தமிழர்கள் கொண்டாடும் தமிழ்புத்தாண்டு திருநாள் வெள்ளிக்கிழமை பிறக்கிறது. கர வருடம் நிறைவடைந்து புதிய தமிழ் வருடமான நந்தன வருடம் பிறப்பதை உலகமெங்கும் உள்ள தமிழர்கள் தங்கள் வீடுகளை அலங்கரித்து சித்திரை அன்னையை வரவேற்கின்றனர்.
சித்திரை மாதத்தை வசந்த ராகம் என்றும் கூறுவர். மங்களம் பொங்கும் இந்த மாதத்தினை சைத்ரா என்றும்; சைத்ர விஷு என்றும் போற்றுகிறார்கள்.
சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளே சித்திரை முதல் நாள் என்று கூறப்படுகிறது. சித்திரை மாத, சித்திரை நட்சத்திரத்தில் சிவபெருமான் தங்கப் பலகையில் சித்திரம் ஒன்றினை வரைய, அதிலிருந்து சித்திரகுப்தன் தோன்றினாராம்.
சித்திரை சுக்கில பட்ச அஷ்டமியில் அம்பிகை அவதரித்ததாக தேவி பாகவதம் கூறுகிறது. சித்திரையில்தான் அம்மன் கோவில்களில் பால்குடங்கள் எடுப்பது, திருவிளக்கு பூஜை செய்வது போன்ற இறை வழிபாடுகள் நடக்கின்றன.
அட்சய திருதியை
சித்திரை மாதத்தில் வளர்பிறை காலத்தில் மூன்றாவது பிறை தோன்றும் நாளே அட்சய திருதியை என்று அழைக்கப்படுகிறது. இந்நாளில் தங்கம் வாங்கினால் இல்லத்தில் செல்வம் குவியும் என்ற ஐதீகமும் உண்டு. சித்திரையில் வரும் அட்சய திரிதியை அன்று வசதி படைத்தவர்கள் தங்கம் வாங்கு வார்கள். அன்று ஏதாவது ஒரு பொருளை வாங்கினாலும் (மஞ்சள், உப்பு) குடும்பம் செல்வச் செழிப்புடன் திகழும் என்பது நம்பிக்கை.
லட்சுமி பூஜை
சித்திரை மாத சுக்ல பட்ச பஞ்சமியில் லட்சுமி தேவி வைகுண்ட லோகத்திலிருந்து பூமிக்கு வந்ததாகப் புராணம் சொல்வதால் அன்று லட்சுமி பூஜை செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும்.
பஞ்சாங்கம்
திருமாலின் நரசிம்ஹ அவதாரம், பரசுராமன் அவதாரம் நிகழ்ந்ததும் இந்த மாதத்தில்தான். ஆதிசங்கரர், ஸ்ரீராமானுஜர் அவதரித்ததும் இந்நாளில் தான். சித்திரை முதல் தேதியன்று ஸ்ரீரங்கத்தில் பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
சொக்கநாதர்- மீனாட்சியைத் திருக் கல்யாணம் செய்து கொள்ளும் விழா மதுரையில் சித்திரை மாதம் நடைபெறுகிறது.
சித்ரா பவுர்ணமி
சித்ரா பௌர்ணமியன்று தான் தேவேந்திரன் சொக்கநாதரை வழிபட்டுப் பேறுகள் பெற்றதாக புராணத் தகவல் உண்டு. கள்ளழகர் விழாவும் மதுரையில் சித்ரா பௌர்ணமியன்று சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. சித்ரா பௌர்ணமியன்றுதான் விழுப்புரம் அருகிலுள்ள கூத்தாண்டவர் கோவிலில் அரவாணிகளுக்கான விழா நடைபெறுகிறது.
சித்ரா பௌர்ணமி அன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செய்வது விசேஷம். காரணம், அங்கே ஈசனை வணங்க வரும் தேவர்களின் அருளாசியும் அன்றைய தினத்தில் கிடைக்கும் என்பது ஐதீகம்.
No comments:
Post a Comment