Saturday, February 18, 2012

காளையருக்கு ஓரிரவு சிவராத்திரி: கன்னியருக்கு ஒன்பது நாள் நவராத்திரி!

நவராத்தியின் ஒன்பது நாட்களும் அம்மனை பலவிதமாக அலங்காரங்கள் செய்தும், துதிகள் பாடியும் அவள் அருளைப் பெறுகின்றனர். கன்னியர்கள் இந்த ஒன்பது நாட்களும் துதி செய்து பெற்ற பலனை, காளையர்கள் சிவராத்திரி அன்று ஓரிரவு விழித்திருந்து பெற்றுவிடுகின்றனர்.

சிவராத்திரி ஒவ்வொரு மாதமும் வந்தாலும், மாசிமாத கிருஷ்ணபட்ச சதுர்த்தசி தினமே மகா சிவராத்திரி எனப்படுகிறது. யுகம் யுகமாக கண் துஞ்சாமல் நம்மைக் காத்து ரட்சிக்கும் கயிலைக் கடவுளுக்காக, ஒரே ஒரு நாள் இரவு விழித்திருந்து, அவரை நாம் பூஜிக்கும் புண்ணிய ராத்திரி அது!

ராத்ர என்ற சொல்லுக்கு, யாவும் செயலற்று ஒடுங்கி நிற்றல் என்று பொருள். எனவேதான் உயிர்கள் செயலற்று உறங்கும் இரவுப்பொழுது, ராத்திரி எனும் பெயர் ஏற்றது. ஒருமுறை உலகமே இருண்டு கிடந்த மகா சங்கார (சம்ஹார) காலமாகிய ஊழிக் காலத்தில், பஞ்சபூதங்களும் செயலற்று மாயையில் ஒடுங்கும், எங்கும் இருள் சூழ, உலகம் செயலற்று எங்கும் அமைதி நிலவும். இந்த நிலையில், சிவபெருமான் ஒருவரே செயலாற்றுவார். அவரை அடுத்திருக்கும் சக்தியான தேவி, உலக உயிர்களை மீண்டெழச் செய்திட இரவு முழுதும் விழித்திருந்து மறுநாள் பொழுது விடிந்து சிவபூஜை செய்து உலகம் மீண்டும் தழைக்கும் என்ற வரத்தைப் பெற்றாள். அதோடு, தான் சிவ வழிபாடு செய்ததை நினைவு கூரும் விதமாக அந்த இரவை சிவராத்திரியாக அழைத்து முறைப்படி விரதமிருந்து இரவில் நான்கு கால சிவபூஜை செய்வோர்க்கு மங்களங்கள் யாவும் தந்து நிறைவில் மேலான பதமும் தரவேண்டும் எனவும் வேண்டினாள். ஈசன் அவ்வாறே வரம் அளித்தார். ராத்திரி என்ற சொல்லுக்கு அளித்தல் என்ற பொருளும் உண்டு. உலக உயிர்களும் மோட்சத்தை அளிப்பவர் சிவபெருமான். எனவே, சிவராத்திரி என அழைப்பதாகவும் கூறப்படுகிறது. ராத்ர என்பதற்குப் பூஜித்தல் என்பதும் ஒரு பொருள். ஆக, சிவனாரை பூஜிக்கத் தகுந்த இரவே சிவராத்திரி என்றும் கூறுவர். உணவும், உறக்கமும் உயிர்க்குப் பகை. இந்த இடத்தில் உணவு என்பது வினைகள். அதனைச் செய்யச் செய்ய வினைகள் மூண்டு திரும்பத் திரும்ப பிறக்க நேரும். உறக்கம் என்பது மாயைக்குட்பட்டு மயங்குதலாகும். ஆக... உணவு நீக்கம் என்பது வினைகளை அகற்றுதலும், விழித்திருத்தல் என்பது ஆன்மா தன்னை உணர்ந்து கொள்வதும் ஆகும். இந்த தாத்பரியத்தின்படி, மகா சிவராத்திரி தினத்தில் ஊண், உறக்கம் ஒழிப்பது என்பது உண்மையில் வினைகளை வென்று ஆன்மாவானது தன்னை உணர்ந்து கொள்வதற்காகவே என சிவராத்திரி விரதம் குறித்து அற்புதமாக விளக்கம் தருவார்கள் ஆன்றோர்கள்.

ஆதியும் அந்தமும் இல்லா பராபரவஸ்து ஜோதி ரூபத்திலிருந்து லிங்கமாக வெளிவந்து பின்னர் லாவண்ய ரூபத்தை அடைந்த புண்ணிய தினம்தான் சிவராத்திரி.
சிந்தை மகிழும் சிவராத்திரியில் லிங்க தரிசனம் செய்வதும், வழிபடுவதும் விசேஷம். லிங்கத்தில் இருந்தே அனைத்தும் உருவாயின. அதேபோன்று இறுதியில் லிங்கத்தில் எல்லாம் அடங்குகின்றன. படைப்பு, காப்பு, அழிப்பு ஆகியன அதிலேயே அடங்கியுள்ளன என்கின்றன புராணங்கள். சிவாலயங்களில் விளங்கும் பிரதிஷ்டா லிங்கங்கள் பிரம்மன், சிவா மற்றும் விஷ்ணுவைக் குறிக்கும் வகையிலேயே அமைகின்றன என ஆன்றோர் விளக்குவர். திருக்கோயில்களில் அருளும் சுயம்பு லிங்கங்களுக்கு அமையும் பீடம் பிரம்ம பாகமாகவும், நீர் விழும் கோமுகப் பகுதி மகாவிஷ்ணுவாகவும் போற்றப்படுகின்றன என்பர். ஆக, சிவலிங்க தரிசனத்தால் மும்மூர்த்தியரின் அருளையும் பெறலாம்.

சிவராத்திரி தினத்தன்று நடு இரவில் சிவபெருமான் தரிசனம் தருகின்றார். சிவராத்திரிக்கு 18 நாட்களுக்கு முன்னால் தட்சிணாயனத்தில் மகா விஷ்ணு அஷ்டமி திதி நள்ளரவில் ஸ்ரீகிருஷ்ணனாக அவதாரம் செய்தார். கிருஷ்ணன் அவதரித்த ராத்திரியை கிருஷ்ண ராத்திரி என்று சொல்வதில்லை. கிருஷ்ண ஜயந்தி என்றுதான் கொண்டாடுகிறோம். மாசிமாத தேய்பிறை சதுர்த்தசி செவ்வாய் அல்லது ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வரும் நாளிலும் நோற்கப்படும் சிவராத்திரி விரதம் மூன்றரைக் கோடி பலன் தரும் என்பர். அன்று சிவலிங்கம், விபூதிப்பை, ருத்திராட்சம், பொற்காசு, பசு, பூமி ஆகியவற்றைத் தானம் செய்தால் நல்லது என்று கூறுவர். குருவிடமிருந்து சிவ தீட்சை பெற்று சிவ பூஜை தொடங்க உகந்த நாள் சிவராத்திரி தினம். மகா சிவராத்திரியில் திருக்கோகர்ணம் (கர்நாடக மாநிலம்), ஸ்ரீசைலம்(ஆந்திர மாநிலம்) காளஹஸ்தி மற்றும் திருவைகாவூர் என்ற நான்கு தலங்களுக்குச் சென்று இறைவனைத் தரிசிக்க வேண்டும். நாகராஜனான வாசுகியும் மற்ற நாகங்களும் சிவராத்திரி இரவில் நான்கு சிவாலயங்களை வழிபட்டு பேறு பெற்றதாகக் கூறப்படுகிறது. முதல் காலத்தில் கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலிலும், இரண்டாம் காலத்தில் திருநாகேஸ்வரத்திலும், மூன்றாம் காலத்தில் திரும்பாம்புரத்திலும், நான்காம் காலத்தில் நாகூரிலும் நாகராஜன் வழிபாடு செய்தான் என்பது தொன்மையான தகவல்.

மகா சிவராத்திரி தினத்தில் லிங்க தரிசனம் செய்வதுடன், சிவலிங்கத் திருமேனியைப் போற்றும் லிங்கப் புராண குறுந்தொகை முதலான தெய்வப் பாடல்களைப் பாடி வழிபடுவது சிறப்பு. அந்த வகையில் சிவனாரைத் துதிக்கும் லிங்காஷ்டகம் பெரிதும் மகிமை வாய்ந்தது. ஆதிசங்கரர் அருளிய லிங்காஷ்டகத்தைப் படிப்பதால், ஜாதகத்தில் சூரியன் மற்றும் குருவால் ஏற்படும் குறைகள் நீங்கும்; பிணிகளும் அகன்று நலம் பெறலாம். சகல மங்கலங்களும் உண்டாகும். இதில் பிரம்மன், மகாவிஷ்ணு மற்றும் தேவர்களால் அர்ச்சிக்கப்படும் லிங்க மூர்த்தியை... நிர்மலமாகவும் பிரகாசத்துடன் கூடியதாகவும், சோபையுடன் கூடியதாகவும் உள்ள லிங்க மூர்த்தியை.. பிறப்பினால் ஏற்படும் துக்கதைப் போக்குகின்ற லிங்க மூர்த்தியை.. எப்போதும் மங்கலத்தை அருளும் மகாலிங்கத்தைப் போற்றுகிறேன்... எனத் துவங்கி எட்டு ஸ்லோகங்களால் பரமனைப் போற்றும் ஆதிசங்கரர், இந்த ஸ்லோகங்களைச் சொல்லி பரமேஸ்வரனை வழிபட சிவலோகத்தில் வசிக்கும் பேரானந்த பெருநிலையை அடைவான் என்றும் அறிவுறுத்துகிறார். இதோ... மகாலிங்கத்தைப் போற்றும் எட்டு ஸ்லோகங்களில் ஒன்று தரப்பட்டுள்ளது.

கனகமஹாமணிபூஷித லிங்கம்
பணிபதிவேஷ்டிதஸோபித லிங்கம்
தக்ஷஸுயக்ஞவினாஸன லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்

பொருள் : தங்கத்தாலும், சிறந்த மணிகளாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, நாகராஜனால் சுற்றப்பட்டு விளங்குகின்ற லிங்க மூர்த்தியை, தக்ஷ யாகத்தை நாசம் செய்த லிங்க மூர்த்தியை, மங்கலத்தைச் செய்யும் மகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன். இவ்வாறு விரதம் இருந்து வழிபட இயலாதவர்கள் சிவபெருமானின் எட்டு நாமங்களையாவது ஓயாமல் ஜபிக்க வேண்டும் அவை:

ஓம் ஸ்ரீபவாய நம
ஓம் ஸ்ரீசர்வாய நம
ஓம் ஸ்ரீருத்ராய நம
ஓம் ஸ்ரீபசுபதயே நம
ஓம் ஸ்ரீஉக்ரயே நம
ஓம் ஸ்ரீமகா தேவாய நம
ஓம் ஸ்ரீபீமாய நம
ஓம் ஸ்ரீஈசாநாய நம.

No comments:

Post a Comment