Wednesday, April 4, 2012

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் களைகட்டிய அறுபத்து மூவர் திருவிழா:

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற அறுபத்து மூவர் திருவிழாவிழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தல வரலாறு

‘கயிலையே மயிலை மயிலையே கயிலை’ என்னும் பெருமை படைத்த ஊர் மயிலாப்பூர். இந்த ஊர் பல்வேறு சிறப்புகளையும் பெருமைகளையும் கொண்டது. இங்கு எழுந்தருளியுள்ள கற்பாகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் ஆலயம் புராணகால சிறப்புக்களை கொண்டுள்ளது.

ஐந்தெழுத்து மந்திரத்தின் பெருமைகளையும், திருநீற்றின் மகிமைகளையும் கூறுமாறு சிவனிடம் வேண்டினால் பார்வதி. சிவபெருமான் விளக்கம் அளிக்கும் போது அங்கு மயில் நடனமாடியதைக் கண்டு பார்வதி ரசிக்கவே கோபம் கொண்ட சிவன் மயிலாக பூமியில் பிறப்பாய் என சாபமிட்டார். சாபம் நீங்க தொண்டை நாட்டிற்கு சென்று தவம் செய் என்றும் கூறினார்.

அவ்வாறு மயிலாய் மாறிய அன்னை, புன்னை மரத்தின் கீழ் சிவலிங்கம் அமைத்து வழிபட்டார். தவத்தை மெச்சிய சிவனும் விமோசனம் அளித்து கற்பகவல்லி என்ற பெயரை சூட்டினார். அன்னையின் வேண்டுகோளை ஏற்று மயிலாக வழிபட்ட தலத்தை மயிலை என்று பெயர் வழங்க அருளினார் என்கிறது வரலாறு.

மயிலாப்பூர் சிறப்பு

பார்வதி மயிலாக வடிவெடுத்து கபாலீசுவரரைப் பூஜித்த தலம். முருகப்பெருமான் மயிலை நாதனை வழிபட்டுச் சக்திவேல் பெற்ற தலம். பிரம்மா பூஜை செய்து தன் கர்வம் நீங்கி தனது படைக்கும் ஆற்றலைப் பெற்ற தலம். நான்மறைகள் பூஜித்ததால் வேதபுரி என்னும் பெயர் பெற்ற திருத்தலம்.

சுக்கிரன் பூஜித்ததால் சுக்கிரபுரி என்னும் பெயரும் பெற்ற திருத்தலம். இராம பிரான் நேசித்துத் தங்கியிருந்து பூசித்துத் திருவிழா நடத்திய தலம். திருஞானசம்பந்தப் பெருமான் எலும்பைப் பூம்பாவையாக்கிய புகழ்தலம். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகிய வாயிலார் தோன்றிய தலம்.

பன்னிரண்டு ஆழ்வார்களில் மூன்றாமவராகிய பேயாழ்வார் பிறப்பெடுத்த பெருமைத் தலம். ஆளுடைய பிள்ளை - ஆளுடைய அடிகள் தேவாரம் பெற்ற திருத்தலம். சீர்த்திமிகு சிங்காரவேலன் கீர்த்திமிகு திருப்புகழைப் பெற்ற தலம். வான்புகழ் கொண்ட வள்ளுவர் புகழோடு தோன்றிய தொன்மைத்தலம்

கபாலீச்சரம் பெயர் ஏன் ?

சிவபெருமானைப் போல தாமும் ஐந்து சிரம் உடையவன் என்று பிரம்மதேவன் கர்வப்படவே இதனைக் கண்டு பிரம்மனின் நடுவில் உள்ள தலையைக் கிள்ளி அதன் கபாலத்தை ஏந்தினார். இதனாலேயே கபாலம் ஏந்திய ஈசுவரன் கபாலீசுவரன் என அழைக்கப்பட்டதாகவும் அதனால் இது கபாலீசுவரம் எனப் பெயர் பெற்றதாகவும் ஒரு வரலாறு கூறுகிறது.

கேட்ட வரம் கிடைக்கும்

தேவலோகத்து கற்பக மரம், கேட்டதை கொடுப்பதைப்போல, இத்தலத்து அம்பிகையும் கேட்கும் வரங்களை தருவதால் "கற்பகாம்பிகை' எனப்பட்டாள். நோயால் பாதக்கப்பட்டவர்கள் இத்தலத்தின் முக்கிய திருவிழாவான அறுபத்து மூவர் திருவிழாவின் போது மண்பானையில் சர்க்கரை வைத்து விநியோகம் செய்கிறார்கள். தவிர அம்பாளுக்கு புடவை சாத்துதல், சுவாமிக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் அபிசேகம் ஆகியவை செய்யலாம் இதனால் தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.

பங்குனிப்பெருவிழா சிறப்பு

இங்கு ஆண்டு தோறும் பத்துநாட்கள் நடைபெறும் பங்குனிப் பெருவிழா சிறப்பு வாய்ந்தது. பங்குனிப் பெருவிழாவின் எட்டாம் நாளான புதன்கிழமையன்று காலையில் வரலாற்று சிறப்பு மிக்க பூம்பாவை உயிர்ப்பித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மாலை 3 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிச்சப்பரத்தில் ஏறி கபாலீஸ்வரர் 63 நாயன்மார்களுக்கு காட்சி அளித்தார். அப்போது கூடியிருந்த பக்தர்கள் ‘ஓம் நமச்சிவாய’ என முழக்கமிட்டனர்.

விநாயர் முன்னே சப்பரத்தில் செல்ல, வெள்ளிச் சப்பரத்தில் சிவபெருமானும், அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் 63 நாயன்மார்களும் நகர்வலம் வந்தனர். அதனைத் தொடர்ந்து காவல் தெய்வமான கோலவிழியம்மனும் நகர்வலம் வந்ததை லட்சக்கணக்கானோர் கண்டு தரிசனம் செய்தனர். உற்சவ மூர்த்திகள் அனைவரும் இரவு மீண்டும் கோயிலை அடைவார்கள்.

அன்னதானப் பந்தல்

திருவிழாவைக்காண லட்சக்கணக்கான பக்தர்கள் மயிலாப்பூரில் குவிந்துள்ளதால் பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே அன்னதானம், மோர்பந்தர், குளிர்பான பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருவிழாவைஒட்டி மயிலாப்பூர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment