Wednesday, March 21, 2012

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் (Naalaayira Divya Prabandham) - பெரிய திருமொழி எட்டாம் பத்து

திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி






பெரிய திருமொழி எட்டாம் பத்து

1648 சிலையிலங்கு பொன்னாழி திண்படைதண்
டொண்சங்கம் என்கின் றாளால்,
மலையிலங்கு தோள்நான்கே மற்றவனுக்
கெற்றேகாண் என்கின் றாளால்,
முலையிலங்கு பூம்பயலை முன்போட
அன்போடி யிருக்கின் றாளால்,
கலையிலங்கு மொழியாளர் கண்ணபுரத்
தம்மானைக் கண்டாள் கொல்லோ. 1.1

1649 செருவரைமுன் னாசறுத்த சிலையன்றோ
கைத்தலத்த தென்கின் றாளால்,
பொருவரைமுன் போர்தொலைத்த பொன்னாழி
மற்றொருகை என்கின் றாளால்,
ஒருவரையும் நின்னொப்பா ரொப்பிலர்
என்னப்பா என்கின் றாளால்,
கருவரைபோல் நின்றானைக் கண்ணபுரத்
தம்மானைக் கண்டாள் கொல்லோ. 1.2

1650 துன்னுமா மணிமுடிமேல் துழாயலங்கல்
தோன்றுமால் என்கின் றாளால்,
மின்னுமா மணிமகர குண்டலங்கள்
வில்வீசும் என்கின் றாளால்,
பொன்னின்மா மணியாரம் அணியாகத்
திலங்குமால் என்கின் றாளால்,
கன்னிமா மதிள்புடைசூழ் கண்ணபுரத்
தம்மானைக் கண்டாள் கொல்லோ. 1.3

1651 தாராய தண்டுளப வண்டுழுத
வரைமார்பன் என்கின் றாளால்,
போரானைக் கொம்பொசித்த புட்பாகன்
என்னம்மான் என்கின் றாளால்,
ஆரானும் காண்மின்கள் அம்பவளம்
வாயவனுக் கென்கின் றாளால்,
கார்வானம் நின்றதிருக் கண்ணபுரத்
தம்மானைக் கண்டாள் கொல்லோ. 1.4

1652 அடித்தலமும் தாமரையே அங்கையும்
பங்கயமே என்கின் றாளால்,
முடித்தலமும் பொற்பூணு மென்நெஞ்சத்
துள்ளகலா என்கின் றாளால்,
வடித்தடங்கண் மலரவளோ வரையாகத்
துள்ளிருப்பாள் என்கின் றாளால்,
கடிக்கமலம் கள்ளுகுக்கும் கண்ணபுரத்
தம்மானைக் கண்டாள் கொல்லோ. 1.5

1653 பேரா யிரமுடைய பேராளன்
பேராளன் என்கின் றாளால்,
ஏரார் கனமகர குண்டலத்தன்
எண்தோளன் என்கின் றாளால்,
நீரார் மழைமுகிலே நீள்வரையே
ஒக்குமால் என்கின் றாளால்,
காரார் வயலமரும் கண்ணபுரத்
தம்மானைக் கண்டாள் கொல்லோ. 1.6

1654 செவ்வரத்த வுடையாடை யதன்மேலோர்
சிவளிகைக்கச் சென்கின் றாளால்,
அவ்வரத்த வடியிணையு மங்கைகளும்
பங்கயமே என்கின் றாளால்,
மைவளர்க்கும் மணியுருவம் மரகதமோ
மழைமுகிலோ என்கின் றாளால்,
கைவளர்க்கு மழலாளர் கண்ணபுரத்
தம்மானைக் கண்டாள் கொல்லோ. 1.7

1655 கொற்றப்புள் ளொன்றேறி மன்னூடே
வருகின்றான் என்கின் றாளால்,
வெற்றிப்போ ரிந்திரற்கு மிந்திரனே
ஒக்குமால் என்கின் றாளால்,
பெற்றக்கா லவனாகம் பெண்பிறந்தோம்
உய்யோமோ என்கின் றாளால்,
கற்றநூல் மறையாளர் கண்ணபுரத்
தம்மானைக் கண்டாள் கொல்லோ. 1.8

1656 வண்டமரும் வனமாலை மணிமுடிமேல்
மணநாறும் என்கின் றாளால்,
உண்டிவர்பா லன்பெனக்கென் றொருகாலும்
பிரிகிலேன் என்கின் றாளால்,
பண்டிவரைக் கண்டறிவ தெவ்வூரில்
யாம் என்றே பயில்கின் றாளால்,
கண்டவர்தம் மனம்வழங்கும் கண்ணபுரத்
தம்மானைக் கண்டாள் கொல்லோ. 1.9

1657 மாவளரு மென்னோக்கி மாதராள்
மாயவனைக் கண்டாள் என்று,
காவளரும் கடிபொழில்சூழ் கண்ணபுரத்
தம்மானைக் கலியன் சொன்ன,
பாவளரும் தமிழ்மாலை பன்னியநூல்
இவையைந்து மைந்தும் வல்லார்,
பூவளரும் கற்பகம்சேர் பொன்னுலகில்
மன்னவராய்ப் புகழ்தக் கோரே. 1.10

1658 தெள்ளியீர். தேவர்க்கும் தேவர் திருத்தக்கீர்
வெள்ளியீர் வெய்ய விழுநிதி வண்ணர்,ஓ
துள்ளுநீர்க் கண்ண புரம்தொழு தாளிவள்
கள்வியோ, கைவளை கொள்வது தக்கதே? 2.1

1659 நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள்,
காணுமோ கண்ண புரமென்று காட்டினாள்,
பாணனார் திண்ண மிருக்க இனியிவள்
நாணுமோ, நன்றுநன் றுநறை யூரர்க்கே. 2.2

1660 அருவிசோர் வேங்கடம் நீர்மலை என்றுவாய்
வெருவினாள் மெய்யம் வினவி யிருக்கின்றாள்,
பெருகுசீர்க் கண்ண புரம் என்று பேசினாள்
உருகினாள், உள்மெலிந் தாள் இது வென்கொலோ. 2.3

1661 உண்ணும்நா ளில்லை உறக்கமுந் தானில்லை,
பெண்மையும் சால நிறைந்திலள் பேதைதான்,
கண்ணனூர் கண்ண புரம்தொழும் கார்க்கடல்
வண்ணர்மேல், எண்ண மிவட்கிது வென்கொலோ. 2.4

1662 கண்ணனூர் கண்ண புரம்தொழும் காரிகை,
பெண்மையும் தன்னுடை யுண்மை யுரைக்கின்றாள்,
வெண்ணெயுண் டாப்புண்ட வண்ணம் விளம்பினாள்,
வண்ணமும் பொன்னிற மாவ தொழியுமே. 2.5

1663 வடவரை நின்றும்வந்து இன்று கணபுரம்,
இடவகை கொள்வது யாம் என்று பேசினாள்,
மடவரல் மாதரென் பேதை யிவர்க்கிவள்
கடவதென், கண்டுயி லின்றிவர் கொள்ளவே. 2.6

1664 தரங்கநீர் பேசினும் தண்மதி காயினும்,
இரங்குமோ எத்தனை நாளிருந் தெள்கினாள்
துரங்கம்வாய் கீண்டுகந் தானது தொன்மை ஊர்
அரங்கமே என்ப திவள்தனக் காசையே. 2.7

1665 தொண்டெல்லாம் நின்னடி யேதொழு துய்யுமா
கண்டு,தான் கணபுரம் கைதொழப் போயினாள்
வண்டுலாம் கோதையென் பேதை மணிநிறம்
கொண்டுதான், கோயின்மை செய்வது தக்கதே? 2.8

1666 முள்ளெயி றேய்ந்தில, கூழை முடிகொடா,
தெள்ளிய ளென்பதோர் தேசிலள் என்செய்கேன்,
கள்ளவிழ் சோலைக் கணபுரம் கைதொழும்
பிள்ளையை, பிள்ளையென் றெண்ணப் பெறுவரே? 2.9

1667 கார்மலி கண்ண புரத்தெம் அடிகளை,
பார்மலி மங்கையர் கோன்பர காலன்சொல்,
சீர்மலி பாட லிவைபத்தும் வல்லவர்,
நீர்மலி வையத்து நீடுநிற் பார்களே. 2.10

1668 கரையெடுத்த சுரிசங்கும் கனபவளத் தெழுகொடியும்,
திரையெடுத்து வருபுனல்சூழ் திருக்கண்ண புரத்துறையும்,
விரையெடுத்த துழாயலங்கல் விறல்வரைத்தோள் புடைபெயர
வரையெடுத்த பெருமானுக் கிழந்தேனென் வரிவளையே. 3.1

1669 அரிவிரவு முகிற்fகணத்தா னகில்புகையால் வரையோடும்
தெரிவரிய மணிமாடத் திருக்கண்ண புரத்துறையும்,
வரியரவி னணைத்துயின்று மழைமதத்த சிறுதறுகண்,
கரிவெருவ மருப்பொசித்தாற் கிழந்தேனென் கனவளையே. 3.2

1670 துங்கமா மணிமாட நெடுமுகட்டின் சூலிகைபோம்
திங்கள்மா முகில்துணிக்கும் திருக்கண்ண புரத்துறையும்
பைங்கண்மால் விடையடர்த்துப் பனிமதிகோள் விடுத்துகந்த
செங்கண்மா லம்மானுக் கிழந்தேனென் செறிவளையே. 3.3

1671 கணமருவு மயிலகவு கடிபொழில்சூழ் நெடுமறுகில்,
திணமருவு கனமதிள்சூழ் திருக்கண்ண புரத்துறையும்,
மணமருவு தோளாய்ச்சி யார்க்கப்போய் உரலோடும்
புணர்மருத மிறநடந்தாற் கிழந்தேனென் பொன்வளையே. 3.4

1672 வாயெடுத்த மந்திரத்தா லந்தணர்தம் செய்தொழில்கள்
தீயெடுத்து மறைவளர்க்கும் திருக்கண்ண புரத்துறையும்
தாயெடுத்த சிறுகோலுக் குளைந்தோடித் தயிருண்ட,
வாய்துடைத்த மைந்தனுக் கிழந்தேனென் வரிவளையே. 3.5

1673 மடலெடுத்த நெடுந்தாழை மருங்கெல்லாம் வளர்பவளம்,
திடலெடுத்துச் சுடரிமைக்கும் திருக்கண்ண புரத்துறையும்,
அடலடர்த்தன் றிரணியனை முரணழிய அணியுகிரால்,
உடலெடுத்த பெருமானுக் கிழந்தேனென் ஒளிவளையே. 3.6

1674 வண்டமரும் மலர்ப்புன்னை வரிநீழ லணிமுத்தம்,
தெண்டிரைகள் வரத்திரட்டும் திருக்கண்ண புரத்துறையும்,
எண்டிசையு மெழுசுடரு மிருநிலனும் பெருவிசும்பும்,
உண்டுமிழ்ந்த பெருமானுக் கிழந்தேனென் ஒளிவளையே. 3.7

1675 கொங்குமலி கருங்குவளை கண்ணாக தெண்கயங்கள்
செங்கமல முகமலர்த்தும் திருக்கண்ண புரத்துறையும்,
வங்கமலி தடங்கடலுள் வரியரவி னணைத்துயின்றா,
செங்கமல நாபனுக் கிழந்தேனென் செறிவளையே. 3.8

1676 வாராளு மிளங்கொங்கை நெடும்பணைத்தோள் மடப்பாவை,
சீராளும் வரைமார்வன் திருக்கண்ண புரத்துறையும்,
பேராள னாயிரம்பே ராயிரவா யரவணைமேல்
பேராளர் பெருமானுக் கிழந்தேனென் பெய்வளையே. 3.9

1677 தேமருவு பொழில்புடைசூழ் திருக்கண்ண புரத்துறையும்
வாமனனை, மறிகடல்சூழ் வயலாலி வளநாடன்,
காமருசீர்க் கலிகன்றி கண்டுரைத்த தமிழ்மாலை,
நாமருவி யிவைபாட வினையாய நண்ணாவே. 3.10

1678 விண்ணவர் தங்கள் பெருமான் திருமார்வன்,
மண்ணவ ரெல்லாம் வணங்கும் மலிபுகழ்சேர்,
கண்ண புரத்தெம் பெருமான் கதிர்முடிமேல்,
வண்ண நறுந்துழாய் வந்தூதாய் கோல்தும்பீ. 4.1

1679 வேத முதல்வன் விளங்கு புரிநூலன்,
பாதம் பரவிப் பலரும் பணிந்தேத்தி,
காதன்மை செய்யும் கண்ணபுரத் தெம்பெருமான்,
தாது நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ. 4.2

1680 விண்டமல ரெல்லா மூதிநீ யென்பெறுதி,
அண்ட முதல்வ னமரர்க ளெல்லாரும்,
கண்டு வணங்கும் கண்ணபுரத் தெம்பெருமான்
வண்டு நறுந்துழாய் வந்தூதாய் கோல்தும்பீ. 4.3

1681 நீர்மலி கின்றதோர் மீனாயோ ராமையுமாய்,
சீர்மலி கின்றதோர் சிங்க வுருவாகி,
கார்மலி வண்ணன் கண்ணபுரத் தெம்பெருமான்,
தார்மலி தண்டுழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ. 4.4

1682 ஏரார் மலரெல்லா மூதிநீ யென்பெறுதி,
பாரா ருலகம் பரவப் பெருங்கடலுள்,
காராமை யான கண்ணபுரத் தெம்பெருமான்,
தாரார் நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ. 4.5

1683 மார்வில் திருவன் வலனேந்து சக்கரத்தன்,
பாரைப் பிளந்த பரமன் பரஞ்சோதி,
காரில் திகழ்காயா வண்ணன் கதிர்முடிமேல்,
தாரில் நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ. 4.6

1684 வாமனன் கற்கி மதுசூதன் மாதவன்
தார்மன்னு தாச ரதியாய தடமார்வன்,
காமன்றன் தாதை கண்ணபுரத் தெம்பெருமான்,
தாம நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ. 4.7

1685 நீல மலர்கள் நெடுநீர் வயல்மருங்கில்,
சால மலரெல்லா மூதாதே, வாளரக்கர்
காலன் கண்ணபுரத் தெம்பெருமான் கதிர்முடிமேல்,
கோல நறுந்துழாய் கொண்டூதாய் கோல்தும்பீ. 4.8

1686 நந்தன் மதலை நிலமங்கை நல்துணைவன்,
அந்த முதல்வன் அமரர்கள் தம்பெருமான்,
கந்தம் கமழ்காயா வண்ணன் கதிர்முடிமேல்,
கொந்து நறுந்துழாய் கொண்டூதாய் கோல்தும்பீ. 4.9

1687 வண்டமருஞ் சோலை வயலாலி நன்னாடன்,
கண்டசீர் வென்றிக் கலிய னொலிமாலை,
கொண்டல் நிறவண்ணன் கண்ண புரத்தானை,
தொண்டரோம் பாட நினைந்தூதாய் கோல்தும்பீ. 4.10

1688 தந்தை காலில் விலங்கறவந்து
தோன்றிய தோன்றல்பின், தமியேன்றன்
சிந்தை போயிற்றுத் திருவருள்
அவனிடைப் பெறுமள விருந்தேனை,
அந்தி காவலனமுதுறு
பசுங்கதி ரவைசுட அதனோடும்,
மந்த மாருதம் வனமுலை
தடவந்து வலிசெய்வ தொழியாதே. 5.1

1689 மாரி மாக்கடல் வளைவணற்
கிளையவன் வரைபுரை திருமார்பில்,
தாரி னாசையில் போயின
நெஞ்சமும் தாழ்ந்ததோர் துணைகாணேன்,
ஊரும் துஞ்சிற்றுலகமும்
துயின்றது ஒளியவன் விசும்பியங்கும்,
தேரும் போயிற்றுத் திசைகளும்
மறைந்தன செய்வதொன் றறியேனே. 5.2

1690 ஆயன் மாயமே யன்றிமற்
றென்கையில் வளைகளும் இறைநில்லா,
பேயின் ஆருயி ருண்டிடும்
பிள்ளைநம் பெண்ணுயிர்க்
கிரங்குமோ, தூய மாமதிக் கதிர்ச்சுடத்
துணையில்லை இணைமுலை வேகின்றதால்,
ஆயன் வேயினுக் கழிகின்ற
துள்ளமும் அஞ்சேலென் பாரிலையே. 5.3

1691 கயங்கொள் புண்தலைக் களிறுந்து
வெந்திறல் கழல்மன்னர்
பெரும்போரில், மயஙகவெண்சங்கம் வாய்வைத்த
மைந்தனும் வந்திலன், மறிகடல்நீர்
தயங்கு வெண்திரைத் திவலைநுண்
பனியென்னும் தழல்முகந் திளமுலைமேல்,
இயங்கு மாருதம் விலங்கிலென்
ஆவியை எனக்கெனப் பெறலாமே. 5.4

1692 ஏழு மாமரம் துளைபடச்
சிலைவளைத் திலங்கையை மலங்குவித்த
ஆழி யான்,நமக் கருளிய
அருளொடும் பகலெல்லை கழிகின்றதால்,
தோழி. நாமிதற் கென்செய்தும்
துணையில்லை சுடர்படு முதுநீரில்,
ஆழ ஆழ்கின்ற ஆவியை
அடுவதோர் அந்திவந் தடைகின்றதே. 5.5

1693 முரியும் வெண்டிரை முதுகயம்
தீப்பட முழங்கழ லெரியம்பின்,
வரிகொள் வெஞ்சிலை வளைவித்த
மைந்தனும் வந்திலன் என்செய்கேன்,
எரியும் வெங்கதிர் துயின்றது
பாவியேன் இணைநெடுங் கண்துயிலா,
கரிய நாழிகை ஊழியில்
பெரியன கழியுமா றறியேனே. 5.6

1694 கலங்க மாக்கடல் கடைந்தடைத்
திலங்கையர் கோனது
வரையாகம், மலங்க வெஞ்சமத் தடுசரம்
துரந்தவெம் மடிகளும் வாரானால்,
இலங்கு வெங்கதி ரிளமதி
யதனொடும் விடைமணி யடும்,ஆயன்
விலங்கல் வேயின தோசையு
மாயினி விளைவதொன் றறியேனே. 5.7

1695 முழுதிவ் வையகம் முறைகெட
மறைதலும் முனிவனும்
முனிவெய்தி, மழுவி னால்மன்னர் ஆருயிர்
வவ்விய மைந்தனும் வாரானால்,
ஒழுகு நுண்பனிக் கொடுங்கிய
பேடையை யடங்கவஞ் சிறைகோலி,
தழுவு நள்ளிருள் தனிமையிற்
கடியதோர் கொடுவினை யறியேனே. 5.8

1696 கனஞ்செய் மாமதிள் கணபுரத்
தவனொடும் கனவினி
லவன்தந்த, மனஞ்செ யின்பம்வந் துள்புக
வெள்கியென் வளைநெக இருந்தேனை,
சினஞ்செய் மால்விடைச் சிறுமணி
ஓசையென் சிந்தையைச் சிந்துவிக்கும்,
அனந்த லன்றிலின் அரிகுரல்
பாவியே னாவியை யடுகின்றதே. 5.9

1697 வார்கொள் மென்முலை மடந்தையர்
தடங்கடல் வண்ணனைத் தாள்நயந்து,
ஆர்வத் தாலவர் புலம்பிய
புலம்பலை அறிந்துமுன் உரைசெய்த,
கார்கொள் பைம்பொழில் மங்கையர்
காவலன் கலிகன்றி யொலிவல்லார்,
ஏர்கொள் வைகுந்த மாநகர்
புக்கிமை யவரொடும் கூடுவரே. 5.10

1698 தொண்டீர். உய்யும் வகைகண்டேன்
துளங்கா அரக்கர் துளங்க முன்
திண்டோள் நிமிரச் சிலைவளையச்
சிறிதே முனிந்த திருமார்பன்,
வண்டார் கூந்தல் மலர்மங்கை
வடிக்கண் மடந்தை மாநோக்கம்
கண்டாள், கண்டு கொண்டுகந்த
கண்ண புரம்நாம் தொழுதுமே. 6.1

1699 பொருந்தா அரக்கர் வெஞ்சமத்துப்
பொன்ற அன்று புள்ளூர்ந்து,
பெருந்தோள் மாலி தலைபுரளப்
பேர்ந்த அரக்கர் தென்னிலங்கை,
இருந்தார் தம்மை யுடன்கொண்டங்
கெழிலார் பிலத்துப் புக்கொளிப்ப,
கருந்தாள் சிலைகைக் கொண்டானூர்
கண்ண புரம்நாம் தொழுதுமே. 6.2

1700 வல்லி யிடையாள் பொருட்டாக
மதிள்நீ ரிலங்கை யார்கோவை,
அல்லல் செய்து வெஞ்சமத்துள்
ஆற்றல் மிகுந்த ஆற்றலான்,
வல்லாள் அரக்கர் குலப்பாவை
வாட முனிதன் வேள்வியை,
கல்விச் சிலையால் காத்தானூர்
கண்ண புரம்நாம் தொழுதுமே. 6.3

1701 மல்லை முந்நீ ரதர்பட
வரிவெஞ் சிலைகால் வளைவித்து,
கொல்லை விலங்கு பணிசெய்யக்
கொடியோன் இலங்கை புகலுற்று,
தொல்லை மரங்கள் புகப்பெய்து
துவலை நிமிர்ந்து வானணவ,
கல்லால் கடலை யடைத்தானூர்
கண்ண புரம்நாம் தொழுதுமே. 6.4

1702 ஆமை யாகி அரியாகி
அன்ன மாகி அந்தணர்தம்
ஓம மாகி ஊழியாய்
உலகு சூழ்ந்த நெடும்புணரி
சேம மதிள்சூழிலங்கைக்கோன்
சிரமுங்கரமும் துணித்து முன்
காமற் பயந்தான் கருதுமூர்
கண்ண புரம்நாம் தொழுதுமே. 6.5

1703 வருந்தா திருநீ மடநெஞ்சே
நம்மேல் வினைகள் வாரா முன்
திருந்தா அரக்கர் தென்னிலங்கை
செந்தீ யுண்ணச் சிவந்தொருநாள்,
பெருந்தோள் வாணற் கருள்புரிந்து
பின்னை மணாள னாகி முன்
கருந்தாள் களிறொன் றொசித்தானூர்
கண்ண புரம்நாம் தொழுதுமே. 6.6

1704 இலையார் மலர்ப்பூம் பொய்கைவாய்
முதலை தன்னால் அடர்ப்புண்டு,
கொலையார் வேழம் நடுக்குற்றுக்
குலைய அதனுக் கருள்புரிந்தான்,
அலைநீ ரிலங்கைத் தசக்கிரீவற்கு
இளையோற் கரசை யருளி,முன்
கலைமாச் சிலையால் எய்தானூர்
கண்ண புரம்நாம் தொழுதுமே. 6.7

1705 மாலாய் மனமேயருந்துயரில்
வருந்தா திருநீ வலிமிக்க
காலார் மருதும் காய்சினத்த
கழுதும் கதமாக் கழுதையும்,
மாலார் விடையும் மதகரியும்
மல்லர் உயிரும் மடிவித்து,
காலால் சகடம் பாய்ந்தானூர்
கண்ண புரம்நாம் தொழுதுமே. 6.8

1706 குன்றால் மாரி பழுதாக்கிக்
கொடியே ரிடையாள் பொருட்டாக,
வன்றாள் விடையே ழன்றடர்த்த
வானோர் பெருமான் மாமாயன்,
சென்றான் தூது பஞ்சவர்க்காய்த்
திரிகாற்f சகடம் சினமழித்து,
கன்றால் விளங்கா யெறிந்தானூர்
கண்ண புரம்நாம் தொழுதுமே. 6.9

1707 கருமா முகில்தோய் நெடுமாடக்
கண்ண புரத்தெம் அடிகளை,
திருமா மகளா லருள்மாரி
செழுநீ ராலி வளநாடன்,
மருவார் புயல்கைக் கலிகன்றி
மங்கை வேந்த னொலிவல்லார்
இருமா நிலத்துக் கரசாகி
இமையோர் இறைஞ்ச வாழ்வாரே. 6.10

1708 வியமுடை விடையினம் உடைதர மடமகள்,
குயமிடை தடவரை யகலம துடையவர்,
நயமுடை நடையனம் இளையவர் நடைபயில்,
கயமிடை கணபுரம் அடிகள்தமிடமே. 7.1

1709 இணைமலி மருதினொ டெருதிற இகல்செய்து
துணைமலி முலையவள் மணமிகு கலவியுள்,
மணமலி விழவினொ டடியவர் அளவிய,
கணமலி கணபுரம் அடிகள்தம் இடமே. 7.2

1710 புயலுறு வரைமழை பொழிதர மணிநிரை,
மயலுற வரைகுடை யெடுவிய நெடியவர்,
முயல்துளர் மிளைமுயல் துளவள விளைவயல்,
கயல்துளு கணபுரம் அடிகள்தம் இடமே. 7.3

1711 ஏதலர் நகைசெய இளையவர் அளைவெணெய்
போதுசெய் தமரிய புனிதர்நல் விரைமலர்
கோதிய மதுகரம் குலவிய மலர்மகள்
காதல்செய் கணபுரம் அடிகள்தம் இடமே. 7.4

1712 தொண்டரும் அமரரும் முனிவரும் தொழுதெழ
அண்டமொ டகலிடம் அளந்தவர் அமர்ச்செய்து
விண்டவர் படமதி ளிலங்கைமுன் னெரியெழ
கண்டவர் கணபுரம் அடிகள்தம் இடமே. 7.5

1713 மழுவியல் படையுடை யவனிடம் மழைமுகில்,
தழுவிய உருவினர் திருமகள் மருவிய
கொழுவிய செழுமலர் முழுசிய பறவைபண்
எழுவிய கணபுரம் அடிகள்தம் இடமே. 7.6

1714 பரிதியொ டணிமதி பனிவரை திசைநிலம்
எரிதியொ டெனவின யல்வினர் செலவினர்
சுருதியொ டருமறை முறைசொலு மடியவர்
கருதிய கணபுரம் அடிகள்தம் இடமே. 7.7

1715 படிபுல்கு மடியிணை பலர்தொழ மலர்வைகு
கொடிபுல்கு தடவரை அகலம துடையவர்
முடிபுல்கு நெடுவயல் படைசெல அடிமலர்
கடிபுல்கு கணபுரம் அடிகள்தம் இடமே. 7.8

1716 புலமனு மலர்மிசை மலர்மகள் புணரிய
நிலமக ளெனவின மகளிர்க ளிவரொடும்
வலமனு படையுடை மணிவணர் நிதிகுவை
கலமனு கணபுரம் அடிகள்தம் இடமே. 7.9

1717 மலிபுகழ் கணபுர முடையவெம் அடிகளை
வலிகெழு மதிளயல் வயலணி மங்கையர்
கலியன தமிழிவை விழுமிய இசையினொடு
ஒலிசொலும் அடியவர் உறுதுய ரிலரே. 7.10

1718 வானோ ரளவும் முதுமுந்நீர்
வளர்ந்த காலம், வலியுருவில்
மீனாய் வந்து வியந்துய்யக்
கொண்ட தண்டா மரைக்கண்ணன்,
ஆனா வுருவி லானாயன்
அவனை யம்மா விளைவயலுள்,
கானார் புறவில் கண்ணபுரத்
தடியேன் கண்டு கொண்டேனே. 8.1

1719 மலங்கு விலங்கு நெடுவெள்ளம்
மறுக அங்கோர் வரைநட்டு
இலங்கு சோதி யாரமுதம்
எய்து மளவோர் ஆமையாய்,
விலங்கல் திரியத் தடங்கடலுள்
சுமந்து கிடந்த வித்தகனை,
கலங்கல் முந்நீர்க் கண்ணபுரத்
தடியேன் கண்டு கொண்டேனே. 8.2

1720 பாரார் அளவும் முதுமுந்நீர்
பரந்த காலம், வளைமருப்பில்
ஏரார் உருவத் தேனமாய்
எடுத்த ஆற்ற லம்மானை,
கூரார் ஆரல் இரைகருதிக்
குருகு பாயக் கயலிரியும்,
காரார் புறவில் கண்ணபுரத்
தடியேன் கண்டு கொண்டேனே. 8.3

1721 உளைந்த அரியும் மானிடமும்
உடனாய்த் தோன்ற ஒன்றுவித்து,
விளைந்த சீற்றம் விண்வெதும்ப
வேற்றோன் அகலம் வெஞ்சமத்து,
பிளந்து வளைந்த வுகிரானைப்
பெருந்தண் செந்நெற் குலைதடிந்து,
களஞ்செய் புறவில் கண்ணபுரத்
தடியேன் கண்டு கொண்டேனே. 8.4

1722 தொழுநீர் வடிவில் குறளுருவாய்
வந்து தோன்றி மாவலிபால்,
முழுநீர் வையம் முன்கொண்ட
மூவா வுருவி னம்மானை
உழுநீர் வயலுள் பொன்கிளைப்ப
ஒருபால் முல்லை முகையோடும்
கழுநீர் மலரும் கண்ணபுரத்
தடியேன் கண்டு கொண்டேனே. 8.5

1723 வடிவாய் மழுவே படையாக
வந்து தோன்றி மூவெழுகால்,
படியார் அரசு களைகட்ட
பாழி யானை யம்மானை,
குடியா வண்டு கொண்டுண்ணக்
கோல நீலம் மட்டுகுக்கும்,
கடியார் புறவில் கண்ணபுரத்
தடியேன் கண்டு கொண்டேனே. 8.6

1724 வைய மெல்லா முடன்வணங்க
வணங்கா மன்ன னாய்த்தோன்றி,
வெய்ய சீற்றக் கடியிலங்கை
குடிகொண் டோட வெஞ்சமத்து,
செய்த வெம்போர் நம்பரனைச்
செழுந்தண் கானல் மணநாறும்,
கைதை வேலிக் கண்ணபுரத்
தடியேன் கண்டு கொண்டேனே. 8.7

1725 ஒற்றைக் குழையும் நாஞ்சிலும்
ஒருபால் தோன்றத் தான்தோன்றி,
வெற்றித் தொழிலார் வேல்வேந்தர்
விண்பாற்f செல்ல வெஞ்சமத்து,
செற்ற கொற்றத் தொழிலானைச்
செந்தீ மூன்றும் மில்லிருப்ப,
கற்ற மறையோர் கண்ணபுரத்
தடியேன் கண்டு கொண்டேனே. 8.8

1726 துவரிக் கனிவாய் நிலமங்கை
துயர்தீர்ந் துய்யப்
பாரதத்துள், இவரித் தரசர் தடுமாற
இருள்நாள் பிறந்த அம்மானை,
உவரி யோதம் முத்துந்த
ஒருபா லொருபா லொண்செந்நெல்,
கவரி வீசும் கண்ணபுரத்
தடியேன் கண்டு கொண்டேனே. 8.9

1727 மீனோ டாமை கேழலரி
குறளாய் முன்னு மிராமனாய்த்
தானாய் பின்னு மிராமனாய்த்
தாமோ தரனாய்க் கற்கியும்
ஆனான் றன்னை கண்ணபுரத்
தடியேன் கலிய னொலிசெய்த
தேனா ரின்சொல் தமிழ்மாலை
செப்பப் பாவம் நில்லாவே. 8.10

1728 கைம்மான மதயானை யிடர்தீர்த்த கருமுகிலை
மைம்மான மணியை அணிகொள் மரகதத்தை,
எம்மானை யெம்பிரானை யீசனை யென்மனத்துள்
அம்மானை, அடியே னடைந்துய்ந்து போனேனே. 9.1

1729
தருமான மழைமுகிலைப் பிரியாது தன்னடைந்தார்,
வருமானம் தவிர்க்கும் மணியையணியுருவில்,
திருமாலை யம்மானை அமுதத்தைக் கடற்கிடந்த
பெருமானை அடியே னடைந்துய்ந்து பிழைத்தேனே. 9.2

1730 விடையேழன் றடர்த்து வெகுண்டு விலங்கலுற
படையாலாழி தட்ட பரமன் பரஞ்சோதி,
மடையார் நீலம்மல்கும் வயல்சூழ் கண்ணபுரமொன்
றுடையானுக்கு அடியேன் ஒருவர்க் குரியேனோ? 9.3

1731 மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானைப் புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை
தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த
அக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே. 9.4

1732 வந்தாயென் மனத்தே வந்துநீ புகுந்தபின்னை,
எந்தாய். போயறியாய் இதுவே யமையாதோ
கொந்தார் பைம்பொழில்சூழ் குடந்தைக் கிடந்துகந்த
மைந்தா உன்னையென்றும் மறவாமைப் பெற்றேனே. 9.5

1733 எஞ்சா வெந்நரகத் தழுந்தி நடுங்குகின்றேற்கு,
அஞ்சேலென் றடியேனை ஆட்கொள்ள வல்லானை,
நெஞ்சே நீநினையாது இறைப்பொழுதுமிருத்திகண்டாய்,
மஞ்சார் மாளிகைசூழ் வயலாலி மைந்தனையே. 9.6

1734 பெற்றார் பெற்றொழிந்தார் பின்னும்நின் றடியேனுக்கு,
உற்றானாய் வளர்த்து என்னுயிராகி நின்றானை,
முற்றா மாமதிகோள் விடுத்தானை யெம்மானை
எத்தால் யான்மறக்கேன் துசொல்லெனனேழைநெஞ்சே. 9.7

1735 கற்றார் பற்றறுக்கும் பிறவிப் பெருங்கடலே
பற்றா வந்தடியேன் பிறந்தேன் பிறந்தபின்னை
வற்றா நீர்வயல்சூழ் வயலாலி யம்மானைப்
பெற்றேன் பெற்றதும் பிறவாமை பெற்றேனே. 9.8

1736 கண்ணார் கண்ணபுரம் கடிகை கடிகமழும்
தண்ணார் தாமரைசூழ் தலைச்சங்க மேல்திசையுள்
விண்ணோர் நாண்மதியை விரிகின்ற வெஞ்சுடரை
கண்ணாரக் கண்டுகொண்டு களிக்கின்றதிங் கென்றுகொலோ. 9.9

1737 செருநீர வேல்வலவன் கலிகன்றி மங்கையர்கோன்
கருநீர் முகில்வண்ணன் கண்ண புரத்தானை
இருநீ ரின்தமிழ் இன்னிசை மாலைகள் கொண்டுதொண்டீர்,
வருநீர் வையமுய்ய இவைபாடி யாடுமினே. 9.10

1738 வண்டார்பூ மாமலர் மங்கை மணநோக்கம்
உண்டானே உன்னை யுகந்துகந் துன்றனக்கே
தொண்டானேற்கு என்செய்கின் றாய்சொல்லு நால்வேதம்
கண்டானே கண்ண புறத்துறை யம்மானே. 10.1

1739 பெருநீரும் விண்ணும் மலையு முலகேழும்
ஒருதாரா நின்னு ளொடுக்கிய நின்னையல்லால்
வருதேவர் மற்றுளரென் றென்மனத் திறையும்
கருதேன்நான் கண்ண புரத்துறை யம்மானே. 10.2

1740 மற்றுமோர் தெய்வ முளதென் றிருப்பாரோ
டுற்றிலேன் உற்றது முன்னடி யார்க்கடிமை
மற்றெல்லம் பேசிலும் நின்திரு வெட்டெழுத்தும்
கற்று நான் கண்ண புரத்துறை யம்மானே. 10.3

1741 பெண்ணானாள் பேரிளங் கொங்கையி னாரழல்போல்
உண்ணாநஞ் சுண்டுகந் தாயை யுகந்தேன்நான்
மண்ணாளா. வாள்நெடுங் கண்ணி மதுமலராள்
கண்ணாளா கண்ண புரத்துறை யம்மானே. 10.4

1742 பெற்றாரும் சுற்றமு மென்றிவை பேணேன்நான்
மற்றாரும் பற்றிலே னாதலால் நின்னடைந்தேன்
உற்றானென் றுள்ளத்து வைத்தருள் செய்கண்டாய்
கற்றார்ச்சேர் கண்ண புரத்துறை யம்மானே. 10.5

1743 ஏத்தியுன் சேவடி யெண்ணி யிருப்பாரை,
பார்த்திருந் தங்கு நமன்றமர் பற்றாது
சோத்தம்நாம் அஞ்சுது மென்று தொடாமை நீ
காத்திபோல் கண்ண புரத்துறை யம்மானே. 10.6

1744 வெள்ளைநீர் வெள்ளத் தணைந்த அரவணைமேல்
துள்ளுநீர் மெள்ளத் துயின்ற பெருமானே
வள்ளலே உன்றமர்க் கென்றும் நமன்றமர்
கள்ளர்போல் கண்ண புரத்துறை யம்மானே. 10.7

1745 மாணாகி வைய மளந்ததுவும் வாளவுணன் பூணாகம்
கீண்டதுவும் ஈண்டு நினைந்திருந்தேன்
பேணாத வல்வினை யேனிட ரெத்தனையும்
காணேன்நான் கண்ண புரத்துறை யம்மானே. 10.8

1746 நாட்டினா யென்னை யுனக்குமுன் தொண்டாக மாட்டினே
னத்தனையே கொண்டென் வல்வினையை பாட்டினா
லுன்னையென் நெஞ்சத் திருந்தமை
காட்டினாய் கண்ண புரத்துறை யம்மானே. 10.9

1747 கண்டசீர்க் கண்ண புரத்துறை யம்மானை
கொண்டசீர்த் தொண்டன் கலிய னொலிமாலை
பண்டமாய்ப் பாடு மடியவர்க் கெஞ்ஞான்றும்
அண்டம்போ யாட்சி யவர்க்க தறிந்தோமே. 10.10

No comments:

Post a Comment