Monday, April 23, 2012
உலக புத்தக தினம்: வாசிப்போம், நேசிப்போம்
உலக புத்தக தினம் தமிழ்நாட்டில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஐரோப்பாவில் வாழ்ந்த தலை சிறந்த இலக்கியவாதியும், நாடக மேதையாகக் கருதப்படுகிறவருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்ததும் இறந்ததும் இந்நாளில் தான் என்பதால் இந்த நாளை உலக, புத்தக தினம் கொண்டாட தேர்ந்தெடுத்துள்ளனர்.
உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு கலாச்சாரங்களைப் பற்றி விழிப்புணர்வு பெறுவதற்கு புத்தகம் ஒரு சிறந்த கருவியாக விளங்குகிறது. இதனால், ஷேக்ஸ்பியர் உள்ளிட்ட புகழ் பெற்ற எழுத்தாளர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளை போற்றும் வகையில் ஏப்ரல் 23-ந் தேதியை உலக புத்தக தினமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. அனைவருக்கும் வாசிக்கும் உரிமை, அனைத்து மக்கள் வாழ்விடங்களிலும் நூலக உரிமை, உலகில் உள்ள அனைத்து அறிவுச் செல்வங்களையும் அவரவர் தாய்மொழியில் பெறுதல், தத்தமது தாய் மொழியில் இலக்கியச் செல்வங்களைப் பாதுகாத்து ஆவணப்படுத்துதல், புத்தகங்களுக்கும், வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதல் என்பன உள்ளிட்ட 10 கட்டளைகளை அனைத்து நாடுகளிலும் நிறைவேற்றுவதன் மூலம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை விரிவாக்க முடியும். மேற்கூறிய 10 கட்டளைகளையும் நிறைவேற்ற உறுதி ஏற்கும் வகையில் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
தமுஎச கொண்டாட்டம்
பாரதி புத்தகாலயம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இம்மூன்று அமைப்புகளும் இணைந்து இந்த ஆண்டு உலகப் புத்தக தினத்தை சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். ஏப்ரல் 21 சனிக்கிழமை மாலை, சென்னைக் கடற்கரை காந்தி சிலை அருகே கவிஞர்கள் பலரும் பங்கேற்கும் உலகப் புத்தகதின சிறப்புக் கவியரங்கம் நடைபெற்றது. இந்த கவியரங்கத்தில் கவிஞர் மு. மேக்தா, பாரிகபிலன், விஜயலட்சுமி உள்ளிட்ட பிரசித்தி பெற்ற 60க்கும் மேற்பட்ட கவிஞர்கள் பங்கேற்று கவிதை வாசித்தனர்.
ஏப்ரல் 22 ஞாயிறு காலை 7 மணிக்கு வாசிப்பின் அவசியத்தை உணர்த்தும் விதமாக எழுத்தாளர்கள், ஓவியர்கள், கலைஞர்கள் திரளாகக் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக ‘உலகைக் குலுக்கிய புத்தகங்கள்’ என்ற தலைப்பில் தெருமுனை நாடகம், ‘புத்தகத் தேர்’ இழுப்பு, மாவட்ட வாரியாக புத்தகக் கண்காட்சிகள் என மே 1 ம் தேதி வரை சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment