திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி
பெரிய திருமொழி பத்தாம் பத்து
கலி விருத்தம்
1848 ஒருநற் சுற்றம் எனக்குயிர் ஒண்பொருள்
வருநல் தொல்கதி யாகிய மைந்தனை
நெருநல் கண்டது நீர்மலை யின்றுபோய்
கருநெல் சுழ்கண்ண மங்கையுள் காண்டுமே 1.1
1849 பொன்னை மாமணி யையணி யார்ந்ததோர்
மின்னை வேங்கடத் துச்சியிற் கண்டுபோய்
என்னை யாளுடை யீசனை யெம்பிரான்
றன்னை யாம்சென்று காண்டும்தண் காவிலே 1.2
1850 வேலை யாலிலைப் பள்ளி விரும்பிய
பாலை ஆரமு தத்தினைப் பைந்துழாய்
மாலை ஆலியில் கண்டு மகிழ்ந்து போய்
ஞால முன்னியைக் காண்டும்நாங் கூரிலே 1.3
1851 துளக்க மில்சுட ரை,அவு ணனுடல்
பிளக்கும் மைந்தனைப் பேரில் வணங்கிப்போய்
அளப்பி லாரமு தையம ரர்க்கருள்
விளக்கினை சென்று வெள்ளறைக் காண்டுமே 1.4
1852 சுடலை யில்சுடு நீறன் அமர்ந்ததுஓர்
நடலை தீர்த்தவ னைநறை யூர்கண்டு,என்
உடலை யுள்புகுந் துள்ள முருக்கியுண்
விடலை யைச்சென்று காண்டும்மெய் யத்துளே 1.5
1853 வானை ஆரமு தம்தந்த வள்ளலை
தேனை நீள்வயல் சேறையில் கண்டுபோய்
ஆனை வாட்டி யருளும் அமரர்த்தம்
கோனை, யாம்குடந் தைச்சென்று காண்டுமே 1.6
1854 கூந்த லார்மகிழ் கோவல னாய் வெண்ணெய்
மாந்த ழுந்தையில் கண்டு மகிழ்ந்துபோய்
பாந்தள் பாழியில் பள்ளி விரும்பிய
வேந்த னைச்சென்று காண்டும்வெ காவுளே 1.7
1855 பத்த ராவியைப் பான்மதி யை,அணித்
தொத்தை மாலிருஞ் சோலைத் தொழுதுபோய்
முத்தி னைமணி யைமணி மாணிக்க
வித்தி னை,சென்று விண்ணகர்க் காண்டுமே 1.8
1856 கம்ப மாகளி றஞ்சிக் கலங்க,ஓர்
கொம்பு கொண்ட குரைகழல் கூத்தனை
கொம்பு லாம்பொழில் கோட்டியூர்க் கண்டுபோய்
நம்ப னைச்சென்று கண்டும்நா வாயுளே 1.9
1857 பெற்றம் ஆளியை பேரில் மணாளனை
கற்ற _ல்கலி கன்றி யுரைசெய்த
சொற்றி றமிவை சொல்லிய தொண்டர்கட்கு
அற்ற மில்லையண் டம்அவர்க் காட்சியே 1.10
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1858 இரக்க மின்றியெங் கோன்செய்த தீமை
இம்மை யேயெமக் கெய்திற்றுக்
காணீர் பரக்க யாமின் றுரைத்தென் இரவணன்
பட்ட னனினி யவர்க்கு ரைக்கோம்
குரக்கு நாயகர் காள்.இளங் கோவே
கோல வல்வி லிராம பிரானே
அரக்க ராடழைப் பாரில்லை நாங்கள்
அஞ்சி னோந்தடம் பொங்கத்தம் பொங்கோ 2.1
1859 பத்து நீள்முடி யுமவற் றிரட்டிப்
பாழித் தோளும் படைத்தவன் செல்வம்,
சித்தம் மங்கையர் பால்வைத்துக் கெட்டான்
செய்வ தொன்றறி யாவடி யோங்கள்
ஒத்த தோளிரண் டுமொரு முடியும்
ஒருவர் தம்திறத் தோமன்றி வாழ்ந்தோம்
அத்த. எம்பெரு மான்.எம்மைக் கொல்லேல்
அஞ்சி னேம்தடம் பொங்கத்தம் பொங்கோ 2.2
1860 தண்ட காரணி யம்புகுந் தன்று
தைய லைத்தக விலியெங் கோமான்
கொண்டு போந்துகெட் டான்எமக் கிங்கோர்
குற்ற மில்லைகொல் லேல்குல வேந்தே
பெண்டி ரால்கெடு மிக்குடி தன்னைப்
பேசு கின்றதென்? தாசர தீ,உன்
அண்ட வணர் உகப்பதே செய்தாய்
அஞ்சி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ 2.3
1861 எஞ்ச லில்இல்ங் கைக்கிறை யெங்கோன்
றன்னை முன்பணிந்து எங்கள்கண் முகப்பே
நஞ்சு தானரக் கர்குடிக் கென்று
நங்கை யையவன் தம்பியே சொன்னான்
விஞ்சை வானவர் வேண்டிற்றே பட்டோம்
வேரி வார்பொழில் மாமயி லன்ன
அஞ்சி லோதியைக் கொண்டு நடமின்
அஞ்சி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ 2.4
1862 செம்பொன் நீள்முடி எங்கள் இரவணன்
சீதை யென்பதோர் தெய்வம் கொணர்ந்து
வம்பு லாம்கடி காவில் சிறையா
வைத்த தேகுற்ற மாயிற்றுக்
காணீர் கும்ப னோடு நிகும்பனும் பட்டான்
கூற்றம் மனிட மாய்வந்து தோன்றி
அம்பி னாலெம்மைக் கொன்றிடு கின்றது
அஞ்சி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ 2.5
1863 ஓத மாகட லைக்கடந் தேறி
உயர்க்கொள் மாக்கடி காவை யிறுத்து
காதல் மக்களும் சுற்றமுங் கொன்று
கடியி லங்கை மலங்க
எரித்துத் தூது வந்த குரங்குக்கே உங்கள்
தோன்றல் தேவியை விட்டு கொடாதே
ஆதர் நின்று படுகின்ற தந்தோ.
அஞ்சி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ 2.6
1864 தழ மின்றிமுந் நீரையஞ் ஞான்று
தகைந்த தேகண்டு வஞ்சி_ண் மருங்குல்
மாழை மான்மட நோக்கியை விட்டு
வாழ்கி லாமதி யில்மனத் தானை
ஏழை யையிலங் கைக்கிறை தன்னை
எங்க ளையொழி யக்கொலை யவனை
சூழ மாநினை மாமணி வண்ணா.
சொல்லி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ 2.7
1865 மனங்கொண் டேறும்மண் டோதரி முதலா
அங்க யற்கண்ணி னார்கள் இருப்ப
தனங்கொள் மென்முலை நோக்க மொழிந்து
தஞ்ச மேசில தாபத ரென்று
புனங்கொள் மென்மயி லைச்சிறை வைத்த
புன்மை யாளன் நெஞ் சில்புக எய்த
அனங்க னன்னதிண் டோளெம்மி ராமற்
கஞ்சி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ 2.8
1866 புரங்கள் மூன்றுமோர் மாத்திரைப் போதில்
பொங்கெ ரிக்கிரை கண்டவன் அம்பின்
சரங்க ளேகொடி தாயடு கின்ற
சாம்ப வானுடன் நிற்கத் தொழுதோம்
இரங்கு நீயெமக் கெந்தைபி ரானே.
இலங்கு வெங்கதி ரோன்றன் சிறுவா
குரங்கு கட்கர சே.எம்மைக் கொல்லேல்.
கூறி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ 2.9
1867 அங்கவ் வானவர்க் காகுலம் தீர
அணியி லங்கை அழித்தவன் றன்னை
பொங்கு மாவல வன்கலி கன்றி
புகன்ற பொங்கத்தங் கொண்டு,இவ் வுலகில்
எங்கும் பாடிநின் றாடுமின் தொண்டீர்.
இம்மை யேயிட ரில்லை, இறந்தால்
தங்கு மூர்அண்ட மேகண்டு கொண்மின்
சாற்றி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ. 2.10
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1868 ஏத்து கின்றோம் நாத்த ழும்ப இராமன் திருநாமம்
சோத்தம் நம்பீ. சுக்கி ரீவா. உம்மைத் தொழுகின்றோம்
வார்த்தை பேசீர் எம்மை யுங்கள் வானரம் கொல்லாமே
கூத்தர் போல ஆடு கின்றோம் குழமணி தூரமே 3.1
1869 எம்பி ரானே. என்னை யாள்வாய் என்றென் றலற்றாதே
அம்பின் வாய்ப்பட் டாற்ற கில்லா திந்திர சித்தழிந்தான்
நம்பி அனுமா. சுக்கி ரீவ. அங்கத னே.நளனே
கும்ப கர்ணன் பட்டுப் போனான் குழமணி தூரமே 3.2
1870 ஞால மாளு முங்கள் கோமான் எங்கள் இரவணற்குக்
கால னாகி வந்த வாகண் டஞ்சிக் கருமுகில்போல்
நீலன் வாழ்கசு டேணன் வாழ்க அங்கதன் வாழ்கவென்று
கோல மாக ஆடு கின்றோம் குழமணி தூரமே 3.3
1871 மணங்கள் நாறும் வார்குழ லார்கள் மாதர்க ளாதரத்தை
புணர்ந்த சிந்தைப் புன்மை யாளன் பொன்ற வரிசிலையால்
கணங்க ளுண்ண வாளி யாண்ட காவல னுக்கிளையோன்
குணங்கள் பாடி யாடு கின்றோம் குழமணி தூரமே 3.4
1872 வென்றி தந்தோம் மானம் வேண்டோம் தானம் எமக்காக
இன்று தம்மி னெங்கள் வாணாள் எம்பெரு மான்தமர்காள்
நின்று காணீர் கண்க ளார நீரெமைக் கொல்லாதே
குன்று போல ஆடு கின்றோம் குழமணி தூரமே 3.5
1873 கல்லின் முந்நீர் மாற்றி வந்து காவல் கடந்து,இலங்கை
அல்லல் செய்தா னுங்கள் கோமான் எம்மை அமர்க்களத்து
வெல்ல கில்லா தஞ்சி னோங்காண் வெங்கதி ரோன்சிறுவா,
கொல்ல வேண்டா ஆடு கின்றோம் குழமணி தூரமே 3.6
1874 மாற்ற மாவ தித்த னையே வம்மின் அரக்கருளீர்
சீற்றம் _ம்மேல் தீர வேண்டில் சேவகம் பேசாதே
ஆற்றல் சான்ற தொல்பி றப்பில் அனுமனை வாழ்கவென்று
கூற்ற மன்னார் காண ஆடீர் குழமணி தூரமே 3.7
1875 கவள யானை பாய்புர வித்தே ரோட ரக்கரெல்லாம்
துவள, வென்ற வென்றி யாளன் றன்தமர் கொல்லாமே
தவள மாடம் நீட யோத்தி காவலன் றன்சிறுவன்
குவளை வண்ணன் காண ஆடீர் குழமணி தூரமே 3.8
1876 ஏடொத் தேந்தும் நீளி லைவேல் எங்கள் இரவணனார்
ஓடிப் போனார், நாங்கள் எய்த்தோம் உய்வதோர் காரணத்தால்
சூடிப் போந்தோம் உங்கள் கோம னாணை தொடரேன்மின்
கூடி கூடி யாடு கின்றோம் குழமணி தூரமே 3.9
1877 வென்ற தொல்சீர்த் தென்னி லங்கை வெஞ்சமத்து அன்றரக்கர்
குன்ற மன்னா ராடி உய்ந்த குழமணி தூரத்தை
கன்றி நெய்ந்நீர் நின்ற வேற்கைக் கலிய னொலிமாலை
ஒன்றும் ஒன்றும் ஐந்தும் மூன்றும் படிநின் றாடுமினே 3.10
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1878 சந்த மலர்க்குழல் தாழத்
தானுகந் தோடித் தனியே
வந்து,என் முலைத்தடந் தன்னை
வாங்கிநின் வாயில் மடுத்து,
நந்தன் பெறப்பெற்ற நம்பீ.
நானுகந் துண்ணும் அமுதே,
எந்தை பெருமனே. உண்ணாய்
என்னம்மம் சேமமுண் ணாயே 4.1
1879 வங்க மறிகடல் வண்ணா.மாமுகி லேயொக்கும் நம்பீ
செங்க ணெடிய திருவே செங்கம லம்புரை வாயா,
கொங்கை சுரந்திட வுன்னைக் கூவியும் காணாதி ருந்தேன்
எங்கிருந் தாயர்க ளோடும் என்விளை யாடுகின் றாயே 4.2
1880 திருவில் பொலிந்த எழிலார் ஆயர்தம் பிள்ளைக ளோடு
தெருவில் திளைக்கின்ற நம்பீ செய்கின்ற தீமைகள் கண்டிட்டு,
உருகியென் கொங்கையின் தீம்பால் ஓட்டந்து பாய்ந்திடு கின்ற,
மருவிக் குடங்கா லிருந்து வாய்முலை யுண்ணநீ வாராய் 4.3
1881 மக்கள் பெறுதவம் போலும் வையத்து வாழும் மடவார்
மக்கள் பிறர்கண்ணுக் கொக்கும் முதல்வா மதக்களி றன்னாய்
செக்கர் இளம்பிறை தன்னை வாங்கிநின் கையில் தருவன்
ஒக்கலை மேலிருந் தம்மம் உகந்தினி துண்ணநீ வாராய் 4.4
1882 மைத்த கருங்குஞ்சி மைந்தா.மாமரு தூடு நடந்தாய்,
வித்தக னேவிரை யாதே வெண்ணெய் விழுங்கும் விகிர்தா,
இத்தனை போதன்றி யென்றன் கொங்கை சுரந்திருக்க கில்லா,
உத்தம னே.அம்மம் உண்ணாய் உலகளந் தாய்.அம்மம் உண்ணாய் 4.5
1883 பிள்ளய்கள் செய்வன செய்யாய் பேசின் பெரிதும் வலியை
கள்ளம் மனத்தி லுடையை காணவே தீமைகள் செய்தி
உள்ள முருகியென் கொங்கை ஓட்டந்து பாய்ந்திடு கின்ற
பள்ளிக் குறிப்புச்செய் யாதே பாலமு துண்ணநீ வாராய் 4.6
1884 தன்மக னாகவன் பேய்ச்சி தான்முலை யுண்ணக் கொடுக்க
வன்மக னாயவள் ஆவி வாங்கி முலையுண்ட நம்பி
நன்மகள் ஆய்மக ளோடு நானில மங்கை மணாளா
என்மக னே.அம்ம முண்ணாய் என்னம்மம் சேமமுண் ணாயே 4.7
1885 உந்தம் அடிகள் முனிவர் உன்னைநான் என்கையிற் கோலால்
நொந்திட மோதவுங் கில்லேன்_ங்கள்தம் ஆநிரை யெல்லாம்
வந்து புகுதரும் போது வானிடைத் தெய்வங்கள் காண
அந்தியம் போதங்கு நில்லேல்ஆழியங் கையனே. வாராய் 4.8
1886 பெற்றத் தலைவனெங் கோமான் பேரரு ளாளன் மதலாய்,
சுற்றக் குழாத்திளங் கோவே. தோன்றிய தொல்புக ழாளா,
கற்றினந் தோறும் மறித்துக் கானம் திரிந்த களிறே
எற்றுக்கென் அம்மமுண் ணாதே எம்பெரு மானிருந் தாயே 4.9
1887 இம்மை யிடர்க்கெட வேண்டி ஏந்தெழில் தோள்கலி கன்றி
செம்மைப் பனுவல்_ல் கொண்டு செங்க ணெடியவன் றன்னை
அம்மமுண் என்றுரைக் கின்ற பாட லிவையைந்து மைந்தும்
மெய்ம்மை மனத்துவைத் தேத்த வினவ ராகலு மாமே 4.10
கலித்தாழிசை
1888 பூங்கோதை யாய்ச்சி கடைவெண்ணை புக்குண்ண,
ஆங்கவ ளார்த்துப் புடைக்கப் புடையுண்டு
ஏங்கி யிருந்து சிணுங்கி விளையாடும்
ஓங்கோத வண்ணனே. சப்பாணி
ஒளிமணி வண்ணனே. சப்பாணி . 5.1
1889 தாயர் மனங்கள் தடிப்பத் தயிர்நெய்யுண்
டேயெம் பிராக்கள் இருநிலத் தெங்கள்தம்
ஆயர் அழக அடிகள் அரவிந்த
வாயவ னே. கொட்டாய் சப்பாணி
மால்வண்ண னே.கொட்டாய் சப்பாணி. 5.2
1890 தாம்மோர் உருட்டித் தயிர்நெய் விழுங்கிட்டு
தாமோ தவழ்வரென் றாய்ச்சியர் தாம்பினால்
தாமோ திரக்கையா லார்க்கத் தழும்பிருந்த
தாமோ தரா. கொட்டாய் சப்பாணி
தமரைக் கண்ணனே. சப்பாணி 5.3
1891 பெற்றார் தளைகழலப் பேர்ந்தங் கயலிடத்து
உற்றா ரொருவரு மின்றி யுலகினில்,
மற்றரு மஞ்சப்போய் வஞ்சப்பெண் நஞ்சுண்ட
கற்றாய னே.கொட்டாய் சப்பாணி
கார்வண்ண னே.கொட்டாய் சப்பாணி 5.4
1892 சோத்தென நின்னைத் தொழுவன் வரந்தர,
பேய்ச்சி முலையுண்ட பிள்ளாய், பெரியன
ஆய்ச்சியர் அப்பம் தருவர் அவர்க்காகச்
சாற்றியோ ராயிரம் சப்பாணி
தடங்கைக ளால்கொட்டாய் சப்பாணி 5.5
1893 கேவல மன்றுன் வயிறு, வயிற்றுக்கு
நானவல் அப்பம் தருவன் கருவிளைப்
பூவலர் நீள்முடி நந்தன்றன் போரேறே,
கோவல னே. கொட்டாய் சப்பாணி
குடமா டீ.கொட்டாய் சப்பாணி. 5.6
1894 புள்ளினை வாய்பிளந்து பூங்குருந்தம் சாய்த்து,
துள்ளி விளயாடித் தூங்குறி வெண்ணெயை,
அள்ளிய கையா லடியேன் முலைநெருடும்
பிள்ளைப்பி ரான். கொட்டாய் சப்பாணி
பேய்முலை யுண்டானே. சப்பாணி. 5.7
1895 யாயும் பிறரும் அறியாத யாமத்து,
மாய வலவைப்பெண் வந்து முலைதர,
பேயென் றவளைப் பிடித்துயி ரையுண்ட,
வாயவ னே.கொட்டாய் சப்பாணி
மால்வண்ண னே.கொட்டாய் சப்பாணி. 5.8
1896 கள்ளக் குழவியாய்க் காலால் சகடத்தை
தள்ளி யுதைத்திட்டுத் தாயாய் வருவாளை,
மெள்ளத் தொடர்ந்து பிடித்தா ருயிருண்ட,
வள்ளலே. கொட்டாய் சப்பாணி
மால்வண்ண னே.கொட்டாய் சப்பாணி. 5.9
1897 காரார் புயல்கைக் கலிகன்றி மங்கையர்கோன்,
பேராளன் நெஞ்சில் பிரியா திடங்கொண்ட
சீராளா, செந்தா மரைக்கண்ணா. தண்டுழாய்த்
தாராளா, கொட்டாய் சப்பாணி
தடமார்வா கொட்டாய் சப்பாணி. 5.10
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1898 எங்கானும் ஈதொப்ப தோர்மாய முண்டே?
நரநா ரணனா யுலகத் தற_ல்
சிங்கா மைவிரித் தவனெம் பெருமான்
அதுவன் றியும்செஞ் சுடரும் நிலனும்,
பொங்கார் கடலும் பொருப்பும் நெருப்பும்
நெருக்கிப் புகபொன் மிடறத் தனைபோது,
அங்காந் தவன்காண்மின் இன்றாய்ச் சியரால்
அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந் தவனே 6.1
1899 குன்றொன்று மத்தா அரவம் அளவிக்
குரைமா கடலைக் கடைந்திட்டு, ஒருகால்
நின்றுண்டை கொண்டோட்டி வங்கூன் நிமிர
நினைத்த பெருமான் அதுவன் றியும்முன்,
நன்றுண்ட தொல்சீர் மகரக் கடலேழ்
மலையே ழுலகே ழொழியா மைநம்பி,
அன்றுண் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால்
அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந் தவனே 6.2
1900 உளைந்திட் டெழுந்த மதுகை டவர்கள்
உலப்பில் வலியால் அவர்பால், வயிரம்
விளைந்திட்ட தென்றெண்ணி விண்ணோர் பரவ
அவர்நா ளொழித்த பெருமான் முனநாள்,
வளைந்திட்ட வில்லாளி வல்வா ளெயிற்று
மலைபோ லவுண னுடல்வள் ளுகிரால்,
அளைந்திட் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால்
அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந்தவனே 6.3
1901 தளர்ந்திட் டிமையோர் சரண்தா வெனத்தான்
சரணாய் முரணா யவனை உகிரால்
பியள்ந்திட் டமரர்க் கருள்செய் துகந்த
பெருமான் திருமால் விரிநீ ருலகை,
வளர்ந்திட்ட தொல்சீர் விறல்மா வலியை
மண்கொள்ள வஞ்சித் தொருமாண் குறளாய்
அளந்திட் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால்
அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந் தவனே 6.4
1902 நீண்டான் குறளாய் நெடுவா னளவும்
அடியார் படுமாழ் துயராய வெல்லாம்,
தீண்டா மைநினைந் திமையோ ரளவும்
செலவைத் தபிரான் அதுவன் றியும்முன்,
வேண்டா மைநமன் றமரென் தமரை
வினவப் பெறுவார் அலர்,என்று, உலகேழ்
ஆண்டா னவன்காண்மின் இன்றாய்ச் சியரால்
அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந்தவனே 6.5
1903 பழித்திட்ட இன்பப் பயன்பற் றறுத்துப்
பணிந்தேத்த வல்லார் துயராய வெல்லாம்,
ஒழித்திட் டவரைத் தனக்காக்க வல்ல
பெருமான் திருமா லதுவன் றியும்முன்,
தெழித்திட் டெழுந்தே எதிர்நின்று மன்னன்
சினத்தோள் அவையா யிரமும் மழுவால்
அழித்திட் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால்
அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந்தவனே 6.6
1904 படைத்திட்ட திவ்வைய முய்ய முனநாள்
பணிந்தேத்த வல்லார் துயராய வெல்லாம்,
துடைத்திட் டவரைத் தனக்காக்க வென்னத்
தெளியா அரக்கர் திறலபோய் அவிய,
மிடைத்திட் டெழுந்த குரங்கைப் படையா
விலங்கல் புகப்பாய்ச்சி விம்ம, கடலை
அடைத்திட் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால்
அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந்தவனே 6.7
1905 நெறித்திட்ட மென்கூழை நன்னே ரிழையோ
டுடனாய வில்லென்ன வல்லே யதனை,
இறுத்திட் டவளின்ப மன்போ டணைந்திட
டிளங்கொற் றவனாய்த் துளங்காத முந்நீர்,
செறித்திட் டிலங்கை மலங்க அரக்கன்
செழுநீண் முடிதோ ளொடுதாள் துணிய,
அறுத்திட் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால்
அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந்தவனே 6.8
1906 சுரிந்திட்ட செங்கேழ் உளைப்பொங் கரிமாத்
தொலையப் பிரியாது சென்றெய்தி, எய்தா
திரிந்திட் டிடங்கொண் டடங்காத தன்வாய்
இருகூறு செய்த பெருமான் முனநாள்
வரிந்திட்ட வில்லால் மரமேழு மெய்து
மலைபோ லுருவத் தொரிராக் கதிமூக்கு,
அரிந்திட் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால்
அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந்தவனே 6.9
1907 நின்றார் முகப்புச் சிறிதும் நினையான்
வயிற்றை நிறைப்பா னுறிப்பால் தயிர்நெய்,
அன்றாய்ச் சியர்வெண்ணெய் விழுங்கி யுரலோ
டாப்புண் டிருந்த பெருமான் அடிமேல்,
நன்றாய தொல்சீர் வயல்மங் கையர்கோன்
கலிய னொலிசெய் தமிழ்மாலை வல்லார்,
என்றானும் எய்தா ரிடரின்ப மெய்தி
இமையோர்க்கு மப்பால் செலவெய் துவாரே 6.10
எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1908 மான முடைத்துங்க ளாயர் குலமத
னால்பிறர் மக்கள் தம்மை
ஊன முடையன செய்யப் பெறாயென்
றிரப்ப னுரப்ப கில்லேன்
நானு முரைத்திலேன் நந்தன் பணித்திலன்
நங்கைகாள். நானென் செய்கேன்?
தானுமோர் கன்னியும் கீழை யகத்துத்
தயிர்கடை கின்றான் போலும். 7.1
1909 காலை யெழுந்து கடைந்தவிம் மோர்விற்கப்
போகின்றேன் கண்டே போனேன்,
மாலை நறுங்குஞ்சி நந்தன் மகனல்லால்
மற்றுவந் தாரு மில்லை,
மேலை யகத்துநங் காய். வந்து காண்மின்கள்
வெண்ணெ யேயன்று, இருந்த
பாலும் பதின்குடம் கண்டிலேன் பாவியேன்
என்செய்கேன் என்செய் கேனோ. 7.2
1910 தெள்ளிய வாய்ச்சிறி யான்நங்கை காள். உறி
மேலைத் தடாநி றைந்த,
வெள்ளி மலையிருந் தாலொத்த வெண்ணெயை
வாரி விழுங்கி யிட்டு,
கள்வ னுறங்குகின் றான்வந்து காண்மின்கள்
கையெல் லாம்நெய், வயிறு
பிள்ளை பரமன்றுஇவ் வேழுல கும்கொள்ளும்
பேதையேன் என்செய் கேனோ. 7.3
1911 மைந்நம்பு வேல்கண்நல் லாள்முன்னம் பெற்ற
வளைவண்ண நன்மா மேனி,
தன்நம்பி நம்பியு மிங்கு வளர்ந்தது
அவனி வைசெய் தறியான்
பொய்ந்நம்பி புள்ளுவன் கள்வம் பொதியறை
போகின்ற வாதவழ்ந் திட்டு,
இந்நம்பி நம்பியா ஆய்ச்சியர்க் குய்வில்லை
என்செய்கேன் என்செய் கேனோ. 7.4
1912 தந்தை புகுந்திலன் நானிங்கி ருந்திலேன்
தோழிமா ராரு மில்லை,
சந்த மலர்க்குழ லாள்தனி யேவிளை
யாடு மிடம்கு றுகி,
பந்து பறித்துத் துகில்பற்றிக் கீறிப்
படிறன் படிறு செய்யும்,
நந்தன் மதலைக்கிங் கென்கட வோம்?நங்காய்.
என்செய்கேன் என்செய் கேனோ. 7.5
1913 மண்மகள் கேள்வன் மலர்மங்கை நாயகன்
நந்தன் பெற்ற மதலை,
அண்ணல் இலைக்குழ லூதிநம் சேரிக்கே
அல்லிற் றான்வந்த பின்னை,
கண்மலர் சோர்ந்து முலைவந்து விம்மிக்
கமலச் செவ்வாய்வெ ளுப்ப,
என்மகள் வண்ண மிருக்கின்ற வாநங்காய்.
என்செய்கேன் என்செய் கேனோ. 7.6
1914 ஆயிரம் கண்ணுடை இந்திர னாருக்கென்
றாயர் விழவெ டுப்ப,
பாசனம் நல்லன பண்டிக ளால்புகப்
பெய்த அதனை யெல்லாம்,
போயிருந் தங்கொரு பூத வடிவுகொண்
டுன்மக னின்று நங்காய்,
மாயன் அதனையெல் லாம்முற்ற வாரி
வளைத்துண் டிருந்தான் போலும். 7.7
1915 தோய்த்த தயிரும் நறுநெய்யும் பாலுமோர்
ஓர்க்குடன் துற்றிடு மென்று,
ஆய்ச்சியர் கூடி யழைக்கவும் நானிதற்
கெள்கி யிவனை நங்காய்
சோத்தம் பிரான். இவை செய்யப் பெறாய். என்
றிரப்பன் உரப்ப கில்லேன்,
பேய்ச்சி முலையுண்ட பின்னையிப் பிள்ளையைப்
பேசுவ தஞ்சு வேனே. 7.8
1916 ஈடும் வலியும் உடையவிந் நம்பி
பிறந்த ஏழு திங்களில்,
ஆடலர் கண்ணியி னானை வளர்த்தி
யமுனை நீராடப் போனேன்,
சேடன் திருமறு மார்வன் கிடந்து
திருவடி யால்,மலை போல
ஓடும் சகடத்தைச் சாடிய பின்னை
உரப்புவ தஞ்சு வேனே. 7.9
1917 அஞ்சுவன் சொல்லி யழைத்திட நங்கைகாள்.
ஆயிர நாழி நெய்யைப்,
பஞ்சியல் மெல்லடிப் பிள்ளைக ளுண்கின்ற
பாகந் தான்வை யார்களே,
கஞ்சன் கடியன் கறவெட்டு நாளில்
என்கை வலத்தாது மில்லை,
நெஞ்சத் திருப்பன செய்துவைத் தாய்நம்பீ .
என்செய்கே னென்செய் கேனோ . 7.10
1918 அங்ஙனம் தீமைகள் செய்வர்க ளோநம்பீ.
ஆயர் மடமக் களைப்,
பங்கய நீர்குடைந் தாடுகின் றார்கள்
பின்னே சென்றொளித் திருந்து,
அங்கவர் பூந்துகில் வாரிக்கொண் டிட்டர
வேரி டையா ரிரப்ப,
மங்கைநல் லீர்.வந்து கொண்மின் என்றுமரம்
ஏறி யிருந்தாய் போலும் 7.11
1919 அச்சம் தினைத்தனை யில்லையிப் பிள்ளைக்
காண்மை யும்சே வகமும்,
உச்சியில் முத்தி வளர்த்தெடுத் தேனுக்
குரைத்திலன் தானின் றுபோய்,
பச்சிலைப் பூங்கடம் பேறி விசைகொண்டு
பாய்ந்து புக்கு,ஆ யிரவாய்
நச்சழல் பொய்கையில் நாகத்தி னோடு
பிணங்கிநீ வந்தாய் போலும். 7.12
1920 தம்பர மல்லன் ஆண்மைக ளைத்தனி
யேநின்று தாம்செய் வாரோ?,
எம்பெரு மான். உன்னைப் பெற்ற வயிறுடை
யேனினி யானென் செய்கேன்?,
அம்பர மேழும் அதிரும் இடிகுரல்
அங்கனற் செங்க ணுடை,
வம்பவிழ் கானத்து மால்விடை யோடு
பிணங்கிநீ வந்தாய் போலும். 7.13
1921 அன்ன நடைமட ஆய்ச்சி வயிறடித்
தஞ்ச அருவரை போல,
மன்னு கருங்களிற் றாருயிர் வவ்விய
மைந்தனை மாக டல்சூழு,
கன்னிநன் மாமதிள் மங்கையர் காவலன்
காமரு சீர்க்கலி கன்றி
இன்னிசை மாலைக ளீரேழும் வல்லவர்க்
கேது மிடரில் லையே. 7.14
கலிவிருத்தம்
1922 காதில் கடிப்பிடுக் கலிங்க முடுத்து,
தாதுநல் லதண்ணந் துழாய்கொ டணிந்து,
போது மறுத்துப் புறமேவந் துநின்றீர்,
ஏதுக்கிது என்னிது என்னிது என்னோ. 8.1
1923 துவரா டையுடுத் தொருசெண்டு சிலுப்பி,
கவராக முடித்துக் கலிக்கச்சுக் கட்டி,
சுவரார் கதவின் புறமேவந்து நின்றீர்,
இவரா ரிதுவென் னிதுவென் னிதுவென்னோ. 8.2
1924 கருளக் கொடியொன் றுடையீர். தனிப்பாகீர்,
உருளச் சகடம துறக்கில் நிமிர்த்தீர்,
மருளைக் கொடுபாடி வந்தில்லம் புகுந்தீர்,
இருளத் திதுவென் னிதுவென் னிதுவென்னோ. 8.3
1925 நாமம் பலவு முடைநா ரணநம்பீ,
தாமத் துளவம் மிகநா றிடுகின்றீர்,
காம னெனப்பாடி வெந்தில்லம் புகுந்தீர்,
ஏமத் திது வென் னிதுவென் னிதுவென்னோ. 8.4
1926 சுற்றும் குழல்தாழச் சுரிகை யணைத்து,
மற்றும் பலமாமணி பொன்கொ டணிந்து,
முற்றம் புகுந்து முறுவல்செய்து நின்றீர்,
எற்றுக் கிதுவென் னிதுவென் னிதுவென்னோ. 8.5
1927 ஆனா யரும்ஆ னிரையுமங் கொழியக்,
கூனாய தோர்கொற்ற வில்லொன்று கையேந்திப்,
போனா ரிருந்தா ரையும்பார்த்துப் புகுதீர்,
ஏனோர்கள் முன்னென் னிதுவென் னிதுவென்னோ. 8.6
1928 மல்லே பொருத திரள்தோல் மணவாளீர்,
அல்லே யறிந்தோம்_ம் மனத்தின் கருத்தை,
சொல்லா தொழியீர் சொன்னபோ தினால்வாரீர்
எல்லே யிதுவென் னிதுவென் னிதுவென்னோ. 8.7
1929 புக்கா டரவம் பிடித்தாட்டும் புனிதீர்,
இக்காலங்கள் யாமுமக் கேதொன்று மல்லோம்,
தக்கார் பலர்த்தேவி மார்சால வுடையீர்,
எக்கே. இதுவென் னிதுவென் னிதுவென்னோ. 8.8
1930 ஆடி யசைந்தாய் மடவா ரொடுநீபோய்க்
கூடிக் குரவை பிணைகோ மளப்பிள்ளாய்,
தேடித் திருமா மகள்மண் மகள்நிற்ப,
ஏடி. இதுவென் னிதுவென் னிதுவென்னோ. 8.9
1931 அல்லிக் கமலக் கண்ணனை அங்கொராய்ச்சி
எல்லிப் பொழுதூ டியவூடல் திறத்தை,
கல்லின் மலிதோள் கலியன் சொன்ன மாலை,
சொல்லித் துதிப்பா ரவர்துக்க மிலரே 8.10
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1932 புள்ளுரு வாகி நள்ளிருள் வந்த
பூதனை மாள, இலங்கை
ஒள்ளெரி மண்டி யுண்ணப் பணித்த
ஊக்க மதனை நினைந்தோ,
கள்ளவிழ் கோதை காதலு மெங்கள்
காரிகை மாதர் கருத்தும்,
பிள்ளைதன் கையில் கிண்ணமே யொக்கப்
பேசுவ தெந்தை பிரானே. 9.1
1933 மன்றில் மலிந்து கூத்துவந் தாடி
மால்விடை யேழும டர்த்து, ஆயர்
அன்று நடுங்க ஆனிரை காத்த
ஆண்மைகொ லோவறி யேன் நான்,
நின்ற பிரானே. நீள்கடல் வண்ணா.
நீயிவள் தன்னை நின் கோயில்,
முன்றி லெழுந்த முருங்கையில் தேனா
முன்கை வளைகவர்ந் தாயே. 9.2
1934 ஆர்மலி யாழி சங்கொடு பற்றி
ஆற்றலை யாற்றல் மிகுத்துக்,
கார்முகில் வண்ணா. கன்சனை முன்னம்
கடந்தநின் கடுந்திறல் தானோ,
நேரிழை மாதை நித்திலத் தொத்தை
நெடுங்கடல் அமுதனை யாளை,
ஆரெழில் வண்ணா. அங்கையில் வட்டாம்
இவளெனக் கருதுகின் றாயே. 9.3
1935 மல்கிய தோளும் மானுரி யதளும்
உடையவர் தமக்குமோர் பாகம்,
நல்கிய நலமோ? நரகனை தொலைத்த
கரதலத் தமைதியின் கருத்தோ?
அல்லியங் கோதை யணிநிறம் கொண்டு
வந்துமுன் னேநின்று போகாய்,
சொல்லியென் நம்பீ. இவளைநீ யுங்கள்
தொண்டர்கைத் தண்டென்ற வாறே 9.4
1936 செருவழி யாத மன்னர்கள் மாளத்
தேர்வலங் கொண்டவர் செல்லும்,
அருவழி வானம் அதர்படக் கண்ட
ஆண்மைகொ லோவறி யேன்நான்,
திருமொழி யெங்கள் தேமலர்க் கோதை
சீர்மையை நினைந்திலை யந்தோ,
பெருவழி நாவற் கனியினு மெளியள்
இவளெனப் பேசுகின் றாயே 9.5
1937 அரக்கிய ராகம் புல்லென வில்லால்
அணிமதி ளிலங்கையர் கோனை,
செருக்கழித் தமரர் பணியமுன் னின்ற
சேவக மோசெய்த தின்று
முருக்கிதழ் வாய்ச்சி முன்கைவெண் சங்கம்
கொண்டுமுன் னேநின்று போகாய்,
எருக்கிலைக் காக எறிமழு வோச்சல்
என்செய்வ தெந்தை பிரானே. 9.6
1938 ஆழியந் திண்டேர் அரசர்வந் திறைஞ்ச
அலைகடல் உலகம்முன் ஆண்ட,
பாழியந் தோளோ ராயிரம் வீழப்
படைமழுப் பற்றிய வலியோ?
மாழைமென் னோக்கி மணிநிறங் கொண்டு
வந்துமுன் னேநின்று போகாய்,
கோழிவெண் முட்டைக் கென்செய்வ தெந்தாய்.
குறுந்தடி நெடுங்கடல் வண்ணா. 9.7
1939 பொருந்தலன் ஆகம் புள்ளுவந் தேற
வள்ளுகி ரால்பிளந்து, அன்று
பெருந்தகைக் கிரங்கி வாலியை முனிந்த
பெருமைகொ லோசெய்த தின்று,
பெருந்தடங் கண்ணி சுரும்புறு கோதை
பெருமையை நினைந்திலை பேசில்,
கருங்கடல் வண்ணா. கவுள்கொண்ட நீராம்
இவளெனக் கருதுகின் றாயே 9.8
1940 நீரழல் வானாய் நெடுநிலங் காலாய்
நின்றநின் நீர்மையை நினைந்தோ?
சீர்க்கெழு கோதை யென்னல திலளென்
றன்னதோர் தேற்றன்மை தானோ?
பார்க்கெழு பவ்வத் தாரமு தனைய
பாவையைப் பாவம்செய் தேனுக்கு,
ஆரழ லோம்பும் அந்தணன் தோட்ட
மாகநின் மனத்துவைத் தாயே 9.9
1941 வேட்டத்தைக் கருதா தடியிணை வணங்கி
மெய்ம்மைநின் றெம்பெரு மானை,
வாட்டிறல் தானை மங்கையர் தலைவன்
மானவேல் கலியன்வா யொலிகள்,
தோட்டலர் பைந்தார்ச் சுடர்முடி யானைப்
பழமொழி யால்பணிந் துரைத்த,
பாட்டிவை பாடப் பத்திமை பெருகிச்
சித்தமும் திருவோடு மிகுமே 9.10
வெண்டுறை
1942 திருத்தாய் செம்போத்தே,
திருமாமகள் தன்கணவன்,
மருத்தார் தொல்புகழ் மாதவ னைவரத்
திருத்தாய் செம்போத்தே. 10.1
1943 கரையாய் காக்கைப்பிள்ளாய்,
கருமாமுகில் போல்நிறத்தன்,
உரையார் தொல்புக ழுத்தம னைவரக்,
கரையாய் காக்கைப்பிள்ளாய். 10.2
1944 கூவாய் பூங்குயிலே,
குளிர்மாரி தடுத்துகந்த,
மாவாய் கீண்ட மணிவண்ண னைவரக்,
கூவாய் பூங்குயிலே. 10.3
1945 கொட்டாய் பல்லிக்குட்டி,
குடமாடி யுலகளந்த,
மட்டார் பூங்குழல் மாதவ னைவரக்,
கொட்டாய் பல்லிக்குட்டி. 10.4
1946 சொல்லாய் பைங்கிளியே,
சுடராழி வலனுயர்த்த,
மல்லார் தோள்வட வேங்கட வன்வர,
சொல்லாய் பைங்கிளியே. 10.5
1947 கோழி கூவென்னுமால்,
தோழி. நானென்செய்கேன்,
ஆழி வண்ணர் வரும்பொழு தாயிற்று
கோழி கூவென்னுமால். 10.6
1948 காமற் கென்கடவேன்,
கருமாமுகில் வண்ணற்கல்லால்,
பூமே லைங்கணை கோத்துப் புகுந்தெய்யக்,
காமற் கென்கடவேன். 10.7
1949 இங்கே போதுங்கொலோ,
இனவேல்நெடுங் கண்களிப்ப,
கொங்கார் சோலைக் குடந்தைக் கிடந்தமால்,
இங்கே போதுங்கொலோ. 10.8
1950 இன்னா ரென்றறியேன்,
அன்னே. ஆழியொடும்,
பொன்னார் சார்ங்க முடைய அடிகளை,
இன்னா ரென்றறியேன். 10.9
1951 தொண்டீர். பாடுமினோ,
சுரும்பார்ப்பொழில்
மங்கையர்கோன்,
ஒண்டார் வேல்கலி யனொலி மாலைகள்,
தொண்டீர். பாடுமினோ 10.10
No comments:
Post a Comment