Saturday, July 23, 2011

முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கே!


அருணகிரிநாதர் பாடியது
பாடல்-1

கைத்தல நிறைகனி அப்பமொடு அவல்பொரி
கப்பிய கரிமுகன் அடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
கற்பகம் என வினை கடிதேகும்
மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன்
மற்பொரு திரள் புய மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு பணிவேனே
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே
முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம்
அச்சது பொடி செய்த அதிதீரா
அத்துயரது கொடு சுப்பிரமணி படும்
அப்புன மதனிடை இபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கண மணமருள் பெருமாளே.

பொருள்: கை நிறைய கனிவகை, அப்பம், அவல், பொரி ஏந்தி விருப்பத்துடன் உண்ணுகின்ற விநாயகப்பெருமானே! உனது திருவடிகளை விருப்பத்துடன் வழிபடுபவர்கள் மற்றும் ஞானநூல்களைக் கற்றிடும் பக்தர்களின் புத்தியில் வீற்றிருப்பவரே! கற்பகமரம் போல விரும்பும் வரங்களை அருள்பவரே! முன்பு செய்த தீவினைகளுக்குரிய பாவத்தை விரைந்து போக்குபவரே! ஊமத்தம் பூவையும், பிறைநிலவையும் தலையில் சூடியிருக்கும் சிவபெருமானின் புத்திரரே! மல்யுத்தம் புரியும் வீரமிக்க திரண்ட தோள்களையும், மதநீரைப் பொழிகின்ற யானை முகத்தையும் கொண்டவரே! மத்தளம் போன்ற பெரிய வயிறுக்கு சொந்தக்காரரே! உத்தமியாகிய பார்வதியின் தவப்புதல்வரே! தேன் ஒழுகும் புத்தம் புதுமலர்களால் உன்திருவடிகளைப் பணிந்து வணங்குகிறேன்.
சிறந்த மகாமேருமலையை எழுதும் பலகையாக்கி, எல்லாமொழிகளுக்கும் முன்னதாக முத்தமிழின் முறையினை எழுதிய முதல் தெய்வமே! அசுரர்களின் மூன்று கோட்டைகளையும் எரிப்பதற்காக, சிவபெருமான் ஏறிச்சென்ற தேரின் அச்சினை முறித்து பொடியாக்கிய வீரரே! முருகப்பெருமானின் வேண்டுகோளுக்கு இணங்கி தினைப்புனம் காத்த வள்ளிநாயகியின் முன்னே யானையாக உருவெடுத்து வந்து வள்ளி திருமணத்திற்கு அருள்புரிந்த விநாயகப்
பெருமானே! உம்மைப் போற்றி வணங்குகிறேன்.

பாடல்-2
உம்பர் தருத் தேனுமணிக் கசிவாகி
ஒண்கடலில் தேனமுதத் துணர்வூறி
இன்பரசத்தே பருகிப் பலகாலும்
என்றனுயிர்க்கு ஆதரவுற்று அருள்வாயே
தம்பி தனக்காக வனத் தணைவோனே
தந்தை வலத் தாலருள் கைக் கனியோனே
அன்பர் தமக்கான நிலைப் பொருளோனே
ஐந்துகரத் தானைமுகப் பெருமாளே.
பொருள்: கேட்டதைத் தரும் தேவலோகக் கற்பக மரம், காமதேனு, சிந்தாமணி போல விளங்குபவரே! பாற்கடலில் பிறந்த இனிய அமுதம் போல அன்புணர்வை மனதில் பெருகச் செய்பவரே! இன்ப உணர்வு பேரின்ப வெள்ளத்தை பலகாலமும் பருகி மகிழ அடியேனுக்கு ஆதரவு தந்து திருவருள் புரிய வேண்டும். தம்பி முருகனின் வள்ளி மீது கொண்ட காதலுக்காக யானை வடிவத்துடன் சென்றவரே! தந்தையாகிய ஈசனை வலம் வந்து அருட்கனியைப் பெற்றவரே! பக்தர்களுக்கு நிலைத்த இன்பத்தை வழங்கும் பரம்பொருளே! ஐந்துகரங்களையும், யானைமுகத்தையும் கொண்ட விநாயகப்பெருமானே! அருள்புரிவீராக.
விளக்கம்: ஒழுங்குமுறை மிக முக்கியம். விநாயகரே முழுமுதல் கடவுள் என சிவன் உட்பட அனைவரும் ஒப்புக்கொண்டனர். அப்படியானால், அவரை வணங்கிய பிறகல்லவா அசுரர்களின் கோட்டைகளை அழிக்க சிவபெருமான் தேரில் புறப்பட்டிருக்க வேண்டும். தந்தை என்ற காரணத்துக்காக அவரைச் சும்மா விட முடியுமா! அதற்காக தேர் அச்சை முறித்து தடையை உண்டாக்கினார் விநாயகர். தந்தைக்கு ஒரு நீதி...மற்றவர்களுக்கு ஒரு நீதியா! சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை முதன் முறையாக செயல்படுத்தியவர் விநாயகர். நாமும் அப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அருணகிரிநாதர் இப்பாடல் மூலம் சூசகமாக குறிப்பிடுகிறார். அத்துடன் திருப்புகழ் முருகனைப் பற்றியது என்றாலும், விநாயகரை வணங்கிய பிறகே தனது பாடல்களை பாடத்துவங்கினார்

No comments:

Post a Comment