திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி
பெரிய திருமொழி முதல் பத்து
948 வாடினேன் வாடிவருந்தினேன் மனத்தால்
பெருந்துயரிடும்பையில் பிறந்து,
கூடினேன் கூடியிளையவர்த்தம்மோடு
அவர்த்தரும் கலவியேகருதி,
ஓடினேன் ஓடியுய்வதோர்ப் பொருளால்
உணர்வெனும் பெரும் பதம் திரிந்து,
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்
நாராயணா வென்னும் நாமம். 1.1
949 ஆவியே. அமுதே. எனநினைந்துருகி
அவரவர்ப்பணைமுலைதுணையா,
பாவியேனுணரா தெத்தனைபகலும்
பழுதுபோயொழிந்தனநாள்கள்,
தூவிசேரன்னம் துணையொடும்புணரும்
சூழ்புனற்குடந்தையேதொழுது, என்
நாவினாலுய்யநான் கண்டுகொண்டேன்
நாராயணாவென்னும் நாமம். 1.2
950 சேமமேவேண்டித் தீவினைபெருக்கித்
தெரிவைமாருருவமேமருவி,
ஊமனார் கண்டகனவிலும்பழுதாய்
ஒழிந்தனகழிந்தவந்நாள்கள்,
காமனார் தாதைநம்முடையடிகள்
தம்மடைந்தார்மனத்திருப்பார்,
நாமம்நானுய்ய நான்கண்டு கொண்டேன்
நாராயணாவென்னும்நாமம். 1.3
951 வென்றியே வேண்டி வீழ்பொருட் கிரங்கி
வேற்கணார் கலவியே கருதி,
நின்றவா நில்லா நெஞ்சினையுடையேன்
என்செய்கேன் நெடுவிசும்பணவும்,
பன்றியா யன்றுபாரகங்கீண்ட
பாழியா னாழியானருளே,
நன்று நானுய்ய நான்கண்டு கொண்டேன்
நாராயணாவென்னும்நாமம். 1.4
952 கள்வனேனானேன்படிறுசெய்திருப்பேன்
கண்டவாதிரிதந்தேனேலும்,
தெள்ளியேனானேன்செல்கதிக்கமைந்தேன்
சிக்கெனத்திருவருள்பெற்றேன்,
உள்ளெலாமுருகிக்குரல் தழுத்தொழிந்தேன்
உடம்பெலாம்கண்ணநீர்சோர,
நள்ளிருளளவும் பகலும் நானழைப்பன்
நாராயணாவென்னும்நாமம். 1.5
953 எம்பிரான் எந்தை என்னுடைச்சுற்றம்
எனக்கரசு என்னுடைவாணாள்,
அம்பினால் அரக்கர்வெருக்கொளநெருக்கி
அவருயிர்செகுத்தவெம்மண்ணல்,
வம்புலாஞ்சோலைமாமதிள் தஞ்சை
மாமணிக்கோயிலேவணங்கி,
நம்பிகாள் உய்யநான் கண்டு கொண்டேன்
நாராயணாவென்னும்நாமம். 1.6
954 இற்பிறப்பறியீர் இவரவரென்னீர்
இன்னதோர்த்தன்மையென்றுணரீர்,
கற்பகம்புலவர்களைகணென்றூலகில்
கண்டவாதொண்டரைப்பாடும்,
சொற்புருளாளீர்சொல்லுகேன்வம்மின்
சூழ்புனற்குடந்தையேதொழுமின்,
நற்பொருள்காண்மின் பாடி நீருய்ம்மின்
நாராயணாவென்னும்நாமம். 1.7
955 கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும்
கருத்துளே திருத்தினேன் மனத்தை,
பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை
பெருநிலத்தாருயிர்க்கெல்லாம்,
செற்றமேவேண்டித்திரிதருவேன் தவிர்ந்தேன்
செல்கதிக்குய்யுமாறெண்ணி,
நற்றுணையாகப்பற்றினேன் அடியேன்
நாராயணாவென்னும்நாமம். 1.8
956 குலம்தரும் செல்வம் தந்திடும் அடியார்
படுதுயராயினவெல்லம்,
நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும்
அருளொடுபெருநிலமளிக்கும்,
வலந்தரும்மற்றுந்தந்திடும் பெற்ற
தாயினு மாயினசெய்யும்,
நலந்தருஞ்சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணாவென்னும்நாமம். 1.9
957 மஞ்சுலாஞ் சோலை வண்டறை மாநீர்
மங்கையார்வாள் கலிகன்றி,
செஞ்சொலாலெடுத்த தெய்வ நன்மாலை
இவைகொண்டு சிக்கெனத்தொண்டீர்.,
துஞ்சும்போது அழைமின் துயர்வரில் நினைமின்
துயரிலீர் சொல்லிலும் நன்றாம்,
நஞ்சுதான் கண்டீர் நம்முடைவினைக்கு
நாராயணாவென்னும் நாமம். 1.10
958 வாலிமாவலத்தொருவனதுடல்கெட
வரிசிலைவளைவித்து,அன்று
ஏலநாறுதண்தடம்பொழிலிடம்பெற
இருந்தநலிமய்யத்துள்,
ஆலிமாமுகிலதிர்தர அருவரை
அகடுறமுகடேறி,
பீலிமாமயில்நடஞ்செயும்தடஞ்சுனைப்
பிரிதிசென்றடைநெஞ்சே. 2.1
959 கலங்கமாக்கடலரிகுலம்பணிசெய்ய
அருவரையணைகட்டி,
இலங்கைமாநகர்ப்பொடிசெய்தவடிகள்தாம்
இருந்தநல்லிமயத்து,
விலங்கல்போல்வனவிறலிருஞ்சினத்தன
வேழங்கள்துயர்க்கூர,
பிலங்கொள்வாளெயிற்றரியவைதிரி தரு
பிரிதிசென்றடைநெஞ்சே. 2.2
960 துடிகொள்_ண்ணிடைச்சுரிகுழல் துளங்கெயிற்
றிளங்கொடிதிறத்து, ஆயர்
இடிகொள்வெங்குரலினவிடையடர்த்தவன்
இருந்தநல்லிமயத்து,
கடிகொள்வேங்கையின்நறுமலரமளியின்
மணியறைமிசைவேழம்,
பிடியினோடுவண்டிசைசொலத்துயில்கொளும்
பிரிதிசென்றடைநெஞ்சே. 2.3
961 மறங்கொளாளரியுருவெனவெருவர
ஒருவனதகல்மார்வம்
திறந்து,வானவர்மணிமுடிபணிதர
இருந்தநல்லிமயத்துள்,
இறங்கியேனங்கள்வளைமருப்பிடந்திடக்
கிடந்தருகெரிவீசும்,
பிறங்குமாமணியருவியொடிழிதரு
பிரிதிசென்றடைனெஞ்சே. 2.4
962 கரைசெய்மாக்கடல்கிடந்தவன் கனைகழல்
அமரர்கள்தொழுதேத்த,
அரைசெய்மேகலையலர்மகளவளொடும்
அமர்ந்தநல்லிமயத்து,
வரைசெய்மாக்களிறீளவெதிர்வளர்முளை
அளைமிகுதேன்தோய்த்து,
பிரசவாரிதன்னிளம்பிடிக்கருள்செயும்
பிரிதிசென்றடைநெஞ்சே. 2.5
963 பணங்களாயிரமுடையநல்லவரவணைப்
பள்ளிகொள் பரமாவென்று,
இணங்கிவானவர்மணிமுடிபணிதர
இருந்தநல்லிமயத்து,
மணங்கொள்மாதவிநெடுங்கொடிவிசும்புற
நிமிர்ந்தவைமுகில்பற்றி,
பிணங்குபூம்பொழில்நுழைந்துவண்டிசைசொலும்
பிரிதிசென்றடைநெஞ்சே. 2.6
964 கார்கொள்வேங்கைகள்கனவரைதழுவிய
கறிவளர்க்கொடிதுன்னி,
போர்கொள்வேங்கைகள்புனவரைதழுவிய
பூம்பொழிலிமயத்துள்,
ஏர்கொள்பூஞ்சுனைத்தடம்படிந் தினமலர்
எட்டுமிட்டிமையோர்கள்,
பேர்களாயிரம்பரவிநின்றடிதொழும்
பிரிதிசென்றடைநெஞ்சே. 2.7
965 இரவுகூர்ந்திருள்பெருகியவரைமுழை
இரும்பசியதுகூர,
அரவமாவிக்குமகன்பொழில்தழுவிய
அருவரையிமயத்து,
பரமனாதியெம்பனிமுகில்வண்ணனென்று
எண்ணிநின்றிமையோர்கள்,
பிரமனோடுசென்றடிதொழும்பெருந்தகைப்
பிரிதிசென்றடைநெஞ்சே. 2.8
966 ஓதியாயிரநாமங்களுணர்ந்தவர்க்கு
உறுதுயரடையாமல்,
ஏதமின்றிநின்றருளும்நம்பெருந்தகை
இருந்தநல்லிமயத்து,
தாதுமல்கியபிண்டிவிண்டலர்கின்ற
தழல்புரையெழில்நோக்கி,
பேதைவண்டுகளெரியெனவெருவரு
பிரிதிசென்றடைநெஞ்சே. 2.9
967 கரியமாமுகிற்படலங்கள்கிடந்து
அவைமுழங்கிட,களிறென்று
பெரியமாசுணம்வரையெனப்பெயர்தரு
பிரிதியெம்பெருமானை,
வரிகொள்வண்டறைபைம்பொழில்மங்கையர்
கலியனதொலிமாலை,
அரியவின்னிசைபாடுநல்லடியவர்க்கு
அருவினையடயாவே. 2.10
968 முற்றமூத்துக்கோல்துணையா
முன்னடிநோக்கிவளைந்து,
இற்றகால்போல்தள்ளி
மெள்ள இருந்தங்கிளையாமுன்,
பெற்றதாய்போல்வந்த
பேய்ச்சி பெருமுலையூடு, உயிரை
வற்றவாங்கியுண்ட
வாயான் வதரிவணங்குதுமே. 3.1
969 முதுகுபற்றிக்கைத்த
லத்தால் முன்னொருகோலூன்றி,
விதிர்விதிர்த்துக்கண்
சுழன்று மேற்கிளைகொண்டிருமி,
இதுவென்னப்பர் மூத்தவா
றென்று இளையவரேசாமுன்,
மதுவுண்வண்டுபண்கள்
பாடும் வதரிவணங்குதுமே. 3.2
970 உறிகள்போல்மெய்ந்நரம்
பெழுந்து ஊன்தளர்ந்துள்ளமெள்கி,
நெறியைநோக்கிக்கண்
சுழன்று நின்றுநடுங்காமுன்,
அறிதியாகில்நெஞ்சம்
அன்பா யாயிரநாமஞ்சொல்லி,
வெறிகொள்வண்டுபண்கள்
பாடும் வதரிவணங்குதுமே. 3.3
971 பீளைசோரக்கண்ணி
டுங்கிப் பித்தெழமூத்திருமி,
தாள்கள் நோவத்தம்மில்
முட்டித் தள்ளிநடவாமுன்,
காளையாகிக்கன்று
மேய்த்துக் குன்றெடுத்தன்றுநின்றான்,
வாளைபாயும்தண்ட
டஞ்சூழ் வதரிவணங்குதுமே. 3.4
972 பண்டுகாமரான
வாறும் பாவையர்வாயமுதம்
உண்டவாறும், வாழ்ந்த
வாறும் ஒக்கவுரைத்திருமி,
தண்டுகாலாவூன்றி
யூன்றித்
தள்ளிநடவாமுன், வண்டுபாடும்தண்டு
ழாயான் வதரிவணங்குதுமே. 3.5
973 எய்த்தசொல்லோடீளை
யேங்கி இயிருமியிளைத்துடலம்,
பித்தர்ப்போலச்சித்தம்
வேறாய்ப் பேசியயராமுன்,
அத்தனெந்தையாதி
மூர்த்தி ஆழ்கடலைக்கடைந்த,
மைத்தசோதியெம்பெ
ருமான் வதரிவணங்குதுமே. 3.6
974 பப்பவப்பர்மூத்த
வாறு பாழ்ப்பதுசீத்திரளை
யொப்ப, ஐக்கள்போத
வுந்த உன்தமர்க்காண்மினென்று,
செப்புநேர்மென்கொங்கை
நல்லார் தாம்சிரியாதமுன்னம்,
வைப்பும்நங்கள்வாழ்வு
மானான் வதரிவணங்குதுமே. 3.7
975 ஈசிபோமினீங்கி
ரேன்மின் இருமியிளைத்தீர், உள்ளம்
கூசியிட்டீரென்று
பேசும் குவளையங்கண்ணியர்ப்பால்,
நாசமானபாசம்
விட்டு நன்னெறிநோக்கலுறில்,
வாசம்மல்குதண்டு
ழாயான் வதரிவணங்குதுமே. 3.8
976 புலன்கள்நையமெய்யில்
மூத்துப் போந்திருந்துள்ளமெள்கி,
கலங்கவைக்கள்போத
வுந்திக் கண்டபிதற்றாமுன்,
அலங்கலாயதண்டு
ழாய்கொண்டு ஆயிரநாமம்சொல்லி,
வலங்கொள்தொண்டர்ப்பாடி
யாடும் வதரிவணங்குதுமே. 3.9
977 வண்டுதண்டேனுண்டுவாழும்
வதரிநெடுமாலை,
கண்டல்வேலிமங்கை
வேந்தன் கலியனொலிமாலை,
கொண்டுதொண்டர்ப்பாடி
யாடக் கூடிடில்நீள்விசும்பில்,
அண்டமல்லால்மற்ற
வர்க்கு ஓராட்சியறியோமே. 3.10
978 ஏனமுனாகியிருநிலமிடந்து
அன்றிணையடியிமையவர்வணங்க,
தானவனாகம்தரணியில்புரளத்
தடஞ்சிலைகுனித்தவெந்தலைவன்,
தேனமர்சோலைக்கற்பகம்பயந்த
தெய்வநன்னறுமலர்க்கொணர்ந்து,
வானவர்வணங்கும்கங்கையின்கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே. 4.1
979 கானிடையுருவைச்சுடுசரம்துரந்து
கண்டுமுங்கொடுந்தொழிலுரவோன்,
ஊனுடையகலத்தடுகணைகுளிப்ப
உயிர்க்கவர்ந்துகந்தவெம்மொருவன்,
தேனுடைக்கமலத்தயனொடுதேவர்
சென்றுசென்றிறைஞ்சிட, பெருகு
வானிடைமுதுநீர்க்கங்கையிங்கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே. 4.2
980 இலங்கையும்கடலுமடலருந்துப்பின்
இருநிதிக்கிறைவனும், அரக்கர்
குலங்களும்கெடமுன் கொடுந்தொழில்புரிந்த
கொற்றவன் கொழுஞ்சுடர்சுழன்ற,
விலங்கலிலுரிஞ்சிமேல்நின்றவிசும்பில்
வெண்துகிற்கொடியெனவிரிந்து,
வலந்தருமணிநீர்க்கங்கையின் கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே. 4.3
981 துணிவினியுனக்குச்சொல்லுவன்மனமே.
தொழுதெழுதொண்டர்கள்தமக்கு,
பிணியொழித்தமரர்ப்பெருவிசும்பருளும்
பேரருளாளனெம்பெருமான்,
அணிமலர்க்குழலாரரம்பையர்துகிலும்
ஆரமும்வாரிவந்து, அணிநீர்
மணிகொழித்திழிந்த கங்கையின்கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே. 4.4
982 பேயிடைக்கிருந்துவந்தமற்றவள்தன்
பெருமுலைசுவைத்திட, பெற்ற
தாயிடைக்கிருத்தலஞ்சுவனென்று
தளர்ந்திட வளர்ந்தவெந்தலைவன்,
சேய்முகட்டுச்சியண்டமுஞ்சுமந்த
செம்பொன்செய்விலங்கலிலிலங்கு,
வாய்முகட்டிழிந்தகங்கையின்கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே. 4.5
983 தேரணங்கல்குல்செழுங்கையற்கண்ணி
திறத்து ஒருமறத்தொழில்புரிந்து,
பாரணங்கிமிலேறேழுமுன்னடர்த்த
பனிமுகில்வண்ணனெம்பெருமான்,
காரணந்தன்னால்கடும்புனல்கயத்த
கருவரைபிளவெழக்குத்தி,
வாரணங்கொணர்ந்தகங்கையின்கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே. 4.6
984 வெந்திறல்களிறும்வேலைவாயமுதும்
விண்ணொடுவிண்ணவர்க்கரசும்,
இந்திரற்கருளியெமக்குமீந்தருளும்
எந்தையெம்மடிகளெம்பெருமான்,
அந்தரத்தமரரடியிணைவணங்க
ஆயிரமுகத்தினாலருளி,
மந்தரத்திழிந்தகங்கையின்கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே. 4.7
985 மான்முனிந்தொருகால்வரிசிலைவளைத்த
மன்னவன்பொன்னிறத்துரவோன்,
ஊன்முனிந்தவனதுடலிருபிளவா
உகிர்நுதிமடுத்து, அயனரனைத்
தான்முனிந்திட்ட வெந்திறல்சாபம்
தவிர்த்தவன், தவம்புரிந்துயர்ந்த
மாமுனிகொணர்ந்தகங்கையின்கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே. 4.8
986 கொண்டல்மாருதங்கள்குலவரைதொகுநீர்க்
குரைகடலுலகுடனனைத்தும்,
உண்டமாவயிற்றோனொண் சுடரேய்ந்த
உம்பருமூழியுமானான்,
அண்டமூடறுத்தன்றந்தரத்திழிந்து
அங்கவனியாளலமர, பெருகு
மண்டுமாமணிநீர்க்கங்கையின் கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே. 4.9
987 வருந்திரைமணிநீர்க்கங்கையின் கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானை,
கருங்கடல்முந்நீர்வண்ணனையெண்ணிக்
கலியன்வாயொலிசெய்தபனுவல்,
வரஞ்செய்தவைந்துமைந்தும்வல்லார்கள்
வானவருலகுடன் மருவி,
இருங்கடலுலகமாண்டுவெண்குடைக்கீழ்
இமையவராகுவர்தாமே. 4.10
988 கலையும்கரியும்பரிமாவும்
திரியும்கானம்கடந்துபோய்,
சிலையும்கணையும்துணையாகச்
சென்றான்வென்றிச்செறுக்களத்து,
மலைகொண்டலைநீரணைகட்டி
மதிள்நீரிலங்கைவாளரக்கர்
தலைவன், தலைபத்தறுத்துகந்தான்
சாளக்கிராமமடைநெஞ்சே. 5.1
989 கடம்சூழ்க்கரியும்பரிமாவும் ஒலிமாந்தேரும்காலாளும்,
உடன்சூழ்ந்தெழுந்தகடியிலங்கை பொடியவடிவாய்ச்சரம்துரந்தான்,
இடம்சூழ்ந்தெங்குமிருவிசும்பில் இமையோர்வணங்கமணம்கமழும்,
தடம்சூழ்ந்தெங்குமழகாய சாளக்கிராமமடைநெஞ்சே. 5.2
990 உலவுதிரையும்குலவரையும் ஊழிமுதலாவெண்திக்கும்,
நிலவும்சுடருமிருளுமாய் நின்றான்வென்றிவிறலாழி
வலவன், வானோர்த்தம்பெருமான் மருவாவரக்கர்க்கெஞ்ஞான்றும்
சலவன், சலம்சூழ்ந்தழகாய சாளக்கிராமமடைநெஞ்சே. 5.3
991 ஊராங்குடந்தையுத்தமன் ஒருகாலிருகால்சிலைவளைய,
தேராவரக்கர்த்தேர்வெள்ளம்செற்றான் வற்றாவருபுனல்சூழ்
பேரான், பேராயிரமுடையான் பிறங்குசிறைவண்டறைகின்ற
தாரான், தாராவயல்சூழ்ந்த சாளக்கிராமமடைநெஞ்சே. 5.4
992 அடுத்தார்த்தெழுந்தாள்பிலவாய்விட்டலற அவள்மூக்கயில்வாளால்
விடுத்தான், விளங்குசுடராழி விண்ணோர்ப்பெருமான், நண்ணார்முன்,
கடுத்தார்த்தெழுந்தபெருமழையைக் கல்லொன்றேந்தியினநிரைக்காத்
தடுத்தான், தடம்சூழ்ந்தழகாய சாளக்கிராமமடைநெஞ்சே. 5.5
993 தாயாய்வந்தபேயுயிரும் தயிரும்விழுதுமுடனுண்ட
வாயான், தூயவரியுருவிற்குறளாய்ச்சென்று மாவலையை
ஏயானிரப்ப, மூவடிமண்ணின்றெதாவென்று உலகேழும்
தாயான், காயாமலர்வண்ணன் சாளக்கிராமமடைநெஞ்சே. 5.6
994 ஏனோரஞ்சவெஞ்சமத்துள் அரியாய்ப்பரியவிரணியனை,
ஊனாரகலம்பிளவெடுத்த ஒருவன்தானேயிருசுடராய்,
வானாய்த்தீயாய்மாருதமாய் மலையாயலைநீருலகனைத்தும்
தானாய், தானுமானாந்தன் சாளக்கிராமமடைநெஞ்சே. 5.7
995 வெந்தாரென்பும்சுடுநீறும் மெய்யில்பூசிக்கையகத்து, ஓர்
சந்தார் தலைகொண்டுலகேழும் திரியும்பெரியோந்தான்சென்று, என்
எந்தாய். சாபம்தீரென்ன இலங்கமுதநீர்த்திருமார்பில்
தந்தான், சந்தார்ப்பொழில்சூழ்ந்த சாளக்கிராமமடைநெஞ்சே. 5.8
996 தொண்டாமினமுமிமையோரும் துணைநுaல்மார்பினந்தணரும்,
அண்டாவெமக்கேயருளாயென்று அணயும்கோயிலருகெல்லாம்,
வண்டார்ப்பொழிலின்பழனத்து வயலினயலேகயல்பாய,
தண்டாமரைகள்முகமலர்த்தும் சாளக்கிராமமடைநெஞ்சே. 5.9
997 தாராவாரும்வயல்சூழ்ந்த சாளக்கிராமத்தடிகளை,
காரார்ப்புறவின்மங்கைவேந்தன் கலியனொலிசெய் தமிழ்மாலை,
ஆராருலகத்தறிவுடையார் அமரர்நன்னாட்டரசாள,
பேராயிரமுமோதுமிங்கள் அன்றியிவையேபிதற்றுமினே. 5.10
998 வாணிலாமுறுவல்சிறுனுதல்பெருந்தோள் மாதரார்வனமுலைப்பயனே
பேணினேன், அதனைப்பிழையெனக்கருதிப் பேதையேன்பிறவிநோயறுப்பான்,
ஏணிலேனிருந்தேனெண்ணினேனெண்ணி இளையவர்க்கலவியிந்திறத்தை
நாணினேன், வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய். 6.1
999 சிலம்படியுருவிற்கருநெடுங்கண்ணார் திறத்தனாயறத்தயேமறந்து,
புலம்படிந்துண்ணும் போகமேபெருக்கிப் போக்கினேன் பொழுதினைவாளா,
அலம்புரிதடக்கையாயனேமாயா. வானவர்க்கரசனே., வானோர்
நலம்புரிந்திறைஞ்சுன்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய். 6.2
1000 சூதினைப்பெருக்கிக்களவினைத்துணிந்து சுரிகுழல்மடந்தையர்த்திறத்து,
காதலேமிகுத்துக்கண்டவாதிரிந்ததொண்டனேன் நமன்தமர்செய்யும்,
வேதனைக்கொடுங்கிநடுங்கினேன் வேலைவெண்டிரையலமரக்கடைந்த,
நாதனேவந்துன் திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய். 6.3
1001 வம்புலாங்கூந்தல்மனைவியைத்துறந்து பிறர்ப்பொருள்தாரமென்றிவற்றை,
நம்பினாரிறந்தால்நமன் தமர்ப்பற்றி எற்றிவைத்து, எரியெழுகின்ற
செம்பினாலியன்றபாவையைப் பாவீ. தழுவெனமொழிவதர்க்கஞ்சி,
நம்பனே. வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய். 6.4
1002 இடும்பையாலடர்ப்புண்டிடுமினோதுற்றென்னு இரந்தவர்க்கில்லையேயென்று,
நெடுஞ்சொலால்மனுத்தநீசனேனந்தோ. நினைக்கிலேன் வினைப்பயன் தன்னை,
கடுஞ்சொலார்க்கடியார்க்காலனார் தமரால் படுவதோர் கொடுமிறைக்கஞ்சி,
நடுங்கிநான்வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய். 6.5
1003 கோடியமனத்தால்சினத்தொழில்புரிந்து திரிந்துநாயினத்தொடுந்திளைத்திட்டு,
ஓடியுமுழன்றுமுயிர்களேகொன்றேன் உணர்விலேனாதலால், நமனார்
பாடியைப்பெரிதும் பரிசழித்திட்டேன் பரமனே.
பாற்கடல்கிடந்தாய்.,
நாடிநான்வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய். 6.6
1004 நெஞ்சினால்,நினைந்தும்வாயினால்மொழிந்தும் நீதியல்லாதனசெய்தும்,
துஞ்சினார்செல்லுந்தொன்னெறிகேட்டே துளங்கினேன்விளங்கனிமுனிந்தாய்.,
வஞ்சனேடியேன்நெஞ்சினிற்பிரியா வானவா. தானவர்க்கென்றும்
நஞ்சனே., வந்துன்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய். 6.7
1005 ஏவினார்க்கலியார்னலிகவென்றென்மேல் எங்ஙணேவாழுமாறு?, ஐவர்
கோவினார்செய்யுக்கொடுமையைமடித்தேன் குறுங்குடிநெடுங்கடல்வண்ணா.,
பாவினாரின்சொல்பன்மலர்க்கொண்டு உன்பாதமேபரவிநான் பணிந்து, என்
நாவினால்வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய். 6.8
1006 ஊனிடைச்சுவர்வைத்தென்புதூண்நாட்டி உரோமம் வேய்ந்தொன்பதுவாசல்,
தானுடைக்குரம்பைப்பிரியும்போது உன்றன்சரணமேசரணமென்றிருந்தேன்,
தேனுடைக்கமலத்திருவினுக்கரசே. திரைகொள்மாந்டுங்கடற்கிடந்தாய்.,
நானுடைத்தவத்தால்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய். 6.9
1007 ஏதம்வந்தணுகாவண்ணநாமெண்ணி யெழுமினோதொழுதுமென்று, இமையோர்
நாதன்வந்திரைஞ்சும் நைமிசாரணியத்தெந்தையைச்சிந்தையுள்வைத்து,
காதலேமிகுத்தகலியன்வாயொலிசெய் மாலைதாம்கற்றுவல்லார்கள்,
ஓதநீர்வையகமாண்டுவெண்குடைக்கீழ் உம்பருமாகுவர்த்தாமே. 6.10
1008 அங்கண்ஞாலமஞ்ச அங்கோராளரியாய் அவுணன்
பொங்கவாகம்வள்ளுகிரால் போழ்ந்தபுனிதனிடம்,
பைங்கணானைக்கொம்புகொண்டு பத்திமையால், அடிக்கீழ்ச்
செங்கணாளியிட்டிறைஞ்சும் சிங்கவேள்குன்றமே. 7.1
1009 அலைத்தபேழ்வாய் வாளெயிற்றோர்க்கோளரியாய், அவுணன்
கொலைக்கையாளன்நெஞ்சிடந்த கூருகிராளனிடம்,
மலைத்தசெல்சாத்தெறிந்தபூசல் வன்துடிவாய்கடுப்ப,
சிலைக்கைவேடர்த்தெழிப்பறாத சிங்கவேள்குன்றமே. 7.2
1010 ஏய்ந்தபேழ்வாய் வாளெயிற்றோர்க்கோளரியாய், அவுணன்
வாய்ந்தவாகம்வள்ளுகிரால் வகிர்ந்தவம்மானதனிடம்,
ஓய்ந்தமாவுமுடைந்தகுன்றும் அன்றியும் நின்றழலால்,
தேய்ந்தவேயுமல்லதில்லாச் சிங்கவேள்குன்றமே. 7.3
1011 எவ்வம்வெவ்வேல்பொன்பெயரோன் ஏதலினின்னுயிரை
வவ்வி, ஆகம்வள்ளுகிரால் வகிர்ந்தவம்மானதிடம்,
கவ்வுநாயும்கழுகும் உச்சிபோதொடுகால்சுழன்று,
தெய்வமல்லால்செல்லவொண்ணாச் சிங்கவேள்குன்றமே. 7.4
1012 மென்றபேழ்வாய் வாளெயிற்றோர்க்கோளரியாய், அவுணன்
பொன்றவாகம்வள்ளுகிரால் போழ்ந்தபுனிதனிடம்,
நின்றசெந்தீமொண்டுசூறை நீள்விசும்பூடிரிய,
சென்றுகாண்டற்கரியகோயில் சிங்கவேள்குன்றமே. 7.5
1013 எரிந்தபைங்கணிலங்குபேழ்வாய் எயிற்றொடிதெவ்வுருவென்று,
இரிந்துவானோர் கலங்கியோட இருந்தவம்மானதிடம்,
நெரிந்தவேயின் முழையுள்நின்று நீணெறிவாயுழுவை,
திரிந்தவானைச்சுவடுபார்க்கும் சிங்கவேள்குன்றமே. 7.6
1014 முனைத்தசீற்றம்விண்சுடப்போய் மூவுலகும்பிறவும்,
அனைத்துமஞ்சவாளரியாய் இருந்தவம்மானதிடம்,
கனைத்ததீயும்கல்லுமல்லா வில்லுடைவேடருமாய்,
தினைத்தனையும்செல்லவொண்ணாச் சிங்கவேள்குன்றமே. 7.7
1015 நாத்தழும்பநான்முகனும் ஈசனுமாய்முறையால்
ஏத்த, அங்கோராளரியாய் இருந்தவம்மானதிடம்,
காய்த்தவாகைநெற்றொலிப்பக் கல்லதர்வேய்ங்கழைபோய்,
தேய்த்ததீயால்விண்சிவக்கும் சிங்கவேள்குன்றமே. 7.8
1016 நல்லைநெஞ்சே. நாந்தொழுதும் நம்முடைநம்பெருமான்,
அல்லிமாதர் புல்கநின்ற ஆயிரந்தோளனிடம்,
நெல்லிமல்கிக்கல்லுடைப்பப் புல்லிலையார்த்து, அதர்வாய்ச்
சில்லிசில்லென்றொல்லறாத சிங்கவேள்குன்றமே. 7.9
1017 செங்கணாளிட்டிறைஞ்சும் சிங்கவேள்குன்றுடைய,
எங்களீசனெம்பிரானை இருந்தமிழ்_ற்புலவன்,
மங்கையாளன்மன்னுதொல்சீர் வண்டறை தார்க்கலியன்,
செங்கையாளன் செஞ்சொல்மாலை வல்லவர்த்தீதிலரே. 7.10
1018 கொங்கலர்ந்தமலர்க்குருந்தமொசித்த கோவலனெம்பிரான்,
சங்குதங்குதடங்கடல்துயில்கொண்ட தாமரைக்கண்ணினன்,
பொங்குபுள்ளினைவாய்பிளந்த புராணர்த்தம்மிடம், பொங்குநீர்ச்
செங்கயல்திளைக்கும்சுனைத் திருவேங்கடமடை நெஞ்சமே. 8.1
1019 பல்லியாவதுபாற்கடலரங்கம் இரங்கவன்பேய்முலை,
பிள்ளையாயுயிருண்டவெந்தை பிரானவன்பெருகுமிடம்,
வெள்ளியான் கரியான் மணிநிறவண்ணனென்றெண்ணி, நாடொறும்
தெள்ளியார்வணங்கும்மலை திருவேங்கடமடைநெஞ்சமே. 8.2
1020 நின்றமா மருதிற்றுவீழ நடந்தநின்மலன்நேமியான்,
என்றும்வானவர்க்கைதொழும் இணைத்தாமரையடியெம்பிரான்,
கன்றிமாரிபொழிந்திடக் கடிதானிரைக்கிடர் நீக்குவான்,
சென்றுகுன்றமெடுத்தவன் திருவேங்கடமடைநெஞ்சமே. 8.3
1021 பார்த்தற்காயன்றுபாரதம்கைசெய்திட்டு வென்றபரஞ்சுடர்,
கோத்தங்காயர் தம்பாடியில் குரவைபிணைந்தவெங்கோவலன்,
ஏத்துவார்த்தம்மனத்துள்ளான் இடவெந்தைமேவியவெம்பிரான்
தீர்த்தநீர்த்தடஞ்சோலைசூழ் திருவேங்கடமடைநெஞ்சமே. 8.4
1022 வண்கையானவுணர்க்குநாயகன் வேள்வியில்சென்றுமாணியாய்,
மண்கையாலிரந்தான் மராமரமேழுமெய்தவலத்தினான்,
எண்கையானிமயத்துள்ளான் இருஞ்சோலைமேவியவெம்பிரான்,
திண்கைம்மாதுயரதீர்த்தவன் திருவேங்கடமடைநெஞ்சமே. 8.5
1023 எண்டிசைகளுமேழுலகமும்வாங்கிப் பொன்வயிற்றில்பெய்து,
பண்டோராலிலைப்பள்ளிகொண்டவன் பான்மதிக்கிடர்த்தீர்த்தவன்,
ஒண்டிறலவுணனுரத்துகிர்வைத்தவன்ஒள்ளெயிற்றொடு
திண்டிறலரியாயவன் திருவேங்கடமடைநெஞ்சமே. 8.6
1024 பாருநீரெரிகாற்றினொடு ஆகாசமுமிவையாயினான்,
பேருமாயிரம் பேசநின்ற பிறப்பிலிபெருகுமிடம்,
காரும்வார்ப்பனிநீள்விசும்பிடைச் சோருமாமுகில்தோய்தர,
சேரும்வார்ப்பொழில்சூழ் எழில்திருவேங்கடமடைநெஞ்சமே. 8.7
1025 அம்பரமனல்கால்நிலம்
சலமாகிநின்றவமரர்க்கோன், வம்புலாமலர்மேல்
மலிமட மங்கை தன்கொழுநனவன்,
கொம்பினன்னவிடை மடக்குறமாதர் நீளிதணந்தொறும்,
செம்புனமவைகாவல்கொள் திருவேங்கடமடைநெஞ்சமே. 8.8
1026 பேசுமிந்திருநாமமெட்டெழுத்தும் சொல்லிநின்று, பின்னரும்,
பேசுவார்த்தம்மையுய்யவாங்கிப் பிறப்பறுக்கும்
பிரானிடம், வாசமாமலர்நாறுவார்
பொழில்சூழ்தருமுலகுக்கெல்லாம்,
தேசமாய்த்திகழும்மலை திருவேங்கடமடைநெஞ்சமே. 8.9
1027 செங்கயல்திளைக்கும் சுனைத் திருவேங்கடத்துறைசெல்வனை,
மங்கையர்த்தலைவங்கலிகன்றி வண்டமிழ்ச்செஞ்சொல்மாலைகள்,
சங்கையின்றித்தரித்துரைக்கவல்லார்கள் தஞ்சமதாகவே,
வங்கமாகடல்வையம்காவலராகி வானுலகாள்வரே. 8.10
1028 தாயேதந்தையென்றும் தாரமேகிளைமக்களென்றும்,
நோயேபட்டொழிந்தேன் உன்னைக்காண்பதோராசையினால்,
வேயேய்பூம்பொழில்சூழ் விரையார் திருவேங்கடவா.,
நாயேன்வந்தடைந்தேன் நல்கியாளென்னைக்கொண்டருளே. 9.1
1029 மானேய்கண்மடவார் மயக்கில்பட்டு மாநிலத்து,
நானேநானாவித நரகம்புகும்பாவம்செய்தேன்,
தேனேய்பூம்பொழில்சூழ் திருவேங்கடமாமலை, என்
ஆனாய் வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே. 9.2
1030 கொன்றேன்பல்லுயிரைக் குறிக்கோளொன்றிலாமையினால்,
என்றேனுமிரந்தார்க்கு இனிதாகவுரைத்தறியேன்,
குன்றேய்மேகமதிர் குளிர்மாமலைவேங்கடவா.,
அன்றேவந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே. 9.3
1031 குலந்தானெத்தனையும் பிறந்தேயிறந்தெய்த்தொழிந்தேன்,
நலந்தானொன்றுமிலேன் நல்லதோரறம்செய்துமிலேன்,
நிலம்தோய்நீள்முகில்சேர் நெறியார்த்திருவேங்கடவா.,
அலந்தேன்வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே. 9.4
1032 எப்பாவம்பலவும் இவையேசெய்திளைத்தொழிந்தேன்,
துப்பா. நின்னடியே
தொடர்ந்தேத்தவும்கிற்கின்றிலேன்,
செப்பார்த்திண்வரைசூழ் திருவேங்கடமாமலை, என்
அப்பா. வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே. 9.5
1033 மன்னாய்நீரெரிகால் மஞ்சுலாவுமாகாசமுமாம்,
புண்ணாராக்கைதன்னுள் புலம்பித்தளர்ந்தெய்த்தொழிந்தேன்,
விண்ணார்நீள்சிகர விரையார்த்திருவேங்கடவா.,
அண்ணா. வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே. 9.6
1034 தெரியென்பாலகனாய்ப் பலதீமைகள்செய்துமிட்டேன்,
பெரியேனாயின பின் பிறர்க்கேயுழைத்தேழையானேன்,
கரிசேர்ப்பூம்பொழில்சூழ் கனமாமலைவேங்கடவா.,
அரியே. வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே. 9.7
1035 நோற்றேன்பல்பிறவி உன்னைக்காண்பதோராசையினால்,
ஏற்றேனிப்பிறப்பே யிடருற்றனனெம்பெருமான்.,
கோல்தேன் பாய்ந்தொழுகும் குளிர்சோலைசூழ்வேங்கடவா.,
ஆற்றேன்வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே. 9.8
1036 பற்றேலொன்றுமிலேன் பாவமேசெய்துபாவியானேன்,
மற்றேலொன்றறியேன் மாயனே. எங்கள்மாதவனே.,
கல்தேன்பாய்ந்தொழுகும் கமலச்சுனைவேங்கடவா.,
அற்றேன்வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே. 9.9
1037 கண்ணாயேழுலகுக்கு உயிராயவெங்கார்வண்ணனை,
விண்ணோர்த்தாம்பரவும் பொழில்வேங்கடவேதியனை,
திண்ணார்மாடங்கள் சூழ் திருமங்கையர்க்கோன்கலியன்,
பண்ணார்ப்பாடல்பத்தும் பயில்வார்க்கில்லைபாவங்களே. 9.10
1038 கண்ணார்க்கடல்சூழ் இலங்கைக்கிறைவந்தன்,
திண்ணாகம்பிளக்கச் சரம்செலவுய்த்தாய்.,
விண்ணோர்த்தொழும் வேங்கடமாமலைமேய,
அண்ணா. அடியேன் இடரைக்களையாயே. 10.1
1039 இலங்கைப்பதிக்கு அன்றீறையாய, அரக்கர்
குலம்கெட்டவர்மாளக்
கொடிப்புள்திரித்தாய்., விலங்கல்குடுமித்
திருவேங்கடம்மேய,
அலங்கல்துளபமுடியாய். அருளாயே. 10.2
1040 நீரார்க்கடலும் நிலனும்முழுதுண்டு,
ஏராலமிளந்தளிர்மேல் துயிலெந்தாய்.,
சீரார் திருவேங்கடமாமலைமேய,
ஆராவமுதே. அடியேற்கருளாயே. 10.3
1041 உண்டாயுறிமேல் நறுனெய்யமுதாக,
கொண்டாய்குறளாய் நிலமீரடியாலே,
விண்தோய்சிகரத்
திருவேங்கடம்மேய,
அண்டா. அடியேனுக்கு அருள்புரியாயே. 10.4
1042 தூணாயதனூடு அரியாய்வந்துதோன்றி,
பேணாவவுணனுடலம் பிளந்திட்டாய்.,
சேணார் திருவேங்கடமாமலைமேய,
கோணாகணையாய். குறிக்கொள்ளெனைநீயே. 10.5
1043 மன்னா இம்மனிசப்பிறவியைநீக்கி,
தன்னாகித் தன்னினருள்செய்யும்தலைவன்,
மின்னார்முகில்சேர் திருவேங்கடம்மேய,
என்னானையென்னப்பன் என்னெஞ்சிலுளானே. 10.6
1044 மானேய்மடநோக்கிதிறத்து எதிர்வந்த,
ஆனேழ்விடைசெற்ற அணிவரைத்தோளா.,
தேனே. திருவேங்கடமாமலைமேய,
கோனே. என்மனம் குடிகொண்டிருந்தாயே. 10.7
1045 சேயனணியன் எனசிந்தையுள்நின்ற
மாயன், மணிவாளொளி வெண்டரளங்கள்,
வேய்விண்டுதிர் வேங்கடமாமலைமேய,
ஆயனடியல்லது மற்றறையேனே. 10.8
1046 வந்தாயென்மனம்புகுந்தாய் மன்னிநின்றாய்,
நந்தாதகொழுஞ்சுடரே யெங்கள் நம்பீ.,
சிந்தாமணியே திருவேங்கடம்மேய
எந்தாய்., இனியானுன்னை யென்றும் விடேனே. 10.9
1047 வில்லார்மலி வேங்கடமாமலைமேய,
மல்லார்த்திரடோள் மணிவண்ணனம்மானை,
கல்லார்த்திரடோள் கலியன்சொன்னமாலை,
வல்லாரவர் வானவராகுவர்த்தாமே. 10.10
No comments:
Post a Comment