற்ற முடியாது; இப்படித்தடுக்கவே நாளை அரங்கேற்றுவோம், எனக்கூறியதும் சபையும் கலைந்து சென்றது.
கச்சியப்பர் உண்ணாது உள்ளம் உலைந்து முருகனை நினைந்து உருகினார். தன்னை மறந்த நிலையில் கிடந்த கச்சியப்பரின் கனவில் மீண்டும் தோன்றி அன்பனே நீ வருந்தற்க, சோழதேசத்தில் வீர சோழியம் என்ற இலக்கணநூல் இருக்கிறது.  அதில் பதினெட்டாம் செய்யுளில் திகடசம் என்று வரிகளுக்கு திகழ் தசம் என்ற பொருள் வருகின்றவாறு விதிக்கப்பட்டுள்ளது. சோழதேசத்துப் புலவன் நாளைக்கு இங்கு கொணர்ந்து கொடுத்து விளக்குவான். இப்படிக் கூறி திருவாய் மலர்ந்து மறைந்து விட்டார்.

மறுநாள்  ஆலயத்தில் சபை கூடியது. மக்கள் கூட்டடமும் புலவர்பெருமக்களும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தனர். கச்சியப்பரும் கந்தபுராண ஏடுகள் யாவற்றையும் அரங்கேற்றத் தயாராக எடுத்துக் கொண்டு வந்து இறைவனை மனதில் நினைத்த வண்ணம் அமர்ந்திருந்தார். அங்கு சோழநாட்டு புலவர் ஒருவர் வந்து வீரசோழிய இலக்கணநூலில் சந்திப்படலத்தில் பதினெட்டாம் செய்யுளை படித்துக்காட்டி சந்தேகத்தை ஓட்டினார். வாதிட்ட புலவர்கள் தமிழின் இலக்கணத்தையும் அதில் அடங்கியுள்ள அழகு தத்துவங்களை எண்ணி வியந்தனர், அச்சத்திலும் அதிசயத்திலும் தம்மை மறந்து நின்றிருந்தனர். வீரசோழியத்தை கச்சியப்பர் கையில் கொடுத்து விட்டு, புலவர் மறைந்த பின் இது வரை புலவர் வடிவில் வந்தது, முருகன்தான்  தமிழ் வளர தமிழுக்கு இலக்கணமாய் நின்ற இறைவன் புரிந்த திருவிளையாடல் இது என எண்ணி கச்சியப்பரின் திருவடியில் வீழ்ந்து வணங்கி துதிசெய்தனர். தடைசெய்த புலவரும் மன்னித்தருளுமாறு வேண்ட கச்சியப்பரும் தாங்கள் தடைப்படுத்தியதால் அன்றோ முருகவேளின் திருவருளை எல்லோரும் அறிய முடிந்தது. எல்லாம் ஈசன் செயல். இறைவனையே இங்கு அழைத்து யாவரும் கண்டுகளிக்கச் செய்த அற்புதச்செயலோடு கந்தபுராணம் அறங்கேறியமையால் கந்தபுராணத்திற்கு இணையாக எந்தப் புராணமும் இல்லை.
இது ஒருலட்சம் கிரந்தங்களைக்கொண்டதாம். பதினெண்புராணங்கள் பாடியவர் வேதவியாசர். அவர் பாடிய புராணங்கள்  மிகுதி பதினேழும் மூன்று லட்சங் கொண்ட கிரந்தங்களாகும். மகிமையால் மட்டுமல்லாமல் அளவிலும் சிறந்தது கந்தபுராணமாகும். இதிலே ஆறு பிரிவுகள் சனற்குமார சங்கிதை, சூரசங்கிதை, பிரமசங்கிதை, விட்டுணுசங்கிதை, சங்கர சங்கிதை, சூரசங்கிதை என்பனவாகும்.
இவற்றிலே சங்கரசங்கிதை பன்னிரு கண்டங்களை உடையது. இவற்றுள் முற்பட்டது சிவரகசிய கண்டம் இது 23ஆயிரம் கிரந்தங்களையுடையது. அதில் ஏழுகாண்டங்கள் அடங்கியுள்ளது. அதில் ஆறுகாண்டங்களையும் கச்சியப்பர் 10,345 செய்யுள்களாக தமிழில் இயற்றியுள்ளார். ஏழு காண்டங்களில் கடைசியில் உள்ளதை மட்டும் குகனேரியப்ப முதலியாரும், ஞானவரோதயரும் இதனை தமிழில் இயற்றி அருளிச் செய்தனர், ஆக உலகில் உள்ள சமய உண்மைகள் மதக்கொள்கைகள் யாவும் அடங்கியுள்ளது.கடிய கொடிய இருளை ஞாயிறு எளிதில் அகற்றுவது போல் கந்தப்பெருமானின் கீர்த்தி ஒன்றே கலியில் வரும் பாவங்களைப் போக்கவல்லது. இக்கதையைப் படிப்போர் கேட்போர் அனைவருக்கும் கந்தனருள் என்றும் கிடைத்து இன்பமுடன் வாழ்வார்கள். 

சூரபன்மன்  பல அரிய வரங்களை சிவபெருமானிடமிருந்து பெற்றிருந்தா, ஆணவம் கன்மம் மாயை எனும் மும்மலங்களால் கட்டுண்டு இருந்த சூரனை ஞான வேல் கொண்டு அவனை அடக்கினார். உலகெங்கும் வாழும் மனிதர் அன்பும் பக்தியும் பெருக பலபதிகளிலும் வீற்றிருந்து ஆறுபடை வீடுகளிலும் குடி அமர்ந்து கருணை பொழியும் கோலத்தில் வள்ளி தெய்வயாணை சமேத சிவ சுப்ரமண்யராக காட்சி தந்துகொண்டிருக்கிறார். நாமும் துதி பாடி துதித்து துணிவு பெறுவோம்.
"புன்னெறி அதனிற் செல்லும் போக்கினை விலக்கி மேலாம் நன்னெறி ஒழுகச்செய்து நவையறு காட்சி நல்கி
என்னையும் அடியன் ஆக்கி இருவினை நீக்கி யாண்ட பன்னிரு தடந்தோள் வள்ளல் பாதபங்கயங்கள் போற்றி"
முற்றும்
நன்றி - தகவலுதவி - "வாரியார் சிறப்புரை" (நூல்)
- அருந்தா

                                                                                                             4TamilMedia


 

 

No comments:

Post a Comment