Saturday, April 14, 2012

ஆத்திசூடி (அவ்வையார் நூல்கள்)

பாட்டின் முதல் தொடரால் இந்நூல் இப்பெயரைப் பெற்றது. இதில் 109 ஒருவரிப்பாடல்கள் உள்ளன. உயர்ந்த ஒழுக்க விதைகள் மனத்தின் ஊன்றுவதற்காக அவ்வையாரல் எழுதப்பெற்றன.


கடவுள் வாழ்த்து


ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தி தொழுவோம் யாமே.


நூல்


உயிர் வருக்கம்


1. அறஞ் செய விரும்பு
2. ஆறுவது சினம்
3. இயல்வது கரவேல்
4. ஈவது விலக்கேல்
5. உடையது விளம்பேல்
6. ஊக்கமது கைவிடேல்
7. எண் எழுத்து இகழேல்
8. ஏற்பது இகழ்ச்சி
9. ஐயம் இட்டு உண்
10. ஒப்புரவு ஒழுகு
11. ஓதுவது ஒழியேல்
12. ஔவியம் பேசேல்
13. அஃகஞ் சுருக்கேல்


உயிர்மெய் வருக்கம்


14. கண்டு ஒன்று சொல்லேல்
15. ஙப் போல்வளை
16. சனி நீராடு
17. ஞயம் பட உரை
18. இடம் பட வீடு எடேல்
19. இணககம்அறிந்து இணங்கு
20. தந்தை தாய்ப் பேண்
21. நன்றி மறவேல்
22. பருவத்தே பயிர் செய்
23. மண் பறித்து உண்ணேல்
24. இயல்பு அலாதன செயேல்
25. அரவம்ஆடேல்
26. இலவம் பஞ்சில் துயில்
27. வஞ்சகம் பேசேல்
28. அழகு அலாதன செயேல்
29. இளமையில் கல்
30. அரனை மறவேல்
31. அனந்தல் ஆடேல்


ககர வருக்கம்


32. கடிவது மற
33. காப்பது விரதம்
34. கிழமைப் பட வாழ்
35. கீழ்மை அகற்று
36. குணமது கைவிடேல்
37. கூடிப்பிரியேல்
38. கெடுப்பது ஒழி
39. கேள்வி முயல்
40. கைவினை கரவேல்
41. கொள்ளை விரும்பேல்
42. கோதாட்டு ஒழி
43. கௌவை அகற்று


சகர வருக்கம்


44. சக்கர நெறி நில்
45. சான்றோர் இனத்திரு
46. சித்திரம் பேசேல்
47. சீர்மை மறவேல்
48. சுளிக்கச் சொல்லேல்
49. சூது விரும்பேல்
50. செய்வன திருந்தச் செய்
51. சேரிடம் அறிந்து சேர்
52. சை எனத் திரியேல்
53. சொல் சோர்வு படேல்
54. சோம்பித் திரியேல்


தகர வருக்கம்


55. தக்கோன் எனத் திரி
56. தானமது விரும்பு
57. திருமாலுக்கு அடிமை செய்
58. தீவினை அகற்று
59. துன்பத்திற்கு இடம் கொடேல்
60. தூக்கி வினை செய்
61. தெய்வம் இகழேல்
62. தேசத்தோடு ஒத்து வாழ்
63. தையல் சொல் கேளேல்
64. தொண்மை மறவேல்
65. தோற்பன தொடரேல்


நகர வருக்கம்


66. நன்மை கடைப்பிடி
67. நாடு ஒப்பன செய்
68. நிலையில் பிரியேல்
69. நீர் விளையாடேல்
70. நுண்மை நுகரேல்
71. நூல் பல கல்
72. நெல் பயிர் விளை
73. நேர்பட ஒழுகு
74. நைவினை நணுகேல்
75. நொய்ய உரையேல்
76. நோய்க்கு இடம் கொடேல்


பகர வருக்கம்


77. பழிப்பன பகரேல்
78. பாம்பொடு பழகேல்
79. பிழைபடச் சொல்லேல்
80. பீடு பெற நில்
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்
82. பூமி திருத்தி உண்
83. பெரியாரைத் துணைக் கொள்
84. பேதமை அகற்று
85. பையலோடு இணங்கேல்
86. பொருள்தனைப் போற்றி வாழ்
87. போர்த் தொழில் புரியேல்


மகர வருக்கம்


88. மனம் தடுமாறேல்
89. மாற்றானுக்கு இடம் கொடேல்
90. மிகைபடச் சொல்லேல்
91. மீதூண் விரும்பேல்
92. முனைமுகத்து நில்லேல்
93 மூர்க்கரோடு இணங்கேல்
94. மெல்லி நல்லாள் தோள் சேர்
95. மேன் மக்கள் சொல் கேள்
96. மை விழியார் மனை அகல்
97. மொழிவது அற மொழி
98. மோகத்தை முனி


வகர வருக்கம்


99. வல்லமை பேசேல்
100. வாது முற்கூறேல்
101. வித்தை விரும்பு
102. வீடு பெற நில்
103. உத்தமனாய் இரு
104. ஊருடன் கூடி வாழ்
105. வெட்டெனப் பேசேல்
106. வேண்டி வினை செயேல்
107. வைகறைத் துயில் எழு
108. ஒன்னாரைத் தேறேல்
109. ஓரம் சொல்லேல்


ஆத்தி சூடி முற்றிற்று.

No comments:

Post a Comment