திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி
பெரிய திருமொழி ஐந்தாம் பத்து
1348 அறிவ தரியா னனைத்துலகும் உடையா னென்னை யாளுடையான்
குறிய மாணி யுருவாய கூத்தன் மன்னி யமருமிடம்,
நறிய மலர்மேல் சுரும்பார்க்க எழிலார் மஞ்ஞை நடமாட,
பொறிகொள் சிறைவண் டிசைபாடும் புள்ளம் பூதங் குடிதானே 1.1
1349 கள்ளக் குறளாய் மாவலியை வஞ்சித்து உலகம் கைப்படுத்து,
பொள்ளைக் கரத்த போதகத்தின் துன்பம் தவிர்த்த புனிதனிடம்,
பள்ளச் செறுவில் கயலுகளப் பழனக் கழனி யதனுள்போய்,
புள்ளுப் பிள்ளைக் கிரைதேடும் புள்ளம் பூதங் குடிதானே 1.2
1350 மேவா வரக்கர் தென்னிலங்கை வேந்தன் வீயச் சரம்துரந்து,
மாவாய் பிளந்து மல்லடர்த்து மருதம் சாய்த்த மாலதிடம்,
காவார் தெங்கின் பழம்வீழக் கயல்கள் பாயக் குருகிரியும்,
பூவார் கழனி யெழிலாரும் புள்ளம் பூதங் குடிதானே 1.3
1351 வெற்பால் மாரி பழுதாக்கி விறல்வா ளரக்கர் தலைவன்றன்,
வற்பார் திரள்தோ ளைந்நான்கும் துணித்த வல்வில் இராமனிடம்,
கற்பார் புரிசை செய்குன்றம் கவினார் கூடம் மாளிகைகள்,
பொற்பார் மாட மெழிலாரும் புள்ளம் பூதங் குடிதானே 1.4
1352 மையார் தடங்கண் கருங்கூந்தல் ஆய்ச்சி மறைய வைத்ததயிர்,
நெய்யார் பாலோ டமுதுசெய்த நேமி யங்கை மாயனிடம்,
செய்யார் ஆரல் இரைகருதிச் செங்கால் நாரை சென்றணையும்,
பொய்யா நாவில் மறையாளர் புள்ளம் பூதங் குடிதானே 1.5
1353 மின்னி னன்ன நுண்மருங்குல் வேயேய் தடந்தோள் மெல்லியற்கா,
மன்னு சினத்த மழவிடைகள் ஏழன் றடர்த்த மாலதிடம்,
மன்னு முதுநீ ரரவிந்த மலர்மேல் வரிவண் டிசைபாட,
புன்னை பொன்னேய் தாதுதிர்க்கும் புள்ளம் பூதங் குடிதானே 1.6
1354 குடையா விலங்கல் கொண்டேந்தி மாரி பழுதா நிரைகாத்து,
சடையா னோட அடல்வாணன் தடந்தோள் துணித்த தலைவனிடம்,
குடியா வண்டு கள்ளுண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும்,
புடையார் கழனி யெழிலாரும் புள்ளம் பூதங் குடிதானே 1.7
1355 கறையார் நெடுவேல் மறமன்னர் வீய விசயன் தேர்கடவி,
இறையான் கையில் நிறையாத முண்டம் நிறைத்த வெந்தையிடம்,
மறையால் மூத்தீ யவைவளர்க்கும் மன்னு புகழால் வண்மையால்,
பொறையால் மிக்க அந்தணர்வாழ் புள்ளம் பூதங் குடிதானே 1.8
1356 துன்னி மண்ணும் விண்ணாடும் தோன்றா திருளாய் மூடியநாள்,
அன்ன மாகி யருமறைகள் அருளிச் செய்த அமலனிடம்,
மின்னு சோதி நவமணியும் வேயின் முத்தும் சாமரையும்,
பொன்னும் பொன்னி கொணர்ந்தலைக்கும் புள்ளம் பூதங் குடிதானே 1.9
1357 கற்றா மறித்து காளியன்றன் சென்னி நடுங்க நடம்பயின்ற
பொற்றாமரையாள் தன்கேள்வன் புள்ளம் பூதங்குடிதன்மேல்
கற்றார் பரவும் மங்கையர்க்கோன் காரார் புயற்கைக் கலிகன்றி,
சொல்தானீரைந் திவைபாடச் சோர நில்லா துயர்தாமே 1.10
1358 தாம்தம் பெருமை யறியார், தூது
வேந்தர்க் காய வேந்த ரூர்போல்,
காந்தள் விரல்மென் கலைநன் மடவார்,
கூந்தல் கமழும் கூட லூரே 2.1
1359 செறும்திண் திமிலே றுடைய, பின்னை
பெறும்தண் கோலம் பெற்றா ரூர்ப்போல்,
நறுந்தண் தீம் தே னுண்ட வண்டு,
குறிஞ்சி பாடும் கூட லூரே 2.2
1360 பிள்ளை யுருவாய்த் தயிருண்டு, அடியேன்
உள்ளம் புகுந்த வொருவ ரூர்போல்,
கள்ள நாரை வயலுள், கயல்மீன்
கொள்ளை கொள்ளும் கூட லூரே 2.3
1361 கூற்றே ருருவின் குறளாய், நிலநீர்
ஏற்றா னெந்தை பெருமா னூர்போல்,
சேற்றே ருழுவர் கோதைப் போதூண்,
கோல்தேன் முரலும் கூட லூரே 2.4
1362 தொண்டர் பரவச் சுடர்சென் றணவ,
அண்டத் தமரும் அடிக ளூர்போல்,
வண்ட லலையுள் கெண்டை மிளிர,
கொண்ட லதிரும் கூட லூரே 2.5
1363 தக்கன் வேள்வி தகர்த்த தலைவன்,
துக்கம் துடைத்த துணைவ ரூர்போல்,
எக்க லிடுநுண் மணல்மேல், எங்கும்
கொக்கின் பழம்வீழ் கூட லூரே 2.6
1364 கருந்தண் கடலும் மலையு முலகும்,
அருந்தும் அடிகள் அமரு மூர்போல்,
பெருந்தண் முல்லைப் பிள்ளை யோடி,
குருந்தம் தழுவும் கூட லூரே 2.7
1365 கலைவாழ் பிணையோ டணையும், திருநீர்
மலைவா ழெந்தை மருவு மூர்போல்,
இலைதாழ் தெங்கின் மேல்நின்று, இளநீர்க்
குலைதாழ் கிடங்கின் கூட லூரே 2.8
1366 பெருகு காத லடியேன் உள்ளம்,
உருகப் புகுந்த வொருவ ரூர்போல்,
அருகு கைதை மலர, கெண்டை
குருகென் றஞ்சும் கூட லூரே 2.9
1367 காவிப் பெருநீர் வண்ணன், கண்ணன்
மேவித் திகழும் கூட லூர்மேல்,
கோவைத் தமிழால் கலியன் சொன்ன,
பாவைப் பாடப் பாவம் போமே 2.10
1368 வென்றி மாமழு வேந்திமுன் மண்மிசை மன்னரை மூவெழுகால்
கொன்ற தேவ,நின் குரைகழல் தொழுவதோர் வகையெனக் கருள்புரியே,
மன்றில் மாம்பொழில் நுழைதந்து மல்லிகை மௌவலின் போதலர்த்தி,
தென்றல் மாமணம் கமழ்தர வருதிரு வெள்ளறை நின்றானே 3.1
1369 வசையில் நான்மறை கெடுத்தவம் மலரயற் கருளி,முன் பரிமுகமாய்,
இசைகொள் வேதநூ லென்றிவை பயந்தவ னே எனக் கருள்புரியே,
உயர்கொள் மாதவிப் போதொடு லாவிய மாருதம் வீதியின்வாய்,
திசையெல் லாம்கம ழும்பொழில் சூழ்திரு வெள்ளறை நின்றானே 3.2
1370 வெய்ய னாயுல கேழுடன் நலிந்தவன் உடலக மிருபிளவா,
கையில் நீளுகிர்ப் படையது வாய்த்தவ னே எனக் கருள்புரியே,
மையி னார்தரு வராலினம் பாயவண் தடத்திடைக் கமலங்கள்,
தெய்வ நாறுமொண் பொய்கைகள் சூழ்திரு வெள்ளறை நின்றானே 3.3
1371 வாம்ப ரியுக மன்னர்த முயிர்செக ஐவர்க்கட் கரசளித்த,
காம்பி னார்த்திரு வேங்கடப் பொருப்ப.நின் காதலை யருளெனக்கு,
மாம்பொ ழில்தளிர் கோதிய மடக்குயில் வாயது துவர்ப்பெய்த,
தீம்ப லங்கனித் தேனது _கர்திரு வெள்ளறை நின்றானே 3.4
1372 மான வேலொண்கண் மடவரல் மண்மகள் அழுங்கமுந் நீர்ப்பரப்பில்,
ஏன மாகியன் றிருநில மிடந்தவ னே எனக் கருள்புரியே,
கான மாமுல்லை கழைக்கரும் பேறிவெண் முறுவல்செய் தலர்கின்ற,
தேனின் வாய்மலர் முருகுகுக் கும்திரு வெள்ளறை நின்றானே 3.5
1373 பொங்கு நீண்முடி யமரர்கள் தொழுதெழ அமுதினைக் கொடுத்தளிப்பான்,
அங்கொ ராமைய தாகிய வாதி.நின் னடிமையை யருளெனக்கு,
தங்கு பேடையொ டூடிய மதுகரம் தையலார் குழலணைவான்,
திங்கள் தோய்சென்னி மாடம்சென் றணை திரு வெள்ளறை நின்றானே
3.6
1374 ஆறி னோடொரு நான்குடை நெடுமுடி அரக்கன்றன் சிரமெல்லாம்,
வேறு வேறுக வில்லது வளைத்தவ னே எனக் கருள்புரியே,
மாறில் சோதிய மரதகப் பாசடைத் தாமரை மலர்வார்ந்த,
தேறல் மாந்திவண் டின்னிசை முரல திரு வெள்ளறை நின்றானே 3.7
1375 முன்னிவ் வேழுல குணர்வின்றி யிருள்மிக உம்பர்கள் தொழுதேத்த,
அன்ன மாகியன் றருமறை பயந்தவ னே.எனக் கருள்புரியே,
மன்னு கேதகை சூதக மென்றிவை வனத்திடைச் சுரும்பினங்கள்,
தென்ன வென்னவண் டின்னிசை முரல்திரு வெள்ளறை நின்றானே 3.8
1376 ஆங்கு மாவலி வேள்வியி லிரந்துசென் றகலிட முழுதினையும்,
பாங்கி னாற்கொண்ட பரம.நிற் பணிந்தெழு வேனெனக் கருள்புரியே,
ஓங்கு பிண்டியின் செம்மல ரேறிவண் டுழிதர, மாவேறித்
தீங்கு யில்மிழற் றும்படப் பைத்திரு வெள்ளறை நின்றானே 3.9
1377 மஞ்சு லாமணி மாடங்கள் சூழ்திரு வெள்ளறை யதன்மேய,
அஞ்ச னம்புரை யும்திரு வுருவனை ஆதியை யமுதத்தை,
நஞ்சு லாவிய வேல்வல வன்கலி கன்றிசொல் ஐயிரண்டும்,
எஞ்ச லின்றிநின் றேத்தவல் லாரிமை யோர்க்ர சாவார்க்களே 3.10
1378 உந்தி மேல்நான் முகனைப் படைத்தான் உல குண்டவன்
எந்தை பெம்மான், இமையோர்கள் தாதைக்கிட மென்பரால்,
சந்தி னோடு மணியும் கொழிக்கும்புனல் காவிரி,
அந்தி போலும் நிறத்தார் வயல்சூழ்தென் னரங்கமே 4.1
1379 வையமுண் டாலிலை மேவு மாயன்மணி நீண்முடி,
பைகொள் நாகத் தணையான் பயிலுமிட மென்பரால்,
தையல் நல்லார் குழல்மா லையும்மற்றவர் தடமுலை,
செய்ய சாந்தும் கலந்திழி புனல்சூழ்தென் னரங்கமே 4.2
1380 பண்டிவ் வைய மளப்பான் சென்றுமாவலி கையில்நீர்
கொண்ட ஆழித் தடக்கைக் குறளனிட மென்பரால்,
வண்டு பாடும் மதுவார் புனல்வந்திழி காவிரி
அண்ட நாறும் பொழில்சூழ்ந்து அழகார்தென் னரங்கமே 4.3
1381 விளைத்த வெம்போர் விறல்வா ளரக்கன்நகர் பாழ்பட,
வளைத்த வல்வில் தடக்கை யவனுக்கிட மென்பரால்,
துளைக்கை யானை மருப்பு மகிலும்கொணர்ந் துந்தி,முன்
திளைக்கும் செல்வப் புனல்கா விரிசூழ்தென் னரங்கமே 4.4
1382 வம்புலாம் கூந்தல் மண்டோதரி காதலன் வான்புக,
அம்பு தன்னால் முனிந்த அழகனிட மென்பரால்,
உம்பர் கோனு முலகேழும் வந்தீண்டி வணங்கும், நல்
செம்பொ னாரும் மதிள்சூழ்ந்து அழகார்தென் னரங்கமே 4.5
1383 கலையு டுத்த அகலல்குல் வன்பேய்மகள் தாயென,
முலைகொ டுத்தா ளுயிருண் டவன்வாழுமிட மென்பரால்,
குலையெ டுத்த கதலிப் பொழிலூடும் வந்துந்தி, முன்
அலையெ டுக்கும் புனற்கா விரிசூழ்தென் னரங்கமே 4.6
1384 கஞ்சன் நெஞ்சும் கடுமல் லரும்சகடமுங்காலினால்,
துஞ்ச வென்ற சுடராழி யான்வாழுமிட மென்பரால்,
மஞ்சு சேர்மா ளிகைநீ டகில்புகையும், மறையோர்
செஞ்சொல் வேள்விப் புகையும் கமழும்தென் னரங்கமே 4.7
1385 ஏன மீனா மையோடு அரியும்சிறு குறளுமாய்,
தானு மாயத் தரணித் தலைவனிட மென்பரால்,
வானும் மண்ணும் நிறையப் புகுந்தீண்டி வணங்கும்,நல்
தேனும் பாலும் கலந்தன் னவர்சேர்த்தென் னரங்கமே 4.8
1386 சேய னென்றும் மிகப்பெரியன் நுண்ணேர்மையி னாய,
இம் மாயையை ஆரு மறியா வகையானிட மென்பரால்,
வேயின் முத்தும் மணியும் கொணர்ந்தார்ப்புனற் காவிரி,
ஆய பொன்மா மதிள்சூழ்ந் தழகார்தென் னரங்கமே 4.9
1387 அல்லி மாத ரமரும் திருமார்வ னரங்கத்தை,
கல்லின் மன்னு மதிள்மங் கையர்கோன்கலி கன்றிசொல்,
நல்லிசை மாலைகள் நாலி ரண்டுமிரண் டுமுடன்,
வல்லவர் தாமுல காண்டு பின்வானுல காள்வரே 4.10
1388 வெருவாதாள் வாய்வெருவி வேங்கடமே வேங்கடமே எங்கின் றாளால்,
மருவாளா லென்குடங்கால் வாணெடுங்கண் துயில்மறந்தாள், வண்டார் கொண்டல்
உருவாளன் வானவர்த முயிராளன் ஒலிதிரைநீர்ப் பௌவங் கொண்ட
திருவாளன் என்மகளைச் செய்தனகள் எங்ஙனம்நான் சிந்திக் கேனே . 5.1
1389 கலையாளா வகலல்குல் கனவளையும்
கையாளா என்செய் கேன்நான்,
விலையாளா வடியேனை வேண்டுதியோ
வேண்டாயோ? என்னும், மெய்ய
மலையாளன் வானவர்த்தம் தலையாளன்
மராமரமே ழெய்த வென்றிச்
சிலையாளன், என் மகளைச் செய்தனகள்
எங்ஙனம்நான் சிந்திக் கேனே . 5.2
1390 மானாய மென்னோக்கி வாநெடுங்கண்
ணீர்மல்கும் வளையும் சோரும்,
தேனாய நறுந்துழா யலங்கலின்
திறம்பேசி யுறங்காள் காண்மின்,
கானாயன் கடிமனையில் தயிருண்டு
நெய்பருக நந்தன் பெற்ற
ஆனாயன், என் மகளைச் செய்தனகள்
அம்மனைமீரறிகி லேனே . 5.3
1391 தாய்வாயில் சொற்கேளாள் தன்னாயத்
தோடணையாள் தடமென் கொங்கை-
யே,ஆரச் சாந்தணியாள், எம்பெருமான்
திருவரங்க மெங்கே? என்னும்,
பேய்மாய முலையுண்டிவ் வுலகுண்ட
பெருவயிற்றன் பேசில் நங்காய்,
மாமாய னென்மகளைச் செய்தனகள்
மங்கைமீர். மதிக்கி லேனே . 5.4
1392 பூண்முலைமேல் சாந்தணியாள் பொருகயல்கண்
மையெழுதாள் பூவை பேணாள்,
ஏணறியா ளெத்தனையும் எம்பெருமான்
திருவரங்க மெங்கே என்னும்,
நாண்மலராள் நாயகனாய் நாமறிய
வாய்ப்பாடி வளர்ந்த நம்பி,
ஆண்மகனா யென்மகளைச் செய்தனகள்
அம்மனைமீரறிகி லேனே . 5.5
1393 தாதாடு வனமாலை தாரானோ
வென்றென்றே தளர்ந்தாள் காண்மின்,
யாதானு மொன்றுரைக்கில் எம்பெருமான்
திருவரங்கம் என்னும், பூமேல்
மாதாளன் குடமாடி மதுசூதன்
மன்னர்க்காய் முன்னம் சென்ற
தூதாளன், என்மகளைச் செய்தனகள்
எங்ஙனம்நான் சொல்லு கேனே . 5.6
1394 வாராளு மிளங்கொங்கை வண்ணம்வே
றாயினவா றெண்ணாள், எண்ணில்
பேராளன் பேரல்லால் பேசாள் இப்
பெண்பெற்றே னென்செய் கேன்நான்,
தாராளன் தண்குடந்தை நகராளன்
ஐவர்க்கா யமரி லுய்த்த
தேராளன், என்மகளைச் செய்தனகள்
எங்ஙனம்நான் செப்பு கேனே . 5.7
1395 உறவாது மிலளென்றென் றொழியாது
பலரேசும் அலரா யிற்றால்,
மறவாதே யெப்பொழுதும் மாயவனே.
மாதவனே. என்கின் றளால்,
பிறவாத பேராளன் பெண்ணாளன்
மண்ணாளன் விண்ணோர் தங்கள்
அறவாளன், என்மகளைச் செய்தனகள்
அம்மனைமீரறிகி லேனே . 5.8
1396 பந்தோடு கழல்மருவாள் பைங்கிளியும்
பாலூட்டாள் பாவை பேணாள்,
வந்தானோ திருவரங்கன் வாரானோ
என்றென்றே வளையும் சோரும்,
சந்தோகன் பௌழியன் ஐந் தழலோம்பு
தைத்திரியன் சாம வேதி,
அந்தோ.வந் தென்மகளைச் செய்தனகள்
அம்மனைமீரறிகி லேனே . 5.9
1397 சேலுகளும் வயல்புடைசூழ் திருவரங்கத்
தம்மானைச் சிந்தை செய்த,
நீலமலர்க் கண்மடவாள் நிறையழிவைத்
தாய்மொழிந்த வதனை, நேரார்
காலவேல் பரகாலன் கலிகன்றி
ஒலிமாலை கற்று வல்லார்,
மாலைசேர் வெண்குடைக்கீழ் மன்னவராய்ப்
பொன்னுலகில் வாழ்வர் தாமே 5.10
1398 கைம்மான மழகளிற்றைக் கடல்கிடந்த கருமணியை,
மைம்மான மரகதத்தை மறையுரைத்த திருமாலை,
எம்மானை எனக்கென்று மினியானைப் பனிகாத்த
வம்மானை, யான்கண்ட தணிநீர்த் தென் னரங்கத்தே 6.1
1399 பேரானைக் குறுங்குடியெம் பெருமானை, திருதண்கால்
ஊரானைக் கரம்பனூர் உத்தமனை, முத்திலங்கு
காரார்த்திண் கடலேழும் மலையேழிவ் வுலகேழுண்டும்,
அராதென் றிருந்தானைக் கண்டதுதென் னரங்கத்தே 6.2
1400 ஏனாகி யுலகிடந்தன் றிருநிலனும் பெருவிசும்பும்,
தானாய பெருமானைத் தன்னடியார் மனத்தென்றும்
தேனாகி யமுதாகித் திகழ்ந்தானை, மகிழ்ந்தொருகால்
ஆனாயன் ஆனானைக் கண்டதுதென் னரங்கத்தே 6.3
1401 வளர்ந்தவனைத் தடங்கடலுள் வலியுருவில் திரிசகடம்,
தளர்ந்துதிர வுதைத்தவனைத் தரியாதன் றிரணியனைப்
பிளந்தவனை, பெருநிலமீ ரடிநீட்டிப் பண்டொருநாள்
அளந்தவனை, யான்கண்ட தணிநீர்த்தென் னரங்கத்தே 6.4
1402 நீரழலாய் நெடுநிலனாய் நின்றானை, அன்றரக்கன்
ஊரழலா லுண்டானைக் கண்டார்பின் காணாமே,
பேரழலாய்ப் பெருவிசும்பாய்ப் பின்மறையோர் மந்திரத்தின்,
ஆரழலா லுண்டானைக் கண்டதுதென் னரங்கத்தே 6.5
1403 தஞ்சினத்தைத் தவிர்த்தடைந்தார் தவநெறியை, தரியாது
கஞ்சனைக்கொன் றன்றுலக முண்டுமிழ்ந்த கற்பகத்தை,
வெஞ்சினத்த கொடுந்தொழிலோன் விசையுருவை யசைவித்த,
அஞ்சிறைப்புட் பாகனையான் கண்டதுதென் னரங்கத்தே 6.6
1404 சிந்தனையைத் தவநெறியைத் திருமாலை, பிரியாது
வந்தெனது மனத்திருந்த வடமலையை, வரிவண்டார்
கொந்தணைந்த பொழில்கோவ லுலகளப்பா னடிநிமிர்த்த
அந்தணனை, யான்கண்ட தணிநீர்த்தென் னரங்கத்தே 6.7
1405 துவரித்த வுடையார்க்கும் தூய்மையில்லச் சமணர்க்கும்,
அவர்கட்கங் கருளில்லா அருளானை, தன்னடைந்த
எமர்கட்கு மடியேற்கு மெம்மாற்கு மெம்மனைக்கும்,
அமரர்க்கும் பிரானாரைக் கண்டதுதென் னரங்கத்தே 6.8
1406 பொய்வண்ணம் மனத்தகற்றிப் புலனைந்தும் செலவைத்து,
மெய்வண்ணம் நினைந்தவர்க்கு மெய்ந்நின்ற வித்தகனை,
மைவண்ணம் கருமுகில்போல் திகழ்வண்ண மரதகத்தின்,
அவ்வண்ண வண்ணனையான் கண்டதுதென் னரங்கத்தே 6.9
1407 ஆமருவி நிரைமேய்த்த அணியரங்கத் தம்மானை,
காமருசீர்க் கலிகன்றி யொலிசெய்த மலிபுகழ்சேர்
நாமருவு தமிழ்மாலை நாலிரண்டோ டிரண்டினையும்,
நாமருவி வல்லார்மேல் சாராதீ வினைதாமே 6.10
1408 பண்டைநான் மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் பதங்களின் பொருளும்,
பிண்டமாய் விரித்த பிறங்கொளி யனலும் பெருகிய புனலொடு நிலனும்,
கொடல்மா ருதமும் குரைகட லேழும் ஏழுமா மலைகளும் விசும்பும்,
அண்டமும் தானாய் நின்றவெம் பெருமான் அரங்கமா நகரமர்ந் தானே
7.1
1409 இந்திரன் பிரம னீசனென் றிவர்கள் எண்ணில்பல் குணங்களே யியற்ற,
தந்தையும் தாயும் மக்களும் மிக்க சுற்றமும் சுற்றிநின் றகலாப்
பந்தமும், பந்த மறுப்பதோர் மருந்தும் பான்மையும் பல்லுயிர்க் கெல்லாம்,
அந்தமும் வாழ்வு மாயவெம் பெருமான் அரங்கமா நகரமர்ந் தானே 7.2
1410 மன்னுமா நிலனும் மலைகளும் கடலும்
வானமும் தானவ ருலகும்,
துன்னுமா யிருளாய்த் துலங்கொளி சுருங்கித்
தொல்லைநான் மறைகளும் மறைய,
பின்னும்வா னவர்க்கும் முனிவர்க்கும் நல்கிப்
பிறங்கிருள் நிறங்கெட, ஒருநாள்
அன்னமாய் அன்றங் கருமறை பயந்தான்
அரங்கமா நகரமர்ந் தானே 7.3
1411 மாயிருங் குன்ற மொன்றுமத் தாக
மாசுண மதனொடும் அளவி,
பாயிரும் பௌவம் பகடுவிண் டலறப்
படுதிரை விசும்பிடைப் படர,
சேயிரு விசும்பும் திங்களும் சுடரும்
தேவரும் தாமுடன் திசைப்ப,
ஆயிரந் தோளா லலைகடல் கடைந்தான்
அரங்கமா நகரமர்ந் தானே 7.4
1412 எங்ஙானே யுய்வர் தானவர் நினைந்தால்
இரணியன் இலங்குபூ ணகலம்,
பொங்குவெங் குருதி பொன்மலை பிளந்து
பொழிதரு மருவியொத் திழிய,
வெங்கண்வா ளெயிற்றோர் வெள்ளிமா விலங்கல்
விண்ணுறக் கனல்விழித் தெழுந்தது,
அங்ஙனே யொக்க அரியுரு வானான்
அரங்கமா நகரமர்ந் தானே 7.5
1413 ஆயிரும் குன்றம் சென்றுதொக் கனைய
அடல்புரை யெழில்திகழ் திரடோள்,
ஆயிரந் துணிய அடல்மழுப் பற்றி
மற்றவன் அகல்விசும் பணைய,
ஆயிரம் பெயரா லமர்சென் றிறைஞ்ச
அறிதுயி லலைகடல் நடுவே,
ஆயிரம் சுடர்வா யரவணைத் துயின்றான்
அரங்கமா நகரமர்ந் தானே 7.6
1414 சுரிகுழல் கனிவாய்த் திருவினைப் பிரித்த
கொடுமையிற் கடுவிசை யரக்கன்,
எரிவிழித் திலங்கு மணிமுடி பொடிசெய்
திலங்கைபாழ் படுப்பதற் கெண்ணி,
வரிசிலை வளைய அடிசரம் துரந்து
மறிகடல் நெறிபட, மலையால்
அரிகுலம் பணிகொண் டலைகட லடைத்தான்
அரங்கமா நகரமர்ந் தானே 7.7
1415 ஊழியாய் ஓமத் துச்சியாய் ஒருகால்
உடையதே ரொருவனாய் உலகில்
சூழிமால் யானைத் துயர்கெடுத் திலங்கை
மலங்கவன் றடுசரந் துரந்து
பாழியால் மிக்க பார்த்தனுக் கருளிப்
பகலவ னொளிகெட, பகலே
ஆழியா லன்றங் காழியை மறைத்தான்
அரங்கமா நகரமர்ந் தானே 7.8
1416 பேயினார் முலையூண் பிள்ளையாய் ஒருகால்
பெருநிலம் விழுங்கியதுமிழ்ந்த
வாயனாய் மாலாய் ஆலிலை வளர்ந்து
மணிமுடி வானவர் தமக்குச்
சேயனாய், அடியேற் கணியனாய் வந்தென்
சிந்தையுள் வெந்துய ரறுக்கும்,
ஆயனாய் அன்று குன்றமொன் றெடுத்தான்
அரங்கமா நகரமர்ந் தானே 7.9
1417 பொன்னுமா மணியும் முத்தமும் சுமந்து
பொருதிரை மாநதி புடைசூழ்ந்து,
அன்னமா டுலவும் அலைபுனல் சூழ்ந்த
அரங்கமா நகரமர்ந் தானை
மன்னுமா மாட மங்கையர் தலைவன்
மானவேற் கலியன்வா யொலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும்
பழவினை பற்றறுப் பாரே 7.10
1418 ஏழை ஏதலன் கீழ்மகன் என்னா
திரங்கி மற்றவற் கின்னருள்
சுரந்து மாழை மான்மட நோக்கியுன் தோழி,
உம்பி யெம்பி யென் றொழிந்திலை, உகந்து
தோழ னீயெனக் கிங்கொழி என்ற
சொற்கள் வந்தடி யேன்மனத் திருந்திட,
ஆழி வண்ணநின்னடியிணை யடைந்தேன்
அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே 8.1
1419 வாத மாமகன் மர்க்கடம் விலங்கு
மற்றோர் சாதியென் றொழிந்திலை, உகந்து
காதல் ஆதரம் கடலினும் பெருகச்
செய்த தகவினுக் கில்லைகைம் மாறென்று
கோதில் வாய்மையி னாயொடு முடனே
உண்பன் நான் என்ற ஓண்பொருள் எனக்கும்
ஆதல் வேண்டுமென் றடியிணை யடைந்தேன்
அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே 8.2
1420 கடிகொள் பூம்பொழில் காமரு பொய்கை
வைகு தாமரை வாங்கிய வேழம்,
முடியும் வண்ணமோர் முழுவலி முதலை
பற்ற மற்றது நின்சரண் நினைப்ப
கொடிய வாய்விலங் கின்னுயிர்மலங்கக்
கொண்டசீற்றமொன் றுண்டுள தறிந்து,உன்
அடிய னேனும்வந் தடியிணை யடைந்தேன்
அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே 8.3
1421 நஞ்சு சோர்வதோர் வெஞ்சின அரவம்
வெருவி வந்துநின் சரணெனச் சரணா
நெஞ்சிற் கொண்டுநின் னஞ்சிறைப் பறவைக்
கடைக்க லம்கொடுத் தருள்செய்த தறிந்து
வெஞ்சொ லாளர்கள் நமன்றமர் கடியர்
கொடிய செய்வன வுள,அதற் கடியேன்
அஞ்சி வந்துநின் னடியிணை யடைந்தேன்
அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே 8.4
1422 மாக மாநிலம் முழுவதும்வந் திரைஞ்சும்
மலர டிகண்ட மாமறை யாளன்,
தோகை மாமயி லன்னவ ரின்பம்
துற்றி லாமையிலத்தவிங் கொழிந்து
போகம் நீயெய்திப் பின்னும்நம் மிடைக்கே
போது வாய், என்ற பொன்னருள், எனக்கும்
ஆக வேண்டுமென் றடியிணை யடைந்தேன்
அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே 8.5
1423 மன்னு நான்மறை மாமுனி பெற்ற
மைந்த னைமதி யாதவெங் கூற்றந்
தன்னை யஞ்சிநின் சரணெனச் சரணாய்த்
தகவில் காலனை யுகமுனிந் தொழியா
பின்னை யென்றும்நின் திருவடி பிரியா
வண்ண மெண்ணிய பேரருள், எனக்கும்
அன்ன தாகுமென் றடியிணை யடைந்தேன்
அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே 8.6
1424 ஓது வாய்மையும் உவனியப் பிறப்பும்
உனக்கு முன்தந்த அந்தண னொருவன்,
காத லென்மகன் புகலிடங் காணேன்,
கண்டு நீதரு வாயெனக் கென்று,
கோதில் வாய்மையி னானுனை வேண்டிய
குறைமு டித்தவன் சிறுவனைக் கொடுத்தாய்,
ஆத லால்வந்துன் அடியிணை யடைந்தேன்
அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே 8.7
1425 வேத வாய்மொழி யந்தண னொருவன்
எந்தை நின்சர ணென்னுடை மனைவி,
காதல் மக்களைப் பயத்தலும் காணாள்
கடிய தோர் தெய்வங்கொண் டொளிக்கும், என்றழைப்ப
ஏத லார்முன்னே யின்னரு ளவர்க்குச்
செய்துன் மக்கள்மற் றிவரென்று கொடுத்தாய்,
ஆத லால்வந்துன் அடியிணை யடைந்தேன்
அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே 8.8
1426 துளங்கு நீண்முடி அரசர்தங்குரிசில்
தொண்டை மன்னவன் திண்டிற லொருவற்கு
உளங்கொ ளன்பினோ டின்னருள் சுரந்தங்
கோடு நாழிகை யேழுடனிருப்ப,
வளங்கொள் மந்திரம் மற்றவற் கருளிச்
செய்த வாறடி யேனறிந்து, உலகம்
அளந்த பொன்னடி யேயடைந் துய்ந்தேன்
அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே 8.9
1427 மாடமாளிகை சூழ்திரு மங்கை
மன்னன் ஒன்னலர் தங்களை வெல்லும்,
ஆடல் மாவல் வன்கலி கன்றி
அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானை,
நீடு தொல்புக ழாழிவல் லானை
எந்தை யைநெடு மாலைநி னைந்த,
பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர்.
பாட நும்மிடைப் பாவம்நில் லாவே 8.10
1428 கையிலங் காழி சங்கன் கருமுகில் திருநி றத்தன்,
பொய்யிலன் மெய்யன் தந்தாள் அடைவரே லடிமை யாக்கும்,
செய்யலர் கமல மோங்கு செறிபொழில் தென்தி ருப்பேர்
பையர வணையான் நாமம் பரவிநா னுய்ந்த வாறே 9.1
1429 வங்கமார் கடல்க ளேழும் மலையும்வா னகமும் மற்றும்,
அங்கண்மா ஞால மெல்லாம் அமுதுசெய் துமிழ்ந்த எந்தை,
திங்கள்மா முகில்அ ணவு செறிபொழில் தெந்தி ருப்பேர்,
எங்கள்மா லிறைவன் நாமம் ஏத்திநா னுய்ந்த வாறே 9.2
1430 ஒருவனை யுந்திப் பூமேல் ஓங்குவித் தாகந் தன்னால்,
ஒருவனைச் சாபம் நீக்கி உம்பராள் , என்று விட்டான்,
பெருவரை மதிள்கள் சூழ்ந்த பெருநகர் அரவ ணைமேல்
கருவரை வண்ணன் தென்பேர் கருதிநா னுய்ந்த வாறே 9.3
1431 ஊனமர் தலையொன் றேந்தி உலகெலாம் திரியு மீசன்
ஈனமர் சாபம் நீக்காய், என்னவொண் புனலை யீந்தான்,
தேனமர் பொழில்கள் சூழ்ந்த செறிவயல் தென்தி ருப்பேர்,
வானவர் தலைவன் நாமம் வாழ்த்திநா னுய்ந்த வாறே 9.4
1432 வக்கரன் வாய்முன் கீண்ட மாயவனே என்று வானேர்
புக்கு, அரண் தந்த ருள்வாய், என்னப்பொன் னாகத் தானை,
நக்கரி யுருவ மாகி நகங்கிளர்ந் திடந்து கந்த,
சக்கரச் செல்வன் தென்பேர்த் தலைவன்தா ளடைந்துய்ந் தேனே 9.5
1433 விலங்கலால் கடல டைத்து விளங்கிழை பொருட்டு, வில்லால்,
இலங்கைமா நகர்க்கி றைவன் இருபது புயம்து ணித்தான்,
நலங்கொள்நான் மறைவல் லார்கள் ஒத்தொலி யேத்தக் கேட்டு
மலங்குபாய் வயல்தி ருப்பேர் மருவிநான் வாழ்ந்த வாறே 9.6
1434 வெண்ணெய்தா னமுது செய்ய வெகுண்டுமத் தாய்ச்சி யோச்சி,
கண்ணியர் குறுங்க யிற்றால் கட்டவெட் டென்றி ருந்தான்,
திண்ணமா மதிள்கள் சூழ்ந்த தென்திருப் பேருள், வேலை
வண்ணனார் நாமம் நாளும் வாய்மொழிந் துய்ந்த வாறே 9.7
1435 அம்பொனா ருலக மேழும் அறியஆய்ப் பாடி தன்னுள்,
கொம்பனார் பின்னை கோலம் கூடுதற் கேறு கொன்றான்,
செம்பொனார் மதிள்கள் சூழ்ந்த தென்திருப் பேருள் மேவும்,
எம்பிரான் நாமம் நாளும் ஏத்திநா னுய்ந்த வாறே 9.8
1436 நால்வகை வேத மைந்து வேள்வியா றங்கம் வல்லார்,
மேலைவா னவரின் மிக்க வேதிய ராதி காலம்,
சேலுகள் வயல்தி ருப்பேர்ச் செங்கண்மா லோடும் வாழ்வார்,
சீலமா தவத்தர் சிந்தை யாளியென் சிந்தை யானே 9.9
1437 வண்டறை பொழில்தி ருப்பேர் வரியர வணையில் பள்ளி
கொண்டுறை கின்ற மாலைக் கொடிமதிள் மாட மங்கை,
திண்டிறல் தோள்க லியன் செஞ்சொலால் மொழிந்த மாலை,
கொண்டிவை பாடி யாடக் கூடுவார் நீள்வி சும்பே 9.10
1438 தீதறுநி லத்தொடெரி காலினொடு நீர்க்கெழுவி
சும்பு மவையாய்,
மாசறும னத்தினொடு றக்கமொடி றக்கையவை
யாய பெருமான்,
தாய்செறவு ளைந்துதயி ருண்டுகுட மாடுதட
மார்வர் தகைசேர்,
நாதனுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம்
நண்ணு மனமே 10.1
1439 உய்யும்வகை யுண்டுசொன செய்யிலுலக கேழுமொழி
யாமை முனநாள்,
மெய்யினள வேயமுது செய்யவல ஐயனவன்
மேவு நகர்தான்,
மையவரி வண்டுமது வுண்டுகிளை யோடுமலர்
கிண்டி யதன்மேல்,
நைவளம்ந விற்றுபொழில் நந்திபுர விண்ணகரம்
நண்ணு மனமே 10.2
1440 உம்பருல கேழுகட லேழுமலை யேழுமொழி
யாமை முனநாள்,
தம்பொன்வயி றாரளவு முண்டவையு மிழ்ந்ததட
மார்வர் தகைசேர்,
வம்புமலர் கின்றபொழில் பைம்பொன்வரு தும்பிமணி
கங்குல் வயல்சூழ்,
நம்பனுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம்
நண்ணு மனமே 10.3
1441 பிறையினொளி யெயிறிலக முறுகியெதிர் பொருதுமென
வந்த அசுரர்
இறைகளவை நெறுநெறென வெறியவவர் வயிறழல
நின்ற பெருமான்,
சிறைகொள்மயில் குயில்பயில மலர்களுக அளிமுரல
அடிகொள் நெடுமா,
நறைசெய்பொழில் மழைதவழும் நந்திபுர விண்ணகரம்
நண்ணு மனமே 10.4
1442 மூளவெரி சிந்திமுனி வெய்தியமர் செய்துமென
வந்த அசுரர்,
தோளுமவர் தாளுமுடி யோடுபொடி யாகநொடி
யாம ளவெய்தான்,
வாளும்வரி வில்லும்வளை யாழிகதை சங்கமிவை
யங்கை யுடையான்,
நாளுமுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம்
நண்ணு மனமே 10.5
1443 தம்பியொடு தாமொருவர் தந்துணைவி காதல்துணை
யாக முனநாள்,
வெம்பியெரி கானகமு லாவுமவர் தாமினிது
மேவு நகர்தான்,
கொம்புகுதி கொண்டுகுயில் கூவமயி லாலும் எழி
லார்பு றவுசேர்,
நம்பியுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம்
நண்ணு மனமே 10.6
1444 தந்தைமன முந்துதுயர் நந்நஇருள் வந்தவிறல்
நந்தன் மதலை,
எந்தையிவ னென்றமரர் கந்தமலர் கொண்டுதொழ
நின்ற நகர்தான்,
மந்தமுழ வோசைமழை யாகவெழு கார்மயில்கள்
ஆடுபொழில்சூழ்,
நந்திபணி செய்தநகர் நந்திபுர விண்ணகரம்
நண்ணு மனமே 10.7
1445 எண்ணில்நினை வெய்தியினி யில்லையிறை யென்றுமுனி
யாளர் திருவார்,
பண்ணில்மலி கீதமொடு பாடியவ ராடலொடு
கூட எழிலார்,
மண்ணிலிது போலநக ரில்லையென வானவர்கள்
தாம லர்கள்தூய்
நண்ணியுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம்
நண்ணு மனமே 10.8
1446 வங்கமலி பௌவமது மாமுகடி னுச்சிபுக
மிக்க பெருநீர்,
அங்கமழி யாரவன தாணைதலை சூடுமடி
யார றிதியேல்,
பொங்குபுன லுந்துமணி கங்குலிருள் சீறுமொளி
யெங்கு முளதால்,
நங்கள்பெரு மானுறையும் நந்திபுர விண்ணகரம்
நண்ணு மனமே 10.9
1447 நறைசெய் பொழில் மழைதவழும் நந்திபுர விண்ணகரம்
நண்ணி யுறையும்,
உறைகொள்புக ராழிசுரி சங்கமவை யங்கையுடை
யானை, ஒளிசேர்
கறைவளரும் வேல்வல்ல கலியனொலி மாலையிவை
யைந்து மைந்தும்,
முறையிலவை பயிலவல அடியவர்கள் கொடுவினைகள்
முழுத கலுமே 10.10
No comments:
Post a Comment