Wednesday, April 4, 2012

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் அறுபத்து மூவர் விழா

சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் அறுபத்து மூவர் திருவிழாவைக் காணவரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்காக ஆங்காங்காங்கே அன்னதானப் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தின் பங்குனிப்பெருவிழாவின் எட்டாம்நாளன்று பூம்பாவை உயிர்ப்பித்தல் நிகழ்வும், மாலையில் 63 நாயன்மார்கள் நகர்வலம் வரும் நிகழ்சியும் நடைபெறுகிறது. இதனைக்கான சென்னை முழுவதிலும் இருந்தும் புறநகர் பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வரத்தொடங்கியுள்ளனர்.

விழாவின் முக்கிய அம்சமான பூம்பாவை உயிர்ப்பித்தல் நிகழ்ச்சி காலையில் தெப்பக்குளத்தருகே நடைபெற்றது. கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அங்கம் பூம்பாவை, சிவனேசர், திருஞானசம்பந்தர் ஆகிய விக்ரகங்கள் எடுத்து செல்லப்பட்டனர். தெப்பக்குளத்தருகே பந்தல் அமைக்கப்பட்டிருந்த இடத்தில் வைக்கப்பட்டு வரலாற்று சிறப்பு மிக்க பூம்பாவையை உயிர்ப்பித்தல் நடைபெற்றது.

பங்குனிப்பெருவிழா சிறப்பு

திருமயிலையில் வாழ்ந்த சிவநேசர் என்னும் வணிகர் சிவன் மீது அதீத பக்தி கொண்டிருந்தார். இவரது மகள் பூம்பாவையை, ஞானசம்பந்தருக்கு மணம் முடிக்க முடிவு செய்தார். இந்நேரத்தில் மலர் பறிக்கச்சென்ற பூம்பாவை, பாம்பு தீண்டி உயிர் இழந்தாள். அவளை தகனம் செய்த சிவநேசர், அஸ்தியையும், எலும்பையும் ஒரு குடத்தில் போட்டு வைத்துவிட்டார்.சம்பந்தர் இங்கு வந்ததும் நடந்ததை அறிந்து, சாம்பல் வைத்திருக்கும் குடத்தை கொண்டு வரக் கூறினார்.

கோவிலின் வெளிப்புறத்தில் கொண்டு வந்து வைக்கப்பட்ட அந்த குடத்தின் முன் நின்று சம்பந்தர், "மட்டிட்ட புன்னையங் கானல் என்ற பதிகத்தைப் பாடினார். மொத்தம், 11 பாடல்கள் உள்ள இந்தப் பதிகத்தில் ஒவ்வொரு பாடலிலும், மயிலையில் ஓராண்டில் ஒவ்வொரு மாதத்திலும் நடக்கும் விழாக்களை சம்பந்தர் குறிப்பிட்டு, அந்த விழாக்களைப் பார்க்காமல் போய்விட்டாயே என பாடினார்.

பத்தாவது பாடல் முடியும்போது, குடத்தில் இருந்து பூம்பாவை முழுமையாக உருப்பெற்று, உயிருடன் எழுந்து வருகிறாள். மகிழ்ச்சி அடைந்த செட்டியார், அவளை மணந்து கொள்ளும்படி சம்பந்தரை வேண்ட, அவரோ தாம் அவளுக்கு மீண்டும் உயிர் தந்ததால், தந்தை முறையாவேன் எனக் கூறி மறுக்கிறார். அப்போது சம்பந்தருக்கு 16 வயது என்கிறது பெரியபுராணம். இந்த அற்புத செயலை நினைவு கூர்வதற்காகத் தான் இந்தப் பங்குனிப் பெருவிழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது.

சம்பந்தரின் இந்த அற்புதச் செயல், ஆண்டு தோறும் எட்டாம் நாள் அன்று காலையில், தெப்பக் குளக்கரையில் நடத்தி காட்டப்படும். அதன் தொடர்ச்சியாகவே, அன்று மாலை அறுபத்துமூவர் திருவிழா நடைபெறும். மற்ற தலங்களில், ஆண்டுதோறும் நடக்கும் விழாக்களில், வழக்கமாகவே அறுபத்து மூவர் எழுந்தருளல் உண்டு. ஆனால், மயிலையில் மட்டும் சம்பந்தரின் அற்புதச் செயலோடு இணைத்து இந்த விழா நடப்பதால் பிரபலமாகியிருக்கிறது.

களைகட்டும் திருவிழா

63 திருவிழாவிற்காக சப்பரங்கள் அலங்கரிக்கும் பணி தொடங்கியுள்ளது. நாயன்மார்களை சப்பரங்களில் கொண்டுவந்து பொருத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. கோவில்களில் பக்தர்கள் கூட்டம் குவியத்தொடங்கியுள்ளது.

திருவிழாவைக்காணவரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்காக மயிலாப்பூரில் பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே அன்னதானம், மோர்பந்தர், குளிர்பான பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருவிழாவை ஒட்டி மயிலாப்பூர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment