Thursday, September 29, 2011

swami nellaiapper kanthimathi temple tirunelveli

தமிழ் நாட்டில், முக்கியமான ஐந்து சிவசபைகளில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தாமிர சபையாகவும் ஸ்ரீ குற்றால நாதர் ஆலயம் சித்திர சபையாகவும் உள்ளன. திருநெல்வேலி ஜங்சனிலிருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில். ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தென் வடலாக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவாலயமாக உள்ளது. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்த தலமாக விளங்குகிறது. சிவபெருமான் நடனமாடிய ஐந்து முக்கிய தலங்களில் நெல்லையப்பர் கோயில் திருத்தலமும் ஒன்று என்பது சிறப்பாகும். பாண்டிய நாட்டில் பாடல் பெற்ற 14 தேவாரத் தலங்களில் நெல்லையப்பர் கோயிலும் ஒன்றாகும்.

இக்கோயிலில் நெல்லையப்பர் என்கிற பெயரில் மூலவரும், காந்திமதி என்கிற பெயர் அம்பாளும் வீற்றிருக்கின்றனர். நெல்லையப்பர் கோயில் இரு மூலவரைக் கொண்ட "துவிம்மூர்த்தி' என்ற வகை கோயிலாகும். இரு மூலவர்களாக சுவாமி நெல்லையப்பர் லிங்க வடிவத்திலும், கோவிந்தராஜர் சயன கோலத்திலும் அருகருகே தனித்தனி சன்னதியில் பக்தர்களுக்குக் காட்சி தருகின்றனர். காந்திமதி அம்பாள் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.

இக் கோயிலின் தலமரம் மூங்கில் ஆகும். 32 தீர்த்தங்களைக் கொண்ட இக் கோயிலில் பொற்றாமரை, கருமாறி, வைரவ தீர்த்தம், சர்வதீர்த்தம், கம்பை, சிந்துபூந்துறை, துர்க்கை தீர்த்தம், குறுக்குத்துறை உள்ளிட்ட 9 தீர்த்தங்கள் முக்கியமானவை.

தல வரலாறு
பாண்டிய நாட்டை முழுவதும் கண்ட ராமபாண்டியன் ஆட்சி செய்யும்போது, ஒரு முறை கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. அக் கால கட்டத்தில் வேணுவனமாகக் காட்சியளித்த திருநெல்வேலியில் வேதபட்டர் என்கிற பட்டர் சிவபெருமானிடம் அதிக பக்தி கொண்டவராக விளங்கினவராக திகழ்ந்தார். தன் மேல் அளவுகடந்த பக்தி வைத்திருக்கும் வேதபட்டரின் பக்தியை சோதிக்க சிவபெருமான் எண்ணினார். அதன் காரணமாக சிவபெருமான் வேதபட்டரை வறுமைக்குள்ளாக்கினார். வேதபட்டரும் தினமும் வீடுவீடாக சென்று நெல் சேகரித்து இறைவனின் நைவேத்தியத்திற்காக பயன்படுத்தி வந்தார். ஒரு நாள் இவ்வாறு பெற்ற நெல்லை சன்னதி முன் உலரப் போட்டு குளிக்கச் சென்றார். அப்போது திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது. குளித்துக் கொண்டிருந்த வேதபட்டர் மழை தண்ணீரில் நெல் நனைந்துவிடப்போகிறது என்று எண்ணி வேகமாக ஓடி வந்து பார்க்கையில் நெல்லைச் சுற்றி மழை நீர் இருந்தும் நெல்லை கொண்டு செல்லாதபடி இருப்பதையும், நடுவே நெல் வெயிலில் காய்வதையும் கண்டு அசந்தார்.

மழை பெய்தும் நெல் நனையாததைக் கண்டு ஆச்சர்யப்பட்ட வேதபட்டர் இந்த அதிசயத்தை அரசரிடம் தெரிவிக்க ஓடினார். மன்னன் ராம பாண்டியனும் இந்த அதிசயத்தை காணவிரைந்தார். நெல் நனையாமல் இருப்பதைக் கண்ட மன்னனும் அசந்தார். உலகிற்காக மழை பெய்வித்து வேதபட்டரின் நெல் நனையாது காத்த இறைவனின் சிறப்பை உணர்ந்து மெய்சிலிர்த்தார். உடனே நெல் நனையாது காத்த இறைவனின் திருநாமத்தை அன்று முதல் நெல்வேலி நாதர் என்று அழைக்கலானார். அதுபோல் அதுவரை வேணுவனம் என்றிருந்த அப்பகுதியை நெல்வேலி எனவும் மாற்றியமைத்தார். நெல்வேலி தற்போது திருநெல்வேலி என அழைக்கப்படுகிறது. நெல்வேலி நாதர் நாளடைவில் நெல்லையப்பர் என அழைக்கப்படலானார். இப்படிப் புகழ் பெற்ற இத்திருத்தலத்தில் உள்ள இறைவன் சுவாமி வேணுநாதர், வேய்த நாதர், நெல்வேலி நாதர், சாலிவாடீசர் என்றும் அழைக்கப்படுகிறார்.


இத்தலத்தில் உள்ள அம்பாளம் வடிவுடை அம்மை, திருக்காமக்கோட்டமுடைய நாச்சியார் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். அதுபோல் விநாயகர் பொல்லாப் பிள்ளையார் என்றும், முருகன் ஆறுமுகப் பெருமான் என்றும் அழைக்கப்படுகிறார்.

கோயிலின் மூலக்கதை

முன்பொரு காலத்தில் அரண்மனைக்குப் பால் ஊற்றிக் கொண்டிருந்தாராம் பட்டர் ஒருவர். அப்படி ஒருநாள் அவர் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது வழியிலிருந்த கல் ஒன்று அவரின் காலை இடறி விட, பானையில் இருந்த பால் முழுதும் அந்தக் கல்லின் மேல் கொட்டி விட்டது. இந்த நிகழ்வு தொடர்ந்து நான்கைந்து நாட்கள் நடைபெற, பயந்து போன பட்டர் உடனே மன்னனிடம் சென்று முறையிட்டார். மன்னரும் வீரர்களை அழைத்துக் கொண்டு அவ்விடத்திற்குச் சென்றார். அவர்கள் அந்தக் கல்லை அங்கேயிருந்து அகற்ற முயல கோடரி கொண்டு வெட்டினர். அப்போது அந்தக் கல்லிலிருந்து இரத்தம் பீறிட்டுக் கொண்டு வர ஆரம்பித்தது. அனைவரும் செய்வதறியாது அரண்டு போய் நிற்க வானில் ஓர் அசீரிரி கேட்டதாம். அதன்படி அந்தக் கல்லைத் தோண்ட தலையின் இடப்பக்கம் வெட்டுக் காயத்துடன் சிவலிங்கம் வெளிப்பட்டதாம். இன்னமும் மூலவரின் தலையில் வெட்டுக் காயத்தைக் காணலாம். சுயம்புவாகத் தோன்றிய சிவலிங்கத்தை மூலவராகக் கொண்டு கோயில் உருவானது.

கோயிலின் அமைப்பு

கோயிலில் நுழைந்தவுடன் 10 அடி உயரத்திற்கு மேலாக ஒரு அழகான வெள்ளை நிற நந்தி படுத்திருக்கும். அதற்கு மேல் ஒரு துணித்திரை படுக்கை வாக்கில் கட்டப்பட்டிருக்கும். அடுத்து உள்ளே சென்றால் மிகப்பெரிய (சுமார் 9 அடி) ஆனைமுகன் வீற்றிருக்கிறார். மூலவரைச் சுற்றி 3 பிரகாரங்கள் உண்டு. முதல் பிரகாரத்தில் எல்லாக் கோயில்களையும் போல தக்ஷிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, பைரவர் சந்நிதிகள் உள்ளன. கோவிந்தப் பெருமாள் சிவனுக்கு அருகிலேயே சயனித்திருக்கிறார்.


இரண்டாவது பிரகாரம் சற்றுப் பெரியது. ஆரம்பத்திலேயே “ஏழிசை ஸ்வரங்கள் இசைக்கும் தூண்கள்” உள்ளன. இவற்றைத் தட்டிப் பார்த்தால் ஸ்வரங்களின் ஒலி கேட்கும். இந்தப் பிரகாரத்தில் தான் “தாமிர சபை” உள்ளது. 63 நாயன்மார்களின் சிலைகள், அஷ்ட லக்ஷ்மி, சனீஸ்வரர், சகஸ்ரலிங்கம் ஆகிய சிலைகளும் இருக்கின்றன.


மூன்றாவது பிரகாரம் மிகப் பெரியது. மிக அகலமானது. 3 யானைகள் சேர்ந்து நடந்தாலும் மீதம் இடம் இருக்கும். இப்பிரகாரத்திலிருந்து தான் அம்மா மண்டபம் வழியாக அம்மன் சந்நிதி செல்லலாம். இங்கு ஆஞ்சநேயர், ஐயப்பன், மஞ்சனத்தி அம்மன், சரஸ்வதி, பிரம்மா ஆகியோர்க்கு தனிச் சந்நிதிகள் உண்டு. கோயிலின் மிகப் பெரிய உள் தெப்பம் இங்குதான் உள்ளது. வெளித்தெப்பம் ஒன்று கோயிலுக்கு வெளியே அரை கிலோமீட்டர் தள்ளியுள்ளது. தெப்பத்திருவிழாவும் பிரசித்தி பெற்றது.

அம்மனுக்கு வெள்ளிக்கிழமைகளில் "தங்கப்பாவாடை" சார்த்தப்படுகிறது. அங்குள்ள ஊஞ்சல் மண்டபத்தில் அம்மனுக்கு வளைகாப்பு நடைபெறும். கார்த்திகை மாதம் திங்கட்கிழமை தோறும் பெண்கள் மாவிளக்கு எடுப்பது மிக விசேஷம்.

மூன்றாவது பிரகாரத்தில் முருகப்பெருமானுக்கு தனியாக பெரிய சந்நிதி உள்ளது. ஆறுமுகமாய், மயில் வாகனனாய், வள்ளி தெய்வானையுடன் சந்தனக்காப்பில் நின்றவாக்கில் இருப்பார். அங்கும் மிகப் பெரிய மண்டபம் உள்ளது. இங்கும் விளக்குப் பூஜைகள் நடைபெறும். அதையடுத்து மேற்கு வாசலைப் பார்த்து அமர்ந்திருக்கிற விநாயகரும், மேற்குவாசலும் வரும். அடுத்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற திறந்தவெளியரங்கம் ஒன்று உள்ளது. அதன் அருகில் யானை இருக்கும். அதன்பின் நவக்கிரகங்கள். புரட்டாசி மாதம் சனிக்கிழமையன்று பக்தர்கள் எள்விளக்கு ஏற்றிப்போட அகண்ட கிழி இருக்கும்.

இக் கோயிலில் மாதம் ஒரு திருவிழா நடைபெறுவது தனிச் சிறப்பாகும். இதில் முக்கியமாக ஆனிப் பெரும் திருவிழா மிகவும் பிரம்மாண்டமான முறையில் தொன்று தொட்டு நடைபெறுகிறது. இத் திருவிழாவில் தமிழகத்தில் உள்ள 2 வது பெரிய தேர் இழுக்கப்படும். இத் தேருடன் 5 தேர்கள் இழுக்கப்படும். மேலும், இக் கோயிலில்தான் நடராஜ பெருமான் திருநடனம் புரியம் தாமிரசபை உள்ளது. இந்த சபையில் மார்கழி மாதம் நடைபெறும் திருவாதிரை திருவிழாவின் கடைசிநாளன்று நடராஜபெருமான் திருநடனம் புரியும் வைபவம் நடைபெறுகிறது. இதே போல, ஐப்பசி மாதம் நடைபெறும் காந்திமதி அம்பாள் திருக்கல்யாண திருவிழாவும் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். மேலும் ஆடிப்பூர உற்சவம், புரட்டாசி நவராத்திரி திருவிழா என்று நிறைய திருவிழாக்கள் இக்கோயிலில் நடைபெறுகிறது.

சுவாமி நெல்லையப்பர் கோயில் பல கட்டங்களில், பல மன்னர்களால் கட்டப்பட்டது. தற்போது இருக்கும் நிலைவரை நின்றசீர் நெடுமாற பாண்டியனால் கட்டப்பட்டிருக்கிறது.

சாந்த சொரூபமாக வீற்றிருக்கும் காந்திமதி அம்பாளை திருமணமாகாத பெண்கள் தரிசித்தால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். இதே போல, சுவாமி சன்னதி அருகே உள்ள பொல்லாப்பிள்ளையாரை வணங்கினால், குழந்தை இல்லாத தம்பதிகள் விரைவில் குழந்தை பெறுவர் என்றும் பக்தர்கள் கூறுகின்றனர். இதில் குழந்தை இல்லாத தம்பதிகள் தங்களது வேண்டுதல் நிறைவேற, சங்கடஹர சதுர்த்தியன்று பொல்லாப்பிள்ளையாருக்கு 11 வகையான அபிஷேகம் செய்து, மோதகம் வைத்து, அருகம்புல் மாலை சூடி வழிபட்டால், அத் தம்பதியின் வேண்டுதல் உடனடியாக நிறைவேறும். இதே போல, 41 நாள்கள் தொடர்ந்து கணவரும், மனைவியும் தொடர்ந்து பக்தி சிரத்தையுடன், அர்ச்சனை செய்து வழிப்பட்டால் குழந்தை வரம் கிட்டும் என பக்தர்கள் நம்புகின்றனர்.

சுவாமி நெல்லையப்பரைத் தரிசிக்க விமானம் மூல வர விரும்புகிறவர்கள் சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள தூத்துக்குடி, வாகைக்குளம் விமான நிலையம் வந்து அங்கிருந்து கார் மூலமாகவோ, பஸ் மூலமாகவோ ஆலயம் வரலாம். ரயில் மூலம் வருகிறவர்கள் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் வந்து, அங்கிருந்து பஸ் மூலமாகவோ அல்லது வேறு வாகனங்கள் மூலமாகவோ கோயிலுக்கு வரலாம்.

கோயிலில் காலை 6.30 மணிக்கு திருவனந்தல் பூஜை, 7.30 மணிக்கு விளா பூஜை, 8.30 மணிக்கு சிறுகாலச் சந்தி, 9.30 மணிக்கு காலசந்தி ஆகியவை நடைபெறும். நண்பகல் 12 மணிக்கு உச்சிகாலம், மாலை 6 மணிக்கு சாயரட்சை, இரவு 8.30 மணிக்கு அர்த்த சாமம், இரவு 8.40 மணிக்கு சொக்கர் தீபாராதனை, 9.30 மணிக்கு வைரவர் பூஜை ஆகியவை தினமும் நடைபெறும்.

மேலும் விவ்ரங்களுக்கு
அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி திருக்கோயில், திருநெல்வேலி.
தொலைபேசி: +91-462-2339910