Thursday, March 1, 2012

பத்மநாபசுவாமி கோயில்: இதுவரை கணக்கிட்டது ரூ 90000 கோடி… முழுமையாக கணக்கிட 3 மாதங்கள் ஆகும்!

பத்மநாபசுவாமி கோயில்: இதுவரை கணக்கிட்டது ரூ 90000 கோடி… முழுமையாக கணக்கிட 3 மாதங்கள் ஆகும்!


திருவனந்தபுரம்: திருவனந்தரம் பத்மநாப சுவாமி கோவிலில் உள்ள சி பாதாள நிலவறை கடந்த 27-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி திறக்கப்பட்டு அவற்றில் உள்ள பொக்கிஷங்கள் மதிப்பிடப்பட்டன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை கணக்கெடுக்கப்பட்ட பொக்கிஷங்களின் மதிப்பு ரூ 90000 கோடி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சி அறையில் உள்ள கொஞ்சம் பொக்கிஷங்களின் மதிப்பு மட்டும்தான் இது.

மேலும் உள்ள 5 அறைகளின் பொக்கிஷங்களையும் சேர்த்து மதிப்பிட 3 மாதங்கள் தேவை என மதிப்பீட்டுக்குழு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு நாளும் கணக்கிட்டு முடிந்ததும் அந்தத் தொகையை கோயிலின் இணையதளத்தில் அறிவித்து வருகிறது நிர்வாகம்.

பத்மநாப சுவாமி கோயிலில் 6 ரகசிய நிலவறைகள் உள்ளன. இந்த ஆறிலும் பாண்டிய, சோழ, விஜயநகர, திருவாங்கூர் மன்னர்கள் காலத்து பொக்கிஷங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த பொக்கிஷங்கள் குறித்து தெரிந்திருந்தாலும், அவற்றை எடுத்துப் பயன்படுத்தாமல் கடவுளின் சொத்தாக நினைத்துக் காத்து வந்தனர் மன்னர்கள். கடைசியாக 1932-ல் நிலவறைகள் திறக்கப்பட்டு, பொக்கிஷங்களைச் சரிபார்த்து, மீண்டும் அங்கேயே வைத்துப் பூட்டினர் திருவாங்கூர் சமஸ்தான மன்னரும் திவானும்.

அந்த பொக்கிஷங்களை எடுத்து மதிப்பிட வேண்டும் என சுந்தரராஜன் என்பவரும், இன்னும் ஒருவரும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர, அதில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவைத் தொடர்ந்து நிலவறைகள் திறக்கப்பட்டன.

ஏ நிலவறை திறப்பு

6 நிலவறைகளில் 4 முதலில் திறக்கப்பட்டன. அந்த நிலவறைகளில் கற்பனைக்கும் எட்டாத அளவு தங்க, வைர, வைடூரிய பொக்கிஷங்கள் உள்ளன. பின்னர் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஏ நிலவறை திறக்கப்பட்டது. இதில்தான் 30 கிலோ எடையுள்ள மூன்றரை அடி உயர மகாவிஷ்ணுவின் சிலை காணப்பட்டது. அதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு மட்டுமே ரூ 500 கோடி என கணிக்கப்பட்டுள்ளது. இந்த சிலையுடன் 30 கிலோ எடை கொண்ட தங்க அங்கியும் காணப்படுகிறது.

5 கிலோ எடைகொண்ட ஸ்ரீகிருஷ்ணர் சிலையும் இந்த அறையில் உள்ளது. பல ஆயிரம் தங்க நாணயங்கள் இந்த ஏ அறையில் உள்ளன (இந்த விவரங்கள் எந்த தமிழ் பத்திரிகையிலும், இணையத்திலும் இடம்பெறவில்லை. இவற்றை பத்மநாபசுவாமி கோயில் இணையதளம் வெளியிட்டுள்ளது).


இவை தவிர பல ஆயிரம் தங்கக் காசுகள் இந்த அறையில் உள்ளன. இவை சோழ, பாண்டிய, விஜயநகர மன்னர்கள் காலத்து நாணயங்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஏ அறையில் 1 கிலோ வரை எடை கொண்ட தங்க கைகள், தங்க வடங்கள், தங்க தேங்காய்கள், எமரால்டு கற்கள் பதிக்கப்பட்ட ஏராளமான நகைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பு பெறுமானம் கொண்டவை.

மீண்டும் சி அறைக்கு திரும்பிய குழு

ஏ அறையில் உள்ள பொக்கிஷங்களைப் பார்த்த குழுவினர், இப்போது மீண்டும் சி முதல் எப் வரையிலான அறைகளில் உள்ளவற்றை மட்டும் மதிப்பிடுகின்றனர். இவற்றை முடித்த பிறகு ஏ அறை பொக்கிஷங்களையும், அதன் பிறகு பி அறை திறக்கப்பட்டு அதன் பொக்கிஷங்களும் மதிப்பிடப்பட உள்ளன.

இதைத் தொடர்ந்து சி அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த நூற்றாண்டு பழமை வாய்ந்த பத்மநாப சுவாமியின் முகக்கவசம், தங்க அங்கி மற்றும் சிறப்பு பூஜையின் போது பயன்படுத்தப்படும் கலைவடிவம் மிக்க தங்கம் மற்றும் வெள்ளி தட்டுகளை தனித்தனியாக எடுத்து அவற்றுக்கும் எண்கள் குறிக்கப்பட்டன. மேலும் 3 கிலோ எடை கொண்ட 30 தங்க குடங்கள் சரி பார்க்கப்பட்டு எண்கள் பதிவு செய்யப்பட்டன.

450 தங்க குடங்கள்

இந்த அறையில் மொத்தம் 450 தங்க குடங்கள் இருப்பதாக கோவில் நிர்வாகத்தினர் மதிப்பீட்டு குழு தலைவர் வேலாயுத நாயரிடம் தெரிவித்து இருந்தனர். எனவே அவை மொத்தத்தையும் மதிப்பீடு செய்வதற்கு முப்பையில் இருந்து வல்லுனர் குழு வரவழைக்கப்படுகிறது.

இந்த குழுவினர் தங்க குடங்களை மதிப்பீடு செய்வார்கள் என்று கூறப்படுகிறது. தற்போது கணக்கெடுக்கப்பட்டு உள்ள 30 தங்க குடங்களில் குறிக்கப்பட்டு உள்ள எண்கள் கம்ப்யூட்டர்களில் பதிவு செய்யப்பட்ள்ளன.

பி நிலவறை பின்னர் திறப்பு

பி நிலவறை மட்டும் இன்னும் திறக்கப்படவில்லை. 150 ஆண்டுகளாகத் திறக்கப்படாத அறை இது. எனவே அதில் என்ன உள்ளது என்பதைக் காண ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் மக்களும் கோயில் நிர்வாகத்தினரும்.

இப்போது இந்த 5 அறைகளின் பொக்கிஷ கணக்கெடுப்பை ஆரம்பித்துள்ளனர். பல வல்லுநர் குழு, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் உள்ளிட்டோர் முன்னிலையில் இந்த கணக்கெடுப்பு நடக்கிறது. அனைத்துப்பொருளையும் கணக்கெடுப்பதை வீடியோவில் பதிவு செய்கின்றனர். ஒவ்வொரு நகைகளுக்கும் பார்கோட் தரப்பட்டு, பதிவு செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 6 நாட்களாக மதிப்பிட்டப்பட்ட பொக்கிஷ மதிப்பு மட்டுமே ரூ 90000 கோடிகள். இன்னும் 3 மாதங்கள் கணக்கெடுப்புப் பணி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி முடிந்தால், இதன் மதிப்பு 10 மடங்குக்கும் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

பி அறையிலும் இதேபோல பொக்கிஷம் இருந்தால், இந்தக் கோயிலின் சொத்து மதிப்பு, இந்தியாவின் மொத்த பட்ஜெட்டை விட மூன்று மடங்கு அதிகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

-என்வழி செய்திகள்

No comments:

Post a Comment