Monday, April 23, 2012
அட்சய திருதியையில்… ஆதிசங்கரர் அருளிய அற்புத ஸ்தோத்திரம்!
வீட்டில் சகல சுபிட்சங்களும் பெருகிடும்..!
ஜகத் குரு ஸ்ரீஆதிசங்கரரின் அவதார காலத்தை பரம புண்ணிய காலம் எனப் போற்று வார் மகாபெரியவா. ஏன் அப்படி? அவரே சொல்கிறார்… ”ஸ்ரீசங்கர ஜயந்தி புண்ய காலத்துக்கு சமமாக எதுவுமில்லை… இன்றைக்கும் சிவராத்திரி, ஸ்ரீராமநவமி, கோகுலாஷ்டமி இத்யாதியை நாம் கொண்டாடுகிறோம் என்றால், அதற்கு ஆசார்ய ஜயந்தி என்ற புண்ய காலம் ஏற்பட்டதுதான் காரணம். இந்த ஒரு ஜயந்தி ஏற்படாமல் போயிருந்தால் எந்த ஜயந்தியுமே இல்லாமல் போயிருக்கும் (அனைத்தையும் அவைதிகம் அடித்துக்கொண்டு போயிருக்கும்). ஜயந்திகளையெல்லாம் ரக்ஷித்துக்கொடுத்த ஜயந்தியாக இருப்பது ஸ்ரீசங்கர ஜயந்தியே…’ என்கிறார் (‘தெய்வத்தின் குரல்’ நூலில் இருந்து).
ஷண்மதங்களை ஸ்தாபித்து தர்மம் தழைத்தோங்க வழிசெய்த மகான் ஸ்ரீஆதிசங்கரர். கேரள மாநிலம் காலடியில் அந்த யுகபுருஷரின் அவதாரம் மட்டும் நிகழாமல் போயிருந்தால்… எத்தனையோ தலங்களில் ஸ்ரீசக்ர பிரதிஷ்டையும் ஜன ஆகர்ஷண பிரதிஷ்டையும் நிகழாமல் போயிருக்கும். ஸ்ரீசௌந்தர்யலஹரி, ஸ்ரீசுப்ரமணிய புஜங்கம் முதலான அரும்பெரும் பொக்கிஷங்களும் நமக்குக் கிடைக்காமல் போயிருக்கும். ஸ்ரீஆதிசங்கரர் காசியில் இருந்தபோது பிரம்ம சூத்ரம், உபநிடதங்கள், பகவத் கீதை, விஷ்ணு சகஸ்ரநாமம் முதலானவற்றுக்கு அற்புதமான பேருரை கண்டார். வேதவியாசரே வயோதிகராக வந்து, இவர் இயற்றிய பிரம்மசூத்ர பாஷ்யத்தைக் கேட்டு அங்கீகரித்தாராம். இதிலிருந்து ஜகத்குருவின் மகிமையை நாம் அறியலாம். சிறு வயதிலேயே அவரது சாந்நித்யம் வெளிப்பட்டது.குருகுலவாச காலத்தில் ஆச்சார்யாள் தாம் பாடம் படித்ததுடன், உலகுக்கெல்லாம் பாடமாக பிரம்மச்சரிய தர்மங்களை நன்றாக அனுஷ்டித்தார். குரு சுச்ருஷை பண்ணிக்கொண்டு, வீடு வீடாக பி¬க்ஷ ஏற்று வருவார். ஒருநாள்… ஒரு வீட்டின் முன் நின்று முறைப்படி, ‘பவதி பிக்ஷ£ம் தேஹி’ எனக் குரல் கொடுத்தார்.
வீட்டுக்குள் இருந்து பெண்ணொருத்தி வெளிப்பட்டாள். வாயிலில் சங்கரனைக் கண்டதும் பரவசம் பொங்கியது அவளுள். உள்ளே ஓடோடிச் சென்றாள். பாலகனுக்கு பி¬க்ஷயிட ஏதாவது உள்ளதா எனத் தேடிப் பார்த்தாள். விதியின் விளையாட்டு… மணி அரிசி இல்லை. சில கணங்கள் பரிதவித்துப் போனவள், முயற்சியைக் கைவிடாமல் என்னவாவது கிடைக்குமா என்று தேடிப் பார்த்தாள். ஒரு புரையில் நெல்லிக்கனி ஒன்று கிடைத்தது. அகமகிழ்ந்தாள் அந்த மங்கையர்குல திலகம். பயபக்தியுடன் எடுத்துவந்து, சங்கரனின் பி¬க்ஷ பாத்திரத்தில் இட்டாள். அவளின் வறுமையை புரிந்துகொண்ட பாலகன், திருமகளைத் தியானித்து அந்தப் பெண்மணியின் வீட்டில் வறுமை நீங்கி செல்வ வளம் செழிக்க வேண்டும் என ஸ்தோத்திரம் பாடி பிரார்த்தித்தான். அவன் பாடி முடித்ததும் பொன்மாரி பொழிந்தது!
இவ்வாறு ஆதிசங்கரரால் அருளப்பட்டதே கனகதாரா ஸ்தோத்திரம். அருள் பெருகும் அட்சய திருதியை நன்னாளில் இந்த ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்து, திருமகள் கடாட்சத்தால் நமது வாழ்விலும் வளம்பெருக வழி காண்போமா!
அங்கம் ஹரே: புளகபூஷணமாஸ்ரயந்தீ
ப்ருங்காங்கனேவ முகுளாபரணம் தமாலம்!
அங்கீக்ருதாகிலவிபூதிரபாங்கலீலா
மாங்கல்யதாஸ்து மம மங்களதேவதாயா:!!
ஸ்ரீவிஷ்ணுவின் மார்பு மகிழ்ச்சியால் மெய் சிலிர்க்கும்போது, பொன்னிற வண்டுகள் மொய்க்கும் முகுள மலர்களைப் போல் காட்சி தருகிறது. சர்வ மங்கலங்களுக்கும் நாயகியான ஸ்ரீலட்சுமி அவரின் மார்பில் வசிக்கிறாள். அவரின் ஆனந்தத்துக்கு வேறு காரணமும் வேண்டுமோ? அப்படிப்பட்ட திருமகளின் கடைக்கண் பார்வை என்மீது படவேண்டும். சகல மங்கலங்களும் அருளவேண்டும்.
முக்தா முஹுர்விதததீ வதனே முராரே:
ப்ரேமத்ரபாப்ரணிஹிதானி கதாகதானி!
மாலாத்ருஸோர்மதுகரீவ மஹோத்பலே யா
ஸா மே ஸ்ரியம் திஸது ஸாகரஸம்பவாயா:!!
பெரிய நீலோத்பல புஷ்பத்தில் பெண் வண்டா னது வெளியில் போய்க்கொண்டும், திரும்பி வந்து கொண்டும் இருப்பதுபோல், முராரியான ஸ்ரீநாராயணனின் முகத்தில் வெட்கத்தால் போய்க் கொண்டும், பிரியத்தால் திரும்புகின்றதுமான பாற் கடலின் புத்ரியான ஸ்ரீமகாலட்சுமியினுடைய கடைக்கண்களின் வரிசையானது எனக்கு சம்பத்தைக் கொடுக்கட்டும்.
ஆமீலிதாக்ஷமதிகம்ய முதா முகுந்தம்
ஆனந்தகந்தமநிமேஷமனங்கதந்தரம்!
ஆகேகரஸ்திதகநீநிகபக்ஷ்ம நேத்ரம்
பூத்யை பவேன்மம புஜங்கஸயாங்கனாயா:!!
ஆனந்தத்தினால் கொஞ்சம் கண்ணை மூடிக் கொண்டிருக்கும் ஸ்ரீமுகுந்தனை அடைந்து இமைக் கொட்டல் இல்லாததும், காமத்துக்கு வசமானதும், ஆனந்தத்துக்கு மூலமும், கொஞ்சம் புரட்டப்பட்ட கருவிழி, இமை ஆகியவற்றை உடையதுமான ஸ்ரீமகாலட்சுமியின் கண்ணானது க்ஷேமத்தைக் கொடுக்கட்டும்.
பாஹ்வந்தரே மதுஜித: ஸ்ரிதகௌஸ்துபே யா
ஹாராவலீவ ஹரிநீலமயீ விபாதி!
காமப்ரதா பகவதோபி கடாக்ஷமாலா
கல்யாணமாவஹது மே கமலாலயாயா:!!
எந்தக் கடைக்கண் வரிசையானது கௌஸ்துப மணியுடன் கூடிய ஸ்ரீநாராயணனுடைய மார்பில் இந்திர நீலக் கற்களால் கட்டப்பட்ட மாலைபோல் பிரகாசிக்கிறதோ, ஸ்ரீபகவானுக்கேகூட இஷ்டத்தை அளிக்கிறதோ, அப்படிப்பட்ட ஸ்ரீமகாலட்சுமி யினுடைய கடைக்கண் வரிசையானது எனக்குக் கல்யாணத்தைக் கொடுக்கட்டும்.
காலாம்புதாளிலலிதோரஸி கைடபாரே:
தாராதரே ஸ்புரதி யா தடிதங்கனேவ!
மாதுஸ்ஸமஸ்தஜகதாம் மஹனீய மூர்த்தி:
பத்ராணி மே திஸது பார்கவநந்தனாயா:!!
ஸ்ரீநாராயணனுடைய நீருண்ட மேகக் கூட்டம் போல் அழகிய மார்பில், நீருண்ட மேகத்தில் மின்னல் கொடி போல் எந்த உருவம் பிரகாசிக் கிறதோ, எல்லா உலகங் களுக்குத் தாயும், பார்கவ மகரிஷியின் புத்ரியுமான ஸ்ரீலட்சுமியினுடைய பூஜிக்கத் தகுந்த அந்த உருவமானது எனக்கு மங்களங்களைக் கொடுக்கட்டும்.
ப்ராப்தம் பதம் ப்ரதமத: கலு யத்ப்ரபாவாத்
மாங்கல்யபாஜி மதுமாதுனி மன்மதேன!
மய்யாபதேத்ததிஹ மந்தரமீக்ஷணார்த்தம்
மந்தாலஸம் ச மகராலயகன்யகாயா:!!
எந்தப் பார்வையின் பெருமையால் மங்களங்களுக்கு இருப்பிடமானவரும், மது என்ற அரக்கனை ஒழித்தவருமான மகாவிஷ்ணுவிடம் முதன்முதலாக மன்மதனுக்கு இடம் கிடைத்ததோ, அந்த சமுத்திர குமாரியான மகாலட்சுமியின் மந்தாலஸமான அரைப் பார்வை என்மேல் கொஞ்சம் விழட்டும்.
விஸ்வாமரேந்த்ரபதவிப்ரமதானதக்ஷம்
ஆனந்தஹேதுரதிகம் முரவித்விஷோபி!
ஈஷந்நிஷீதது மயி க்ஷணமீக்ஷணார்த்தம்
இந்தீவரோதரஸஹோதரமிந்திராயா:!!
சக்ரவர்த்தித் தன்மை, இந்திரப் பதவி இவற்றை வேடிக்கையாகக் கொடுக்கும் சாமர்த்தியம் உள்ளதும், முரனை வென்ற மகாவிஷ்ணுவுக்குங்கூட ஆனந்தப் பெருக்குக்குக் காரணமானதும், நீலோத்பல புஷ்பத்தின் உட்புறம் போன்றதுமான மகாலட்சுமியின் கடைக்கண்ணின் பாதியானது ஒரு க்ஷணம் என்மேல் விழட்டும்.
இஷ்டாவிஸிஷ்டமதயோபி யயா தயார்த்ர
த்ருஷ்ட்யா த்ரிவிஷ்டபபதம் ஸுலபம் லபந்தே!
த்ருஷ்டி: ப்ரஹ்ருஷ்டகமலோதரதீப்திரிஷ்டாம்
புஷ்டிம் க்ருஷீஷ்ட மம புஷ்கரவிஷ்டராயா:!!
அஸ்வமேதம் முதலிய யாகங்களினால் சுத்தி பண்ணப் படாத மனதை உடையவர்கள்கூட கருணையினால் நனைந்த எந்தப் பார்வையினால் ஸ்வர்க ஸ்தானத்தை சுலபமாக அடைகின்றனரோ, மலர்ந்த தாமரைப் புஷ்பத்தின் நடுப்பாகம் போன்ற ஸ்ரீமகாலட்சுமியின் அந்த பார்வையானது எனக்கு அபிஷ்ட ஸித்தியைக் கொடுக்கட்டும்.
தத்யாத் தயானுபவனோ த்ரவிணாம்புதாரா
மஸ்மிந்நகிஞ்சனவிஹங்கஸிஸெள விஷண்ணே!
துஷ்கர்மதர்மமபனீய சிராய தூரம்
நாராயணப்ரணயினீநயனாம்புவாஹ:!!
கருணையாகிற அனுகூலக் காற்றுடன் கூடிய ஸ்ரீமகாலட்சுமியினுடைய கண்களாகிற நீருண்ட மேகம், தாரித்ரியத்தால் கஷ்டப்படும் இந்த ஏழையான சாதகக் குஞ்சுவிடத்தில், வெகுநாளாக ஏற்பட்ட பாப கர்மமாகிற தாபத்தை வெகுதூரத்தில் போக்கி, பொருள் மழையைக் கொடுக்கட்டும்.
கீர்தேவதேதி கருடத்வஜஸுந்தரீதி
ஸாகம்பரீதி ஸஸிஸேகரவல்லபேதி!
ஸ்ருஷ்டிஸ்திதிப்ரளயகேளிஷூ ஸம்ஸ்திதா யா
தஸ்யை நமஸ்த்ரிபுவனை ககுரோஸ்தருண்யை!!
சரஸ்வதிதேவி என்றும், கருட வாஹனனுடைய மனைவி என்றும், சாகம்பரியாகிற பூமிதேவி என்றும், பார்வதி என்றும் ப்ரஸித்தி பெற்று, ஸ்ருஷ்டி, ரக்ஷணம், நாசம் என்ற விளையாட்டான காரியங்களில் அமர்ந்தவளும், மூவுலகுக்கும் குருவான நாராயணனுடைய யுவதியுமான அந்த மகாலட்சுமிக்கு நமஸ்காரம்.
ஸ்ருத்யை நமோஸ்து ஸுபகர்மபலப்ரஸுத்யை
ரத்யை நமோஸ்து ரமணீயகுணார்ணவாயை!
ஸக்த்யை நமோஸ்து ஸதபத்ரநிகேதனாயை
புஷ்ட்யை நமோஸ்து புருஷோத்தமவல்லபாயை!!
நல்ல கர்மாவின் பலத்தைக் கொடுக்கின்ற வேத ரூபிணியான தங்களுக்கு நமஸ்காரம். அழகிய குணங்க ளுக்கு இருப்பிடமான ரதிதேவியான தங்களுக்கு நமஸ் காரம். தாமரையில் அமர்ந்த சக்தி ரூபிணீயான தங்களுக்கு நமஸ்காரம். புருஷோத்தமருடைய மனைவியாகிற புஷ்டி தேவியாகிற தங்களுக்கு நமஸ்காரம்.
நமோஸ்து நாளீகநிபானனாயை
நமோஸ்து துக்தோததிஜன்மபூம்யை!
நமோஸ்து ஸோமாம்ருதஸோதராயை
நமோஸ்து நாராயணவல்லபாயை!!
தாமரை போன்ற முகமுள்ள தேவிக்கு நமஸ்காரம். பாற்கடலில் பிறந்த தேவிக்கு நமஸ்காரம். சந்திரன், அமிர்தம் இவைகளோடு தோன்றிய தேவிக்கு நமஸ்காரம். ஸ்ரீமந் நாராயணனுடைய ப்ரிய தேவிக்கு நமஸ்காரம்.
நமோஸ்து ஹேமாம்புஜபீடிகாயை
நமோஸ்து பூமண்டலநாயிகாயை!
நமோஸ்து தேவாதிதயாபராயை
நமோஸ்து ஸார்ங்காயுதவல்லபாயை!!
தங்கத் தாமரையை ஆசனமாக உடைய தேவிக்கு நமஸ்காரம். பூமண்டலத்துக்குத் தலைவியான தேவிக்கு நமஸ்காரம். தேவாதிகளுக்கு தயை செய் கின்ற தேவிக்கு நமஸ்காரம். சாரங்கபாணியாக உள்ள மகாவிஷ்ணுவின் ப்ரிய தேவிக்கு நமஸ்காரம்.
நமோஸ்து தேவ்யை ப்ருகுநந்தனாயை
நமோஸ்து விஷ்ணோருரஸி ஸ்திதாயை!
நமோஸ்து லக்ஷ்ம்யை கமலாலயாயை
நமோஸ்து தாமோதரவல்லபாயை!!
ப்ருகுரிஷியின் புத்ரியான தேவிக்கு நமஸ்காரம். மகாவிஷ்ணுவின் மார்பில் இருக்கும் தேவிக்கு நமஸ்காரம். தாமரையை இருப்பிடமாக உடைய லட்சுமிக்கு நமஸ்காரம். தாமோதரமூர்த்தியான மகாவிஷ்ணுவின் ப்ரிய பார்யைக்கு நமஸ்காரம்.
நமோஸ்து காந்த்யை கமலேக்ஷணாயை
நமோஸ்து பூத்யை புவனப்ரஸுத்யை!
நமோஸ்து தேவாதிபிரர்ச்சிதாயை
நமோஸ்து நந்தாத்மஜவல்லபாயை!!
ஜ்யோதி ஸ்வரூபிணியும், தாமரை போன்ற கண் களை உடையவளுமான தேவிக்கு நமஸ்காரம். ஐஸ்வர்ய ஸ்வரூபிணியாயும், உலகங்களைப் படைத்தவளாயும் உள்ள தேவிக்கு நமஸ்காரம். தேவர் முதலியவர்களால் பூஜிக்கப்பட்ட தேவிக்கு நமஸ்காரம். நந்தகுமாரனான கோபாலனின் ப்ரியநாயகியின் பொருட்டு நமஸ்காரம்.
ஸம்பத்கராணி ஸகலேந்த்ரியநந்தனானி
ஸாம்ராஜ்யதான விபவானி ஸரோருஹாக்ஷி!
த்வத்வந்தனானி துரிதாஹரணோத்யதானி
மாமேவ மாதரநிஸம் கலயந்து மான்யே!!
தாமரை போன்ற கண்களை உடையவளே, பூஜிக்கப் படுகின்றவளே, தாயே, சகல ஸம்பத்துக்களையும் கொடுக்கின்றவையும், எல்லா இந்திரியங்களுக்கும் ஆனந்தத்தைக் கொடுப்பவையும், சாம்ராஜ்யத்தைக் கொடுக்கும் திறமை வாய்ந்தவையும், பாபங்களைப் போக்குவதில் முயற்சி உள்ளவையுமான தங்களுக்குச் செய்யும் நமஸ்காரங்கள் எப்பொழுதுமே என்னை அடையட்டும்.
யத்கடாக்ஷஸமுபாஸனாவிதி:
ஸேவகஸ்ய ஸகலார்த்தஸம்பத:!
ஸந்தனோதி வசனாங்கமானஸை: த்வாம்
முராரிஹ்ருதயேஸ்வரீம் பஜே!!
எந்தத் தேவியின் கடைக்கண்களின் உபாஸனை அவைகளை ஸேவிப்பவருக்கு எல்லா ஸம்பத்துக் களையும் ஏராளமாகக் கொடுக்குமோ, அந்த முராரி யான மகாவிஷ்ணுவின் இருதயத்து நாயகியான உன்னை வாக்கு, காயம், மனஸ் இவைகளால் நமஸ்கரிக்கிறேன்.
ஸரஸிஜநிலயே ஸரோஜஹஸ்தே
தவளதமாம்ஸுககந்தமால்ய ஸோயே!
பகவதி ஹரிவல்லபே மனோக்ஞே
த்ரிபுவனபூதிகரி ப்ரஸீத மஹ்யம்!!
தாமரையை இருப்பிடமாக உடையவளே, தாமரை யைக் கையில் உடையவளே, அதிக வெண்மையான வஸ்திரம், சந்தனம், மாலை இவைகளால் பிரகாசிப் பவளே, மகிமை வாய்ந்தவளே, மகாவிஷ்ணுவின் ப்ரிய நாயகியே, மனதை ரமிக்கச் செய்பவளே, மூவுல கத்துக்கும் ஐஸ்வர்யத்தைக் கொடுப்பவளே, எனக்குக் கருணை செய்.
திக்கஸ்திபி: கனககும்பமுகாவஸ்ருஷ்ட
ஸ்வர்வாஹினீ விமலசாருஜலாப்லுதாங்கீம்!
ப்ராதர்நமாமி ஜகதாம் ஜனனீமஸேஷ
லோகாதிநாதக்ருஹிணீமம்ருதாப்திபுத்ரீம்!!
திக்கஜங்களினால் தங்கக் குடங்களினால் விடப்பட்ட தேவ கங்கையின் நிர்மலமானதும், பரிசுத்தமானதுமான ஜலத்தினால் நனைக்கப்பட்ட சரீரத்தை உடையவளும், உலகங்களுக்குத் தாயும், எல்லா உலகத்துக்கும் நாயகனான மகாவிஷ்ணுவின் மனைவியும், பாற்கடலின் புத்ரியுமான தங்களை காலையில் நமஸ்கரிக்கின்றேன்.
கமலே கமலாக்ஷவல்லபே த்வம்
கருணாபூரதரங்கிதைரபாங்கை:!
அவலோகய மாமகிஞ்சனானாம்
ப்ரதமம் பாத்ரமக்ருத்ரிமம் தயாயா:!!
தாமரை போன்ற கண்களை உடைய மகா விஷ்ணுவின் காதலியான லக்ஷ்மியே. நீ, கருணை வெள்ளத்தில் அலைமோதும் உன் கடைக்கண் பார்வைகளால், தரித்திரர்களில் முதல்வனாயும், உன்னுடைய தயைக்கு உண்மையான பாத்திர மாகவுமுள்ள என்னைப் பார்.
ஸ்துவந்தி யே ஸ்துதிபிரமீபிரன்வஹம்
த்ரயீமயீம் த்ரிபுவனமாதரம் ரமாம்!
குணாதிகா குருதரபாக்யபாகின:
பவந்தி தே புவி புதபாவிதாஸயா:!!
மூன்று வேதங்களின் ஸ்வரூபிணியும், மூவுலகத்துக்கு தாயுமான மகாலட்சுமியை இந்த ஸ்தோத்திரங்களினால் தினசரி எவர் துதிக்கின்றனரோ, அவர்கள் இவ்வுலகில் எல்லாக் குணங்களாலும் நிறைந்தவர்களாகவும், மிகுந்த பாக்கியசாலிகளாகவும், வித்வான்கள் கொண்டாடும் புத்தி சக்தி உள்ளவர்களாகவும் ஆகின்றனர்.
தொகுப்பு: எம்.எஸ்.வேல்
காலடியில் கனகதாரா யாகம்
ஆதிசங்கரர் பிறந்த திருவிடம் காலடி. எர்ணாகுளத்திலிருந்து திருச்சூர் செல்லும் வழியில் 40 கி.மீ. தொலைவிலுள்ள அங்கமாலியில் இறங்கி அங்கிருந்து 8 கி.மீ. சென்றால் காலடியை அடையலாம்.
இங்கே கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீஉன்னி கிருஷ்ணனின் திருமேனி ‘அஞ்சனா’ எனும் கல்லால் ஆனதாம். இதில், இரும்பு மற்றும் தாமிரத் தாதுக்கள் அதிகம் கலந்துள்ளதால் சக்தி அதிகம் என்பர். இந்தக் கோயிலில் அட்சய திருதியை அன்று பெரிய அளவில் யாகம் கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீஆதிசங்கரரின் ஸ்தோத்திரத்தால் மகாலட்சுமி மகிழ்ந்து பொன்மாரி பொழிவித்து அருள்செய்தது, ஓர் அட்சய திருதியை என்பது இங்குள்ளவர்களின் நம்பிக்கை. ஆக, இந்தக் கோயிலில் அட்சய திருதியையும், சங்கர ஜயந்தியும் விசேஷம். இதையட்டி, ஆதிசங்கரரின் 32 வயதைக் குறிக்கும் வகையில் 32 நம்பூதிரிகள் 10,008 முறை கனகதாரா ஸ்தோத்திரம் ஜபிக்கின்றனர். அட்சய திருதியை நாளில் மகாலட்சுமிக்கு தங்க நெல்லிக்கனி அபிஷேகமும் நடைபெறும். யாகத்தில் பங்கேற்பவர்களுக்கு பூஜை பிரசாதமும், கனகதாரா யந்திரமும் வழங்கப்படுகிறது. இவற்றை நம் வீட்டு பூஜையறையில் வைத்திருந்தால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
- எஸ்.ராமச்சந்திரன், சென்னை-4
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment