திருவரங்கத்து அமுதனார் அருளிச்செய்த இராமாநுச நூற்றந்தாதி
ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
இராமானுச நூற்றந்தாதித் தனியன்கள்
வேதப்பிரான்பட்டர் அருளிச்செய்தவை
நேரிசை வெண்பா
முன்னை வினையகல மூங்கிற் குடியமுதன்
பொன்னங் கழற்கமலப் போதிரண்டும் என்னுடைய
சென்னிக் கணியாகச் சேர்த்தினேன் தென்புலத்தார்க்
கென்னுக் கடவுடையேன் யான்?
கட்டளைக் கலித்துறை
நயந்தரு பேரின்ப மெல்லாம் பழுதென்று நண்ணினர்பால்
சயந்தரு கீர்த்தி இராமா னுசமுனி தாளிணைமேல்
உயர்ந்த குணத்துத் திருவரங் கத்தமுது μங்கும்அன்பால்
இயம்பும் கலித்துறை அந்தாதி μத இசைநெஞ்சமே!
சோமாசியாண்டான் அருளியதென்பர்
சொல்லின் தொகைகொண் டுனதடிப் போதுக்குத் தொண்டுசெய்யும்
நல்லன்பர் ஏத்துமுன் நாமமெல் லாமென்றன் நாவினுள்ளே
அல்லும் பகலும் அமரும் படிநல்கு அறுசமயம்
வெல்லும் பரம இராமா னுச! இதென் விண்ணப்பமே.
வேதப்பிரான்பட்டர் அருளியதென்பர்
இனியென் குறைநமக் கெம்பெரு மானார் திருநாமத்தால்
முனிதந்த நூற்றெட்டுச் சாவித் திரியென்னும் நுண்பொருளை
கனிதந்த செஞ்சொல் கலித்துறை யந்தாதி பாடித்தந்தான்
புனிதன் திருவரங் கத்தமு தாகிய புண்ணியனே.
திருவரங்கத்து அமுதனார் அருளிச்செய்த இராமாநுச நூற்றந்தாதி
கட்டளைக் கலித்துறை
3893 பூமன்னு மாது பொருந்திய மார்பன் புகழ்மலிந்த
பாமன்னு மாறன் அடிபணிந் துய்ந்தவன் பல்கலையோர்
தாம்மன்ன வந்த இராம னுசன்சர ணாரவிந்தம்
நாம்மன்னி வாழநெஞ்சே! சொல்லு வோமவன் நாமங்களே. 1
3894 கள்ளார் பொழில்தென் னரங்கன் கமலப் பதங்கள்நெஞ்சிற்
கொள்ளா மனிசரை நீங்கிக் குறையல் பிரானடிக்கீழ்
விள்ளாத அன்பன் இராமா னுசன்மிக்க சீலமல்லால்
உள்ளாதென் னெஞ்சு ஒன் றறியேன் எனக்குற்ற பேரியல்வே. 2
3895 பேரியல்நெஞ்சே! அடிபணிந் தேனுன்னைப் பேய்ப்பிறவிப்
பூரிய ரோடுள்ள சுற்றம் புலத்திப் பொருவருஞ்சீர்
ஆரியன் செம்மை இராமா னுசமுனிக் கன்புசெய்யும்
சீரிய பேறுடை யார் அடிக் கீழென்னைச் சேர்த்ததற்கே. 3
3896 என்னைப் புவியில் ஒருபொரு ளாக்கி மருள்சுரந்த
முன்னைப் பழவினை வேரறுத்து ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமா னுசன்பரன் பாதமுமென்
சென்னித் தரிக்கவைத் தான்எனக் கேதும் சிதைவில்லையே. 4
3897 எனக்குற்ற செல்வம் இராமா னுசனென்று இசையகில்லா
மனக்குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் அவன் மன்னியசீர்
தனக்குற்ற அன்பர் அவந்திரு நாமங்கள் சாற்றுமென்பா
இனக்குற்றம் காணகில் லார், பத்தி ஏய்ந்த இயல்விதென்றே. 5
3898 இயலும் பொருளும் இசையத் தொடுத்து, ஈன் கவிகளன்பால்
மயல்கொண்டு வாழ்த்தும் இராமா னுசனை,மதியின்மையால்
பயிலும் கவிகளில் பத்தியில் லாதவென் பாவிநெஞ்சால்
முயல்கின் றனன் அவன் றன்பெருங் கீர்த்தி மொழிந்திடவே. 6
3899 மொழியைக் கடக்கும் பெரும்புக ழான், வஞ்ச முக்குறும்பாம்
குழியைக் கடக்கும்நம் கூரத்தாழ் வான்சரண் கூடியபின்
பழியைக் கடத்தும் இராமா னுசன்புகழ் பாடியல்லா
வழியைக் கடத்தல் எனக்கினி யாதும் வருத்தமன்றே. 7
3900 வருத்தும் புறவிருள் மாற்ற, எம் பொய்கைப்பி ரான்மறையின்
குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றத்
திரித்தன் றெரித்த திருவிளக் கைத்தன் திருவுள்ளத்தே
இருத்தும் பரமன் இராமா னுசனெம் இறையவனே. 8
3901 இறைவனைக் காணும் இதயத் திருள்கெட ஞானமென்னும்
நிறைவிளக் கேற்றிய பூதத் திருவடி தாள்கள்,நெஞ்சத்
துறையவைத் தாளும் இராமா னுசன்புகழ் μதும்நல்லோர்
மறையினைக் காத்த இந்த மண்ணகத் தேமன்ன வைப்பவரே. 9
3902 மன்னிய பேரிருள் மாண்டபின் கோவலுள் மாமலராள்
தன்னொடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த்தலைவன்
பொன்னடி போற்றும் இராமா னுசற்கன்பு பூண்டவர்தாள்
சென்னியிற் சூடும் திருவுடை யாரென்றும் சீரியரே. 10
3903 சீரிய நான்மறைச் செம்பொருள் செந்தமி ழாலளித்த
பாரிய லும்புகழ்ப் பாண்பெரு மாள்,சர ணாம்பதுமத்
தாரியல் சென்னி இராமா னுசன்றனைச் சார்ந்தவர்தம்
காரிய வண்மை, என் னால்சொல்லொ ணாதிக் கடலிடத்தே. 11
3904 இடங்கொண்ட கீர்த்தி மழிசைக் கிறைவன் இணையடிப்போ
தடங்கும் இதயத் திராமா னுசன்,அம்பொற் பாதமென்றும்
கடங்கொண் டிறைஞ்சும் திருமுனி வர்க்கன்றிக் காதல்செய்யாத்
திடங்கொண்ட ஞானியர்க் கேஅடி யேனன்பு செய்வதுவே. 12
3905 செய்யும் பசுந்துள பத்தொழில் மாலையும் செந்தமிழில்
பெய்யும் மறைத்தமிழ் மாலையும் பேராத சீரரங்கத்
தையன் கழற்கணி யம்பரன் தாளன்றி ஆதரியா
மெய்யன் இராமா னுசன்சர ணேகதி வேறெனக்கே. 13
3906 கதிக்குப் பதறிவெங் கானமும் கல்லும் கடலுமெல்லாம்
கொதிக்கத் தவம்செய்யும் கொள்கையற் றேன்,கொல்லி காவலன் சொல்
பதிக்கும் கலைக்கவி பாடும் பெரியவர் பாதங்களே
துதிக்கும் பரமன் இராமா னுசனென்னைச் சோர்விலனே. 14
3907 சோராத காதல் பெருஞ்சுழிப் பால், சொல்லை மாலையொன்றும்
பாரா தவனைப்பல் லாண்டென்று காப்பிடும் பான்மையன்தாள்
பேராத வுள்ளத் திராமா னுசன்றன் பிறங்கியசீர்
சாரா மனிசரைச் சேரேன் எனக்கென்ன தாழ்வினியே? 15
3908 தாழ்வொன்றில் லாமறை தாழ்ந்து தலமுழு தும்கலியே
ஆள்கின்ற நாள்வந் தளித்தவன் காண்மின் அரங்கர்மெளலி
சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல்லருளால்
வாழ்கின்ற வள்ளல் இராமா னுசனென்னும் மாமுனியே. 16
3909 முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடிலும்
கனியார் மனம்கண்ண மங்கைநின் றானைக் கலைபரவும்
தனியா னையைத்தண் டமிழ்செய்த நீலன் றனக்குலகில்
இனியானை எங்கள் இராமா னுசனைவந் தெய்தினரே. 17
3910 எய்தற் கரிய மறைகளை ஆயிரம் இன்தமிழால்
செய்தற் குலதில் வரும்சட கோபனைச் சிந்தையுள்ளே
பெய்தற் கிசையும் பெரியவர் சீரை உயிர்களெல்லாம்
உய்தற் குதவும் இராமா னுசனெம் உறுதுணையே. 18
3911 உறுபெருஞ் செல்வமும் தந்தையும் தாயும் உயர்குருவும்
வெறிதரு பூமகள் நாதனும் மாறன் விளங்கியசீர்
நெறிதரும் செந்தமிழ் ஆரண மெயென்றிந் நீணிலத்தோர்
அறிதர நின்ற,இராமா னுசனெனக் காரமுதே. 19
3912 ஆரப் பொழில்தென் குருகைப் பிரான்,அமு தத்திருவாய்
ஈரத் தமிழின் இசையுணர்ந் தோர்கட்கு இனியவர்தம்
சீரைப் பயின்றுய்யும் சீலங்கொள் நாத முனியைநெஞ்சால்
வாரிப் பருகும் இராமா னுசனென்றன் மாநிதியே. 20
3913 நிதியைப் பொழியும் முகில்என்று நீசர்தம் வாசல்பற்றித்
துதிகற் றுலகில் துவள்கின்றி லேன், இனித் தூய்நெறிசேர்
எதிகட் கிறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம்
கதிபெற் றுடைய இராமா னுசனென்னைக் காத்தனனே. 21
3914 கார்த்திகை யானும் கரிமுகத் தானும் கனலும்முக்கண்
மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதுகிட்டு மூவுலகும்
பூத்தவ னே. என்று போற்றிட வாணன் பிழைபொறுத்த
தீர்த்தனை யேத்தும் இராமா னுசனென்றன் சேமவைப்பே. 22
3915 வைப்பாய வான்பொருள் என்று,நல் லன்பர் மனத்தகத்தே
எப்போதும் வைக்கும் இராமா னுசனை இருநிலத்தில்
ஒப்பார் இலாத உறுவினை யேன்வஞ்ச நெஞ்சில்வைத்து
முப்போதும் வாழ்த்துவன் என்னாம் இதுஅவன் மொய்புகழ்க்கே. 23
3916 மொய்த்தவெந் தீவினை யால்பல் லுடல்தொறும் மூத்து,அதனால்
எய்த்தொழிந் தேன்முன நாள்களெல் லாம்,இன்று கண்டுயர்ந்தேன்
பொய்த்தவம் போற்றும் புலைச்சம யங்கள்நிலத்தவியக்
கைத்தமெய்ஞ் ஞானத்து இராமா னுசனென்னும் கார்தன்னையே. 24
3917 காரேய் கருணை இராமா னுச,இக் கடலிடத்தில்
ஆரே யறிபவர் நின்னரு ளின்தன்மை அல்லலுக்கு
நேரே யுறைவிடம் நான்வந்து நீயென்னை உய்த்தபினுன்
சீரே யுயிர்க்குயி ராய், அடி யேற்கின்று தித்திக்குமே. 25
3918 திக்குற்ற கீர்த்தி இராமா னுசனை, என் செய்வினையாம்
மெய்க்குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை மேவும்நல்லோர்
எக்குற்ற வாளர் எதுபிறப் பேதியல் வாகநின்றோர்
அக்குற்றம் அப்பிறப்பு அவ்வியல் வேநம்மை யாட்கொள்ளுமே. 26
3919 கொள்ளக் குறைவற் றிலங்கிக் கொழுந்துவிட் டோ ங்கியவுன்
வள்ளல் தனத்தினால் வல்வினை யேன்மனம் நீபுகுந்தாய்
வெள்ளைச் சுடர்விடும் உன்பெரு மேன்மைக் கிழுக்கிதென்று
தள்ளுற் றிரங்கும் இராமா னுச என் தனிநெஞ்சமே. 27
3920 நெஞ்சில் கறைகொண்ட கஞ்சனைக் காய்ந்த நிமலன் நங்கள்
பஞ்சித் திருவடிப் பின்னைதன் காதலன் பாதம்நண்ணா
வஞ்சர்க் கரிய இராமா னுசன்புகழ் அன்றியென்வாய்
கொஞ்சிப் பரவகில் லாது என்ன வாழ்வின்று கூடியதே. 28
3921 கூட்டும் விதியென்று கூடுங்கொ லோ,தென் குருகைப்பிரான்
பாட்டென்னும் வேதப் பசுந்தமிழ் தன்னைத்,தன் பத்தியென்னும்
வீட்டின்கண் வைத்த இராமா னுசன்புகழ் மெய்யுணர்ந்தோர்
ஈட்டங்கள் தன்னை, என் நாட்டங்கள் கண்டினப மெய்திடவே? 29
3922 இன்பந் தருபெரு வீடுவந் தெய்திலென்? எண்ணிறந்த
துன்பந் தருநிர யம்பல சூழிலென்? தொல்லுலகில்
மன்பல் லுயிர்கட் கிறையவன் மாயன் எனமொழிந்த
அன்பன் அனகன் இராமா னுசனென்னை ஆண்டனனே. 30
3923 ஆண்டிகள் நாள்திங்க ளாய்நிகழ் காலமெல் லாம்மனமே.
ஈண்டுபல் யோனிகள் தோறுழல் வோம் இன்றோ ரெண்ணின்றியே
காண்டகு தோளண்ணல் தென்னத்தி யூரர் கழலிணைக்கீழ்ப்
பூண்டவன் பாளன் இராமா னுசனைப் பொருந்தினமே. 31
3924 பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும்,நல்ல
திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறுகலியால்
வருந்திய ஞாலத்தை வண்மையி னால்வந் தெடுத்தளித்த
அருந்தவன் எங்கள் இராமா னுசனை அடைபவர்க்கே. 32
3925 அடையார் கமலத் தலர்மகள் கேள்வன் கை யாழியென்னும்
படையொடு நாந்தக மும்படர் தண்டும்,ஒண் சார்ங்கவில்லும்
புடையார் புரிசங் கமுமிந்தப் பூதலம் காப்பதற்கென்று
இடையே இராமா னுசமுனி யாயின இந்நிலத்தே. 33
3926 நிலத்தைச் செறுத்துண்ணும் நீசக் கலியை, நினைப்பரிய
பலத்தைச் செறுத்தும் பிறங்கிய தில்லை,என் பெய்வினைதென்
புலத்தில் பொறித்தவப் புத்தகச் சும்மை பொறுக்கியபின்
நலத்தைப் பொறுத்தது இராமா னுசன்றன் நயப்புகழே. 34
3927 நயவேன் ஒருதெய்வம் நானிலத் தேசில மானிடத்தைப்
புயலே எனக்கவி போற்றிசெய் யேன், பொன் னரங்கமென்னில்
மயலே பெருகும் இராம னுசன்மன்னு மாமலர்த்தாள்
அயரேன் அருவினை என்னையெவ் வாறின் றடர்ப்பதுவே? 35
3928 அடல்கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் அன் றாரணச்சொல்
கடல்கொண்ட ஒண்பொருள் கண்டளிப் பப்,பின்னும் காசினியோர்
இடரின்கண் வீழ்ந்திடத் தானுமவ் வொண்பொருள் கொண்டவர்பின்
படரும் குணன், எம் இராமா னுசன்றன் படியிதுவே. 36
3929 படிகொண்ட கீர்த்தி இராமா யணமென்னும் பத்திவெள்ளம்
குடிகொண்ட கோயில் இராமா னுசன்குணங் கூறும்,அன்பர்
கடிகொண்ட மாமாலர்த் தாள்கலந் துள்ளங் கனியும்நல்லோர்
அடிகண்டு கொண்டுகந்து என்னையும் ஆளவர்க் காக்கினரே. 37
3930 ஆக்கி யடிமை நிலைப்பித் தனையென்னை இன்று,அவமே
போக்கிப் புறத்திட்ட தென்பொரு ளா?முன்பு புண்ணியர்தம்
வாக்கிற் பிரியா இராமா னுச நின் அருளின்வண்ணம்
நோக்கில் தெரிவிரி தால், உரை யாயிந்த நுண்பொருளே. 38
3931 பொருளும் புதல்வரும் பூமியும் பூங்குழ லாருமென்றே
மருள்கொண் டிளைக்கும் நமக்கு நெஞ் சே.மற்று ளார்த்தரமோ?
இருள்கோண்ட வெந்துயர் மாற்றித்தன் ஈறில் பெரும்புகழே
தெருளும் தெருள்தந்து இராமா னுசன்fசெய்யும் சேமங்களே. 39
3932 சேமநல் வீடும் பொருளும் தருமமும் சீரியநற்
காமமும் என்றிவை நான்கென்பர், நான்கினும் கண்ணனுக்கே
ஆமது காமம் அறம்பொருள் வீடுதற் கென்றுரைத்தான்
வாமனன் சீலன், இராமா னுசனிந்த மண்மிசையே. 40
3933 மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில் லா, உல கோர்களெல்லாம்
அண்ணல் இராமா னுசன்வந்து தோன்றிய அப்பொழுதே
நண்ணரு ஞானம் தலைக்கொண்டு, நாரணற் காயினரே. 41
3934 ஆயிழை யார்கொங்கை தங்கும்அக் காதல் அளற்றழுந்தி
மாயுமென் ஆவியை வந்தெடுத் தானின்று மாமலராள்
நாயகன் எல்லா வுயிர்கட்கும் நாதன் அரங்கனென்னும்
தூயவன் தீதில் இராமா னுசன்தொல் லருள்சுரந்தே. 42
3935 சுரக்கும் திருவும் உணர்வும் சொலப்புகில் வாயமுதம்
பரக்கும் இருவினை பற்றற வோடும் படியிலுள்ளீர்
உரைக்கின் றனனுமக் கியானறஞ் சீறும் உறுகலியைத்
துரக்கும் பெருமை இராமா னுசனென்று சொல்லுமினே. 43
3936 சொல்லார் தமிழொரு மூன்றும் சுருதிகள் நான்குமெல்லை
இல்லா அறநெறி யாவும் தெரிந்தவன் எண்ணருஞ்சீர்
நல்லார் பரவும் இராமா னுசன்திரு நாமம் நம்பிக்
கல்லார் அகலிடத் தோர், எது பேறென்று காமிப்பரே. 44
3937 பேறொன்று மற்றில்லை நின்சரண் அன்றி,அப் பேறளித்தற்
காறொன்று மில்லைமற் றச்சரண் அன்றி,என் றிப்பொருளைத்
தேறும் அவர்க்கும் எனக்கும் உனைத்தந்த செம்மைசொல்லால்
கூறும் பரமன்று இராமா னுசமெய்ம்மை கூறிடிலே. 45
3938 கூறும் சமயங்கள் ஆறும் குலையக் குவலயத்தே
மாறன் பணித்த மரையுணர்ந் தோனை மதியிலியேன்
தேறும் படியென் மனம்புதுந் தானைத் திசையனைத்தும்
ஏறும் குணனை இராமா னுசனை இறைஞ்சினமே. 46
3939 இறைஞ்சப் படும்பரன் ஈசன் அரங்கனென்று இவ்வுலகத்
தறம்செப்பும் அண்ணல் இராமா னுசன்,என் அருவினையின்
திறம்செற் றிரவும் பகலும் விடாதென்றன் சிந்தையுள்ளே
நிறைந்தொப் பறவிருந் தான், எனக் காரும் நிகரில்லையே. 47
3940 நிகரின்றி நின்றவென் நீசதைக்கு நின்னரு ளின்கணன்றிப்
புகலொன்று மில்லை அருட்குமஃ தேபுகல் புன்மையிலோர்
பகரும் பெருமை இராமா னுச இனி நாம்பழுதே
அகலும் பொருளென், பயனிரு வோமுக்கு மானபின்னே? 48
3941 ஆனது செம்மை அறநெறி பொய்ம்மை அறுசமயம்
போனது பொன்றி யிறந்தது வெங்கலி பூங்கமலத்
தேனதி பாய்வயல் தென்னரங் கன்கழல் சென்னிவைத்துத்
தானதில் மன்னும் இராமா னுசனித் தலத்துதித்தே. 49
3942 உதிப்பன வுத்தமர் சிந்தையுள் ஒன்னலர் நெஞ்சமஞ்சிக்
கொதித்திட மாறி நடப்பன கொள்ளைவன் குற்றமெல்லாம்
பதித்தவென் புன்கவிப் பாவினம் பூண்டன பாவுதொல்சீர்
எதித்தலை நாதன் இராமா னுசன்றன் இணையடியே. 50
3943 அடியைத் தொடர்ந்தெழும் ஐவர்கட் காய்அன்று பாரதப்போர்
முடியப் பரிநெடுந் தேர்விடுங் கோனை முழுதுணர்ந்த
அடியர்க் கமுதம் இராமா னுசனென்னை ஆளவந்திப்
படியிற் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே. 51
3944 பார்த்தான் அறுசம யங்கள் பதைப்ப,இப் பார்முழுதும்
போர்த்தான் புகழ்கொண்டு புன்மையி னேனிடைத் தான்புகுந்து
தீர்த்தான் இருவினை தீர்த்தரங் கன்செய்ய தாளிணையோ
டார்த்தான் இவையெம் இராமா னுசன்செய்யும் அற்புதமே. 52
3945 அற்புதன் செம்மை இராமா னுசன், என்னை ஆளவந்த
கற்பகம் கற்றவர் காமுறு சீலன் கருதரிய
பற்பல் லுயிர்களும் பல்லுல கியாவும் பரனதென்னும்
நற்பொருள் தன்னை, இந் நானிலத் தேவந்து நாட்டினனே. 53
3946 நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன, நாரணனைக்
காட்டிய வேதம் களிப்புற் றது,தென் குருகைவள்ளல்
வாட்டமி லாவண் டமிழ்மறை வாழ்ந்தது மண்ணுலகில்
ஈட்டிய சீலத்து இராமா னுசன்றன் இயல்வுகண்டே. 54
3947 கண்டவர் சிந்தை கவரும் கடிபொழில் தென்னரங்கன்
தொண்டர் குலாவும் இராமா னுசனைத், தொகையிறந்த
பண்டரு வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்தருளும்
கொண்டலை மேவித் தொழும், குடி யாமெங்கள் கோக்குடியே. 55
3948 கோக்குல மன்னரை மூவெழு கால், ஒரு கூர்மழுவால்
போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் புவனமெங்கும்
ஆக்கிய கீர்த்தி இராமா னுசனை அடைந்தபின்என்
வாக்குரை யாது, என் மனம்நினை யாதினி மற்றொன்றையே. 56
3949 மற்றொரு பேறு மதியாது, அரங்கன் மலரடிக்காள்
உற்றவ ரேதனக் குற்றவ ராய்க்கொள்ளும் உத்தமனை
நற்றவர் போற்றும் இராமா னுசனையிந் நானிலத்தே
பெற்றனன் பெற்றபின் மற்றறி யேனொரு பேதைமையே. 57
3950 பேதையர் வேதப் பொருளிதென் னுன்னிப் பிரமம்நன்றென்
றோதிமற் றெல்லா உயிரும் அஃதென்று உயிர்கள்மெய்விட்
டாதிப் பரனொடொன் றாமென்று சொல்லுமவ் வல்லலெல்லாம்
வாதில்வென் றான், எம் இராமா னுசன்மெய்ம் மதிக்கடலே. 58
3951 கடலள வாய திசையெட்டி னுள்ளும் கலியிருளே
மிடைதரு காலத் திராமா னுசன், மிக்க நான்மறையின்
சுடரொளி யாலவ் விருளைத் துரத்தில னேல்உயிரை
உடையவன், நாரணன் என்றறி வாரில்லை உற்றுணர்ந்தே. 59
3952 உணர்ந்தமெய்ஞ் ஞானியர் யோகந் தொறும்,திரு வாய்மொழியின்
மணந்தரும் இன்னிசை மன்னும் இடந்தொறும் மாமலராள்
புணர்ந்தபொன் மார்பன் பொருந்தும் பதிதொறும் புக்குநிற்கும்
குணந்திகழ் கொண்டல் இராமானுசனெங் குலக்கொழுந்தே. 60
3953 கொழுந்துவிட் டோ டிப் படரும்வெங் கோள்வினை யால்,நிரயத்
தழுந்தியிட் டேனைவந் தாட்கொண்ட பின்னும், அருமுனிவர்
தொழுந்தவத் தோனெம் இராமா னுசன்தொல் புகழ்சுடர்மிக்
கெழுந்தது,அத் தால்நல் லதிசயங் கண்ட திருநிலமே. 61
3954 இருந்தேன் இருவினைப் பாசம் கழற்றிஇன் றியான்இறையும்
வருந்தேன் இனியெம் இராமா னுசன்,மன்னு மாமலர்த்தாள்
பொருந்தா நிலையுடைப் புன்மையி னோர்க்கொன்றும் நன்மைசெய்யாப்
பொருந்தே வரைப்பர வும், பெரி யோர்தம் கழல்பிடித்தே. 62
3955 பிடியைத் தொடரும் களிறென்ன யானுன் பிறங்கியசீர்
அடியைத் தொடரும் படிநல்க வேண்டும் அறுசமயச்
செடியைத் தொடரும் மருள்செறிந் தோர்சிதைந் தோடவந்திப்
படியைத் தொடரும் இராமா னுச மிக்க பண்டிதனே. 63
3956 பண்டரு மாறன் பசுந்தமிழ் ஆனந்தம் பாய்மதமாய்
விண்டிட எங்கள் இராமா னுசமுனி வேழம் மெய்ம்மை
கொண்டநல் வேதக் கொழுந்தண்ட மேந்திக் குவலயத்தே
மண்டிவந் தேன்றது வாதியர் காள். உங்கள் வாழ்வற்றதே. 64
3957 வாழ்வற் றதுதொல்லை வாதியர்க்கு என்றும் மறையவர்தம்
தாழ்வற் றதுதவம் தாரணி பெற்றது, தத்துவநூல்
கூழற் றதுகுற்ற மெல்லாம் பதித்த குணத்தினர்க்கந்
நாழற் றது,நம் இராமா னுசந்தந்த ஞானத்திலே. 65
3958 ஞானம் கனிந்த நலங்கொண்டு நாடொரும் நைபவர்க்கு
வானம் கொடுப்பது மாதவன் வல்வினை யேன்மனத்தில்
ஈனம் கடிந்த இராமா னுசன் தன்னை எய்தினர்க்கத்
தானம் கொடுப்பது தன்தக வென்னும் சரண்கொடுத்தே. 66
3959 சரணம் அடைந்த தருமனுக் காப்,பண்டு நூற்றுவரை
மரணம் அடைவித்த மாயவன் தன்னை வணங்கவைத்த
கரணம் இவையுமக் கன்றென்றி ராமா னுசனுயிர்கட்
கரணங் கமைத்தில னேல்,அர ணார்மற்றிவ் வாருயிர்க்கே? 67
3960 ஆரெனக் கின்று நிகர்ச்சொல்லின் மாயனன் றைவர்த்தெய்வத்
தேரினிற் செப்பிய கீதையின் செம்மைப் பொருள்தெரியப்
பாரினிற் சொன்ன இராமா னுசனைப் பணியும்நல்லோர்
சீரினிற் சென்று பணிந்தது, என் னாவியும் சிந்தையுமே. 68
3961 சிந்தையி னோடு கரணங்கள் யாவும் சிதைந்து,முன்னாள்
அந்தமுற் றாழ்ந்தது கண்டு,இவை என்றனக் கன்றருளால்
தந்த அரங்கனும் தன்சரண் தந்திலன் தானதுதந்து
எந்தை இராமா னுசன்வந் தெடுத்தனன் இன்றென்னையே. 69
3962 என்னையும் பார்த்தென் இயல்வையும் பார்த்து,எண்ணில் பல்குணத்த
உன்னையும் பார்க்கில் அருள்செய்வ தேநலம் அன்றியென்பால்
பின்னையும் பார்க்கில் நலமுள தே?உன் பெருங்கருணை
தன்னையென் பார்ப்பர் இராமா னுச உன்னைச் சார்ந்தவரே? 70
3963 சார்ந்ததென் சிந்தையுன் தாளிணைக் கீழ்,அன்பு தான்மிகவும்
கூர்ந்ததத் தாமரைத் தாள்களுக்கு உன்றன் குணங்களுக்கே
தீர்ந்ததென் செய்கைமுன் செய்வினை நீசெய் வினையதனால்
பேர்ந்தது வண்மை இராமா னுச எம் பெருந்தகையே. 71
3964 கைத்தனன் தீய சமயக் கலகரைக் காசினிக்கே
உய்த்தனன் தூய மறைநெறி தன்னை,என் றுன்னியுள்ளம்
நெய்த்தவன் போடிருந் தேத்தும் நிறைபுக ழோருடனே
வைத்தனன் என்னை இராமா னுசன்மிக்க வண்மைசெய்தே. 72
3965 வண்மையி னாலுந்தன் மாதக வாலும் மதிபுரையும்
தண்மையி னாலுமித் தாரணி யோர்கட்குத் தான்சரணாய்
உண்மைநன் ஞானம் உரைத்த இராமா னுசனையுன்னும்
திண்மையல் லாலெனக் கில்லை, மற் றோர்நிலை தேர்ந்திடிலே. 73
3966 தேரார் மறையின் திறமென்று மாயவன் தீயவரைக்
கூராழி கொண்டு குறைப்பது கொண்டல் அனையவண்மை
ஏரார் குணத்தெம் இராமா னுசனவ் வெழில்மறையில்
சேரா தவரைச் சிதைப்பது அப் போதொரு சிந்தைசெய்தே. 74
3967 செய்த்தலைச் சங்கம் செழுமுத்தம் ஈனும் திருவரங்கர்
கைத்தலத் தாழியும் சங்கமு மேந்தி,நங் கண்முகப்பே
மெய்த்தலைத் துன்னை விடேனென் றிருக்கிலும் நின்புகழே
மொய்த்தலைக் கும்வந்து இராமா னுச. என்னை முற்றுநின்றே. 75
3968 நின்றவண் கீர்த்தியும் நீள்புனலும்,நிறை வேங்கடப்பொற்
குன்றமும் வைகுந்த நாடும் குலவிய பாற்கடலும்
உன்றனக் கெத்தனை இன்பந் தரும்உன் இணைமலர்த்தாள்
என்றனக் கும்அது,இராமா னுச இவை யீந்தருளே. 76
3969 ஈந்தனன் ஈயாத இன்னருள் எண்ணில் மறைக்குறும்பைப்
பாய்ந்தனன் அம்மறைப் பல்பொரு ளால்,இப் படியனைத்தும்
ஏய்ந்தனன் கீர்த்தியி னாலென் வினைகளை வேர்பறியக்
காய்ந்தனன் வண்மை இராமா னுசற்கென் கருத்தினியே? 77
3970 கருத்திற் புகுந்துள்ளிற் கள்ளம் கழற்றிக் கருதரிய
வருத்தத்தி னால்மிக வஞ்சித்து நீயிந்த மண்ணகத்தே
திருத்தித் திருமகள் கேள்வனுக் காக்கிய பின்னென்னெஞ்சில்
பொருத்தப் படாது, எம் இராமா னுச மற்றோர் பொய்ப் பொருளே. 78
3971 பொய்யைச் சுரக்கும் பொருளைத் துறந்து,இந்தப் பூதலத்தே
மெய்மைப் புரக்கும் இராமா னுசன்நிற்க, வேறுநம்மை
உய்யக் கொளவல்ல தெய்வமிங் கியாதென் றுலர்ந்தவமே
ஐயப் படாநிற்பர் வையத்துள் ளோர்நல் லறிவிழந்தே. 79
3972 நல்லார் பரவும் இராமா னுசன்,திரு நாமம்நம்ப
வல்லார் திறத்தை மறவா தவர்கள் எவர்,,அவர்க்கே
எல்லா விடத்திலும் என்றுமெப் போதிலும் எத்தொழும்பும்
சொல்லால் மனத்தால் கருமத்தி னால்செய்வன் சோர்வின்றியே. 80
3973 சோர்வின்றி உன்றன் துணையடிக் கீழ்த்,தொண்டு பட்டவர்பால்
சார்வின்றி நின்ற எனக்கு,அரங் கன்செய்ய தாளிணைகள்
பேர்வின்றி யின்று பெறுத்தும் இராமா னுச. இனியுன்
சீரொன் றியகரு ணைக்கு, இல்லை மாறு தெரிவுறிலே. 81
3974 தெரிவுற்ற ஞாலம் செறியப் பெறாது,வெந் தீவினையால்
உருவற்ற ஞானத் துழல்கின்ற என்னை, ஒருபொழுதில்
பொருவற்ற கேள்விய னாக்கிநின் றானென்ன புண்ணீயனோ.
தெரிவுற்ற கீர்த்தி, இராமா னுசனென்னும் சீர்முகிலே. 82
3975 சீர்கொண்டு பேரறம் செய்து,நல்வீடு செறிதும் என்னும்
பார்கொண்ட மேன்மையர் கூட்டனல் லேன்,உன் பதயுகமாம்
எர்கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன் உன்னுடைய
கார்கொண்ட வண்மை இராமா னுச. இது கண்டுகொள்ளே. 83
3976 கண்டுகொண் டேனெம் இராமா னுசன்றன்னை காண்டலுமே
தொண்டுகொண் டேன்அவன் தொண்டர்பொற் றாளில்என் தொல்லை வெந்நோய்
விண்டுகொண் டேன்அவன் சீர்வெள்ள வாரியை வாய்மடுத்தின்
றுண்டுகொண் டேன், இன்னம் உற்றன ஓதில் உவப்பில்லையே. 84
3977 ஓதிய வேதத்தின் உட்பொரு ளய், அதன் உச்சிமிக்க
சோதியை நாதன் எனவெறி யாதுழல் கின்றதொண்டர்
பேதைமை தீர்த்த இராமா னுசனைத் தொழும்பெரியோர்
பாதமல் லாலென்றன் ஆருயிர்க்கு யாதொன்றும் பற்றில்லையை. 85
3978 பற்றா மனிசரைப் பற்றி,அப் பற்று விடாதவரே
உற்றா ரெனவுழன் றோடிநை யேனினி, ஒள்ளியநூல்
கற்றார் பரவும் இராமா னுசனைக் கருதுமுள்ளம்
பெற்றார் எவர், அவ ரெம்மைநின் றாளும் பெரியவரே. 86
3979 பெரியவர் பேசிலும் பேதையர் பேசிலும் தன்குணங்கட்
குரியசொல் என்றும் உடையவன் என்றென்று உணர்வில்மிக்கோர்
தெரியும்வண் கீர்த்தி இராமா னுசன்மறை தேர்ந்துலகில்
புரியுநன் ஞானம் பொருந்தா தவரைப் பொரும்கலியே. 87
3980 கலிமிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப்பெருமான்
ஒலிமிக்க பாடலை உண்டுதன் னுள்ளம் தடித்து,அதனால்
வலிமிக்க சீயம் இராமா னுசன்மறை வாதியராம்
புலிமிக்க தென்று, இப் புவனத்தில் வந்தமை போற்றுவனே. 88
3981 போற்றருஞ் சீலத் திராமா னுச,நின் புகழ்தெரிந்து
சாற்றுவ னேலது தாழ்வது தீரில்,உன் சீர்தனக்கோர்
ஏற்றமென் றேகொண் டிருக்கிலு மென்மனம் ஏத்தியன்றி
ஆற்றகில் லாது, இதற் கென்னினை வாயென்றிட் டஞ்சுவனே. 89
3982 நினையார் பிறவியை நீக்கும் பிரானை,இந் நீணிலத்தே
எனையாள வந்த இராமா னுசனை இருங்கவிகள்
புனையார் புனையும் பெரியவர் தாள்களில் பூந்தொடையல்
வனையார் பிறப்பில் வருந்துவர் மாந்தர் மருள்சுரந்தே. 90
3983 மருள்சுரந் தாகம வாதியர் கூறும்,அவப்பொருளாம்
இருள்சுரந் தெய்த்த உலகிருள் நீங்கத்,தன் ஈண்டியசீர்
அருள்சுரந் தெல்லா வுயிர்கட்கும் நாதன் அரங்கனென்னும்
பொருள்சுரந் தான், எம் இராமா னுசன்மிக்க புண்ணியனே. 91
3984 புண்ணிய நோன்பு புரிந்துமி லேன்,அடி போற்றிசெய்யும்
நுண்ணருங் கேள்வி நுவன்றுமி லேன்,செம்மை நூற்புலவர்க்
கெண்ணருங் கீர்த்தி இராமா னுச. இன்று நீபுகுந்தென்
கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நின்றவிக் காரணம் கட்டுரையே. 92
3985 கட்டப் பொருளை மறைப்பொரு ளென்று கயவர்சொல்லும்
பெட்டைக் கெடுக்கும் பிரனல்ல னே,என் பெருவினையைக்
கிட்டிக் கிழங்கொடு தன்னருள் என்னுமொள் வாளுருவி
வெட்டிக் கிளைந்த இராமா னுசனென்னும் மெய்த்தவனே. 93
3986 தவந்தரும் செல்வம் தகவும் தரும்,சலி யாப்பிறவிப்
பவந்தரும் தீவினை பாற்றித் தரும்,பரந் தாமமென்னும்
திவந்தரும் தீதில் இராமா னுசன்தன்னைச் சார்ந்தவர்கட்
குவந்தருந் தேன், அவன் சீரன்றி யானென்றும் உள்மகிழ்ந்தே. 94
3987 உண்ணின் றுயிர்களுக் குற்றன வேசெய்து அவர்க்குயவே
பண்ணும் பரனும் பரிவில னாம்படி பல்லுயிர்க்கும்
விண்ணின் தலைநின்று விடளிப் பானெம் இராமானுசன்
மண்ணின் தலத்துதித்து உய்மறை நாலும் வளர்த்தனனே. 95
3988 வளரும் பிணிகொண்ட வல்வினை யால்,மிக்க நல்வினையில்
கிளரும் துணிவு கிடைத்தறி யாது முடைத்தலையூன்
தளரும் அளவும் தரித்தும் விழுந்தும் தனிதிரிவேற்
குளரெம் இறைவர் இராமா னுசன்றன்னை உற்றவரே. 96
3989 தன்னையுற் றாட்செய்யும் தன்மையி னோர்,மன்னு தாமரைத்தாள்
தன்னையுற் றாட்செய்ய என்னையுற் றானின்று தன்தகவால்
தன்னையுற் றாரன்றித் தன்மையுற் றாரில்லை என்றறிந்து
தன்னையுற் றாரை இராமா னுசன்குணம் சாற்றிடுமே. 97
3990 இடுமே இனிய சுவர்க்கத்தில் இன்னம் நரகிலிட்டுச்
சுடுமே யவற்றைத் தொடர்தரு தொல்லைச் சுழல்பிறப்பில்
நடுமே யினிநம் இராமா னுசன்நம்மை நம்வசத்தே
விடுமே சரணமென் றால், மன மே நையல் மேவுதற்கே? 98
3991 தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ்சடையோன்
சொற்கற்ற சோம்பரும் சூனிய வாதரும் நான்மறையும்
நிற்கக் குறும்புசெய் நீசரும் மாண்டனர் நீணிலத்தே
பொற்கற் பகம், எம் இராமா னுசமுனி போந்தபின்னே. 99
3992 போந்ததென் னெஞ்சென்னும் பொன்வண்டு உனதடிப் போதில் ஒண்சீர்
ஆம்தெளி தேனுண் டமர்ந்திட வேண்டி,நின் பாலதுவே
ஈந்திட வேண்டும் இராமா னுச. இது அன்றியொன்றும்
மாந்தகில் லாது, இனி மற்றொன்று காட்டி மயக்கிடலே. 100
3993 மயக்கும் இருவினை வல்லியிற் பூண்டு மதிமயங்கித்
துயக்கும் பிறவியில் தோன்றிய என்னைத் துயரகற்றி
உயக்கொண்டு நல்கும் இராமா னுச. என்ற துன்னையுன்னி
நயக்கும் அவர்க்கி திழுக்கென்பர், நல்லவர் என்றும்நைந்தே. 101
3994 நையும் மனமும் குணங்களை உன்னி,என் நாவிருந்தெம்
ஐயன் இராமா னுசனென் றழைக்கும் அருவினையேன்
கையும் தொழும்கண் கருதிடுங் காணக் கடல்புடைசூழ்
வையம் இதனில், உன் வண்மையென் பாலென் வளர்ந்ததுவே? 102
3995 வளர்ந்தவெங் கோட மடங்கலொன் றாய்,அன்று வாளவுணன்
கிளர்ந்தபொன் னாகம் கிழித்தவன் கீர்த்திப் பயிரெழுந்து
விளைந்திடும் சிந்தை இராமா னுசனென்றன் மெய்வினைநோய்
களைந்துநன் ஞானம் அளித்தனன் கையிற் கனியென்னவே. 103
3996 கையிற் கனியென்னக் கண்ணனைக் காட்டித் தரிலும்,உன்றன்
மெய்யிற் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான்,நிரயத்
தொய்யில் கிடக்கிலும் சோதிவிண் சேரிலும் இவ்வருள்நீ
செய்யில் தரிப்பன் இராமா னுச என் செழுங்கொண்டலே. 104
3997 செழுந்திரைப் பாற்கடல் கண்டுயில் மாயன் திருவடிக்கீழ்
விழுந்திருப் பார்நெஞ்சில் மேவுநன் ஞானி,நல் வேதியர்கள்
தொழுந்திருப் பாதன் இராமா னுசனைத் தொழும்பெரியோர்
எழுந்திரைத் தாடும் இடமடி யேனுக் கிருப்பிடமே. 105
3998 இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ் சோலையென்னும்
பொருப்பிடம் மாயனுக் கென்பர்நல் லோர்,அவை தன்னொடுவந்
திருப்பிடம் மாயன் இராமா னுசன்மனத் தின்றவன்வந்
திருப்பிடம் என்றன் இதயத்துள் ளேதனக் கின்புறவே. 106
3999 இன்புற்ற சீலத் திராமா னுச, என்றும் எவ்விடத்தும்
என்புற்ற நோயுடல் தோறும் பிறந்திறந்து எண்ணரிய
துன்புற்று வீயினும் சொல்லுவ தொன்றுண்டுன் தொண்டர்கட்கே
அன்புற் றிருக்கும் படி, என்னை யாக்கியங் காட்படுத்தே. 107
4000 அங்கயல் பாய்வயல் தென்னரங் கன், அணி ஆகமன்னும்
பங்கய மாமலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தியெல்லாம்
தங்கிய தென்னத் தழைத்துநெஞ் சே நந் தலைமிசையே
பொங்கிய கீர்த்தி இராமா னுசனடிப் பூமன்னவே. 108
திருவரங்கத்தமுதனார் திருவடிகளே சரணம்.
எம்பெருமானார் திருவடிகளே சரணம்.
No comments:
Post a Comment