உகாதி பண்டிகைக்கான பூஜை அறை அலங்காரம்
ஆந்திராவிலும், கர்நாடகாவிலும் வெள்ளிக்கிழமை உகாதி புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் வீடுகளை மாவிலைத் தோரணங்களால் அலங்கரித்து சிறப்பு பூஜைகளும், விருந்துகளும் செய்வது வழக்கம். உகாதி பண்டிகை அன்று பூஜை அறையை அலங்கரிக்க நாம் வழங்கும் சில ஆலோசனைகள்.
மாவிலை தோரணங்கள்
இந்திய பண்டிகைகளில் மார்ச் மாதத்தில் வருவது உகாதி புத்தாண்டு. இந்த மாதத்தில் மா மரங்கள் பூத்து, காய்த்து அறுவடைக்கு தயாராகிக் கொண்டிருக்கும். எனவே மாவிலைத் தோரணங்களால் வீடு வயில்களையும், பூஜை அறையை அலங்கரிப்பது சிறப்பாக இருக்கும். மா முருகக்கடவுளுக்கு உகந்த கனியாகும். எனவே மாவிலைத் தோரணம் கட்டுவது முருகப் பெருமானை வரவேற்பது போன்றதாகும்.
கலச கும்பம்
எந்த ஒரு பண்டிகை என்றாலும் பூஜை அறையில் கலசம் வைத்து வழிபடுவது வழக்கம். புத்தாண்டுக்கு ஒரு கும்பத்தில் தண்ணீர் ஊற்றி அதன் மேல் தேங்காய், வைத்து சுற்றிலும் மாவிலையால் அலங்கரிக்க வேண்டும். கும்பத்தின் நடுவில் ஸ்வஸ்திக் சின்னத்தை வரைந்து பூஜை அறையில் வைப்பது தெய்வீக அருள் கிடைக்கும்.
வர்ண கோலங்கள்
கோலம் என்பது தெய்வீக அருளை தரக்கூடியது. உகாதி பண்டிகை அன்று ஸ்பெசலாக வர்ணக் கோலமிடுவது சிறப்பு. பச்சரிசி மாவில் கோலமிட்டு வர்ண பூக்களால் அலங்கரிக்கலாம். அதன் நடுவில் கலசத்தை வைப்பது கூடுதல் அழகு தரும். பூஜை அறையின் நான்கு மூலைகளிலும் இதுபோல வர்ண கோலமிடலாம்.
நறுமண பூக்கள்
புது வருட தினத்தில் பூஜை அறையில் உள்ள படங்களுக்கு நறுமணம் மிக்க பூக்களால் அலங்கரிக்க வேண்டும். மல்லிகை, செவ்வந்தி மலர்களாலும், துளசி இலை கொண்டும் அலங்கரிக்கலாம். சந்தனம், பன்னீர் தெளிப்பதன் மூலம் பூஜை அறையில் நறுமணம் வீசும்.
இது போன்ற அலங்காரங்களை பூஜை அறையில் செய்வதன் மூலம் இல்லமே இறைத்தன்மை நிறைந்ததாக திகழும்.
உகாதி ஸ்பெசல் : கடலைப் பருப்பு இனிப்பு போளி
உகாதி பண்டிகையின் போது ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் செய்யப்படும் இனிப்பு பருப்பு போளி. இது சுவையானதோடு சத்தானதும் கூட. தென்தமிழ்நாட்டிலும், கொங்கு மண்டலத்திலும் இனிப்பு போளி செய்யப்படுகிறது.
தேவையானப் பொருட்கள்
கடலைப்பருப்பு - 4 கப்
அச்சு வெல்லம் - 10 பெரியது
ஏலக்காய்த்தூள் - சிறிது
மைதா மாவு - 2 1/2 கப்
சர்க்கரை – 2 டீ ஸ்பூன்
நல்லெண்ணெய் - 200 மிலி
பூரணம் செய்முறை
கடலைப்பருப்புடன் தண்ணீர் சேர்த்து குழைந்து போகாமல் வேகவைத்து எடுக்கவேண்டும். தண்ணீரை வடித்து சிறிது நேரம் உலர விட வேண்டும். பிறகு மிக்ஸியில் கடலைப்பருப்பையும் வெல்லத்தையும் கெட்டியாக சேர்த்து அரைக்க வேண்டும். அதில் ஏலக்காய்த்தூள் சேர்த்து கலக்க வேண்டும். இதை உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும்.
போளி செய்முறை
மைதா மாவில் சிறிது சர்க்கரை மற்றும் தேவையான அளவு நீர சேர்த்து சப்பாத்தி மாவும் பதத்திற்கு பிசைந்து, கடைசியாக சிறிது நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து வைக்க வேண்டும். 5 மணிநேரம் ஊறவைக்க வேண்டும்.
ஒரு பிளாஸ்டிக் தாளில் சிறிதளவு மைதா மாவு கலவையை எடுத்து வைத்து கைகளால் அழுத்தி பரப்பி விடவும். அதன் மேல் கடலைபருப்பு உருண்டையை வைத்து மூடவும். பிறகு அதை ரொட்டி போல் தட்டவும். நல்லெண்ணை தொட்டு செய்தால் கைகளில் ஒட்டாமல் செய்யலாம். தோசைக்கல்லில் வைத்து, சிறிது நல்லெண்ணை விட்டு சப்பாத்தி போல் சுட்டு எடுக்கவும். சூடான சுவையான பருப்பு போளி ரெடி.
இதில் கடலைப்பருப்புடன் தேங்காய்த்துருவலை வறுத்தும் பூரணமாக சேர்த்து செய்யலாம். நல்லெண்ணெய்க்கு பதிலாக சுடும் போது நெய்யும் ஊற்றலாம்.
No comments:
Post a Comment